நடிகர் அஜித்தை பாதித்துள்ள 'தூக்கமின்மை' பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா? அறிகுறிகளும் தீர்வுகளும்

பட மூலாதாரம், X/Ajithkumar Racing
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
தூக்கம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் விவாதப்பொருளானது.
நடிகர் அஜித்குமார் தற்போது 'அஜித் குமார் ரேஸிங்' என்கிற பெயரில் கார் பந்தயப் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார்.
சமீபத்தில் இந்தியா டூடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தனக்கு தூக்கமின்மை பிரச்னை இருப்பதாகத் தெரிவித்தார்.
தன்னால் அதிகபட்சமாக 4 மணி நேரம் தான் தொடர்ந்து தூங்க முடிவதாக தெரிவித்த அஜித் குமார், "எனக்கு திரைப்படங்கள், வெப் சீரிஸ் பார்ப்பதற்கு நேரம் இல்லை. நான் விமானத்தில் தான் உறங்குகிறேன். எனக்கு தூக்கம் சார்ந்த பிரச்னை இருக்கிறது. தூங்குவது எனக்கு கடினமாக உள்ளது." என்றும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.
தூக்கம் வருவது எப்படி?
இதுகுறித்து ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநரான குழந்தைசாமி பேசுகையில்" இது இன்சோம்னியா (Insomnia) என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதானது, இதனை சிகிச்சைகள் மூலம் சரி செய்துவிட முடியும். ஆனால் தூக்கமின்மை என்பது பெரும்பாலும் நமது செயல்களினால் உருவாவதே." என்றார்.
தூக்கப் பற்றாக்குறை அல்லது தூக்கமின்மை என்பது நீண்ட கால நோக்கில் ஆயுட்காலத்தை பாதிக்கும் என்கிறார் குழந்தைசாமி.
நம் உடல் சார்ந்த பல விஷயங்களை உயிரியல் கடிகாரம்தான் (circadian rhythm) தீர்மானிக்கிறது என்கிறார் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் புல்மனாலஜியின் இயக்குநரும் மூத்த நுரையீரல் நோய் மருத்துவருமான கௌசிக் முத்துராஜா.
இதுகுறித்து விவரித்த அவர், "நம் கண்கள் வழியாக ஒளி மூளைக்குச் செல்கிறது. வெளிச்சமாக இருந்தால் நமது மூளை இது விழித்திருக்க வேண்டிய நேரம் என உணர்ந்து கொள்ளும். அதேவேளையில் இருட்டாக இருந்தால் இது தூங்குவதற்கான நேரம் என உணர்ந்து கொண்டு மெலடோனின் என்கிற ஹார்மோனை சுரக்கச் செய்யும். இந்த ஹார்மோன் தான் தூக்கத்தை ஏற்படுத்துகிறது." என்றார்.
"59% இந்தியர்களுக்கு தூக்கமின்மை பிரச்னை"

பட மூலாதாரம், Getty Images
2025-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 59% இந்தியர்களுக்கு 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தடையில்லாத, நல்ல தூக்கம் கிடைப்பதாகத் தெரியவந்துள்ளது. லோகல்சர்கிள்ஸ் என்கிற நிறுவனம் இந்தியா முழுவதும் 348 மாவட்டங்களில் சுமார் 43,000 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
தூக்கப் பற்றாக்குறையை போக்க பவர் நேப்பிங் (குறுகிய நேர தூக்கம்), வார இறுதி நாட்களில் காலை தாமதமாக எழுந்திருப்பது, அல்லது மதியம் தூங்குவது போன்றவற்றை பலரும் கையாள்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
குறைவான தூக்கத்தால் பாதிக்கப்பட்ட 38% இந்தியர்கள் விடுமுறை நாட்கள் அல்லது வார இறுதி நாட்களில் அதனை சரி செய்து கொள்ள முடிவதில்லை எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஒரு வயது வந்த நபர் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். அதில் 6 மணி நேரமாவது இடையூறு இல்லாத தூக்கம் இருக்க வேண்டும். அது தான் ஆரோக்கியமானது. மனிதன் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்தில் செலவிட வேண்டும். அது ஒரே நாளில் தான் இருக்க வேண்டும். தவணை முறையில் வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில் கூடுதலாக தூங்குவது என்பது இதற்கு தீர்வாகாது." என்கிறார் குழந்தைசாமி.
தூக்கமின்மைக்கான அறிகுறிகள்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அரசின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.ஹெச்) பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவை இருந்தால் தூக்கப் பற்றாக்குறை என்று வகைப்படுத்துகிறது.
அவை
- போதிய தூக்கம் கிடைக்காமல் இருப்பது
- தவறான நேரத்தில் தூங்கச் செல்வது
- நன்றாக தூங்காதிருப்பது அல்லது உடலுக்குத் தேவையான தூக்கத்தின் அனைத்து கட்டங்களையும் அடையாமல் இருப்பது
- ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் தூக்கம் வருவது
- போதிய நேரம் கிடைத்தாலும் ஆழ்ந்த தூக்கம் வராதிருப்பபது
தூக்கமின்மையின் பாதிப்பு குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்கள் இடையே வேறுபடுகிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்படும் குழந்தைகள் கவனம் செலுத்துவதில் பிரச்னைகளை எதிர்கொள்வார்கள் என என்.ஐ.ஹெச். கூறுகிறது.
"தூக்கம் என்பது நான்கு கட்டங்களாக நடக்கும். தூக்கத்தின் இந்த ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்ல முடியாமல் நீண்ட காலமாக இருப்பது இதய நோய், எடை அதிகரிப்பு, டைப்-2 நீரிழிவு போன்ற பாதிப்புகளுடன் தொடர்புடையது," என லோகல் சர்க்கிள்ஸ் ஆய்வு கூறுகிறது.
தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள்
என்.ஐ.ஹெச்-ன்படி தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?
- வயது
- தூங்கும் முறை
- வளர்சிதை மாற்றம்
- இரவு உணவு எடுத்துக் கொள்ளும் நேரம்
- படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக திரை(கணினி, செல்போன்) பயன்பாடு
- மது அருந்துவது
தூக்கமின்மையுடன் தொடர்புடைய நோய்களையும் என்.ஐ.ஹெச் பட்டியலிட்டுள்ளது. அவை
- இதய நோய்
- சிறுநீரக நோய்
- உயர் ரத்த அழுத்தம்
- நீரிழிவு நோய்
- பக்கவாதம்
- உடல் பருமன்
- மன அழுத்தம்
உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
உலக சுகாதார நிறுவனம் கடந்த 2012-ஆம் ஆண்டு தூக்கம் சார்ந்த சிக்கல்களை வளர்ந்து வரும் பொது சுகாதார பிரச்னை என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 50 வயதுக்கு அதிகமான 43,935 பேர் கலந்து கொண்டனர். அதில் 16.6% பேர் தீவிரமான இரவு நேர தூக்கமின்மை பிரச்னைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
அதில், பெண்கள் மற்றும் முதியவர்களிடையே தூக்கமின்மை பிரச்னை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வயது வந்தவர்கள் அதிக அளவில் தூக்கமின்மை பிரச்னைகளை எதிர்கொள்வதாக அந்த ஆய்வு கூறுகிறது.
உடல் செயல்பாடு குறைவது, மன அழுத்தம் மற்றும் கவலை உணர்வு வலுவாக இருப்பதும் தூக்கமின்மைக்கு காரணிகளாகக் கூறப்பட்டுள்ளது.
தூக்கமின்மை யாரை, எவ்வாறு பாதிக்கும்?

பட மூலாதாரம், Getty Images
பெரும்பாலும் ஓட்டுநர்கள் அல்லது பயணத்தில் இருப்பவர்களுக்குத் தான் இந்த பாதிப்பு அதிகம் என்று குறிப்பிடுகிறார் குழந்தைசாமி.
"தூக்கம் இல்லையென்றால் மூளை சிறிது நேரம் தானாக செயலிழந்துவிடும். அது சில வினாடிகள் தான் என்றாலும் அதன் விளைவு மோசமானதாக இருக்கும். இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்கும் தூக்கமின்மை ஒரு முதன்மை காரணியாக உள்ளது." என்று அவர் தெரிவித்தார்.
வெவ்வேறு வயதினரை தூக்கமின்மை எவ்வாறு பாதிக்கிறது என்பது மருத்துவர் கௌசிக் முத்துராஜா பட்டியலிடுகிறார்.
குழந்தைகளிடையே ஏற்படும் பாதிப்புகள்?
- கற்றல் குறைபாடு
- ஞாபக மறதி
- கல்வியில் ஈடுபாடு குறைவது
- நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது
- வளர்ச்சி ஹார்மோன் பாதிப்பு
நடுத்தர வயதினரிடையே ஏற்படும் பாதிப்புகள்?
- மன அழுத்தம்
- மனச்சோர்வு
- ரத்த அழுத்தம்
- சிந்திக்கும் திறன் குறைவது
- வாகனம் ஓட்டுவதை சிரமமாக்குவது
முதியவர்களிடையே ஏற்படும் பாதிப்புகள்?
- ஞாபக மறதி அதிகரிக்கும்
- இரவு நேர தடுமாற்றங்கள் ஏற்படும்
- இதயம் மற்றும் நரம்பியல் நோய் தாக்கும் சாத்தியம் அதிகரிக்கும்
தூக்கமின்மை பிரச்னைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
புகைப் பழக்கத்தை கைவிடுவது, மாலை 5 மணிக்கு மேல் தேநீர், காபி பருகுவதை தவிர்ப்பது மற்றும் தூங்குவதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்கு முன்பாவது கணினி/செல்போன் திரைகளைப் பார்ப்பதை தவிர்ப்பது போன்ற பரிந்துரைகளை முன்வைக்கிறார் மருத்துவர் குழந்தைசாமி.
தூக்க ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான சில வழிகளை முன்வைக்கிறார் கௌசிக் முத்துராஜா.
- தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, எழ வேண்டும், வார இறுதி நாட்களிலும் அதை கடைபிடிக்க வேண்டும்
- தூக்கம் வந்தால் மட்டுமே படுக்கைக்குச் செல்ல வேண்டும்
- தூங்க செல்லும் முன்பாக 10 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்
- காலை, மதிய வேளைகளில் தூங்கக்கூடாது
- 20 - 30 நிமிடங்கள் பவர் நாப் (குறுகிய நேர தூக்கம்) எடுக்கலாம்.
- உடற்பயிற்சி தூக்கத்திற்கு உதவும். ஆனால் தூங்குவதற்கு 2, 3 மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி கூடாது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












