'மோக்கா' புயல்: வங்கதேசத்தை தாக்கும் சக்தி வாய்ந்த புயலால் பல லட்சம் ரோஹிஞ்சா அகதிகள் நடுக்கம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஜினி வைத்தியநாதன்
- பதவி, பிபிசி நியூஸ்
- இருந்து, காக்ஸ் பஜார், வங்கதேசம்
மோக்கா புயல் அதிதீவிர புயலாக மாறி இன்று நண்பகலில் வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையைக் கடந்தது.
இன்று நண்பகல் மோக்கா கரையைக் கடந்த போது, அப்போது வங்கதேசம் - மியான்மர் இடையே உள்ள கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
மோக்கா புயல் அச்சுறுத்தலால் தென்கிழக்கு வங்கதேசத்தில் சுமார் 5 லட்சம் பேர் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.
மோக்கா புயல் கரையைக் கடக்கும் போது 170 கி.மீ. வேகத்தல் பலத்த காற்று வீசும், வங்கக்கடலில் 12 அடி உயரம் வரை அலை எழும்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்ததைவிட அதிகமாக, தென்னை மரங்கள் வேரோடு பிடுங்கும் அளவிற்கு 210 கிமீ வேகத்திற்கு காற்று வீசியது. மியான்மரின் சிட்வே பகுதியில் ஒரு செல்போன் கோபுரம் காற்றில் முறிந்து விழுந்தது.
புயல் காரணமாக மின்சாரம் மற்றும் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களிடம் இருந்து உதவி கோரி தங்களுக்கு நிறைய அழைப்புகள் வருவதாக சிட்வேயில் உள்ள மீட்புக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான காக்ஸ் பஜார் முகாமில், தற்காலிக வீடுகளில் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
முகாமில் ஏற்கெனவே பலத்த மழை பெய்ததால், சிவப்பு நிற எச்சரிக்கைக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன.
வங்கதேசம் கடந்த இருபது ஆண்டுகளில் கண்ட மிக மோசமான புயலாக மோக்கா இருக்கக் கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்திருந்தனர்.
வங்கதேசம் - மியான்மர் கடற்கரையில் புயலின் தாக்கம் வலுவாக இருப்பதால் அருகில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. தாழ்வான இடங்களில் வசித்த மக்களுக்காக சுமார் 1,500 தங்குமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
"நாங்கள் எத்தகைய தாக்கத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஒரு உயிர் கூட பறிபோக விட மாட்டோம்" என்று பிபிசியிடம் பேசிய காக்ஸ் பஜார் கூடுதல் உதவி ஆணையர் விபூஷன் காந்தி தாஸ் கூறினார்.
புயல் எதிரொலியாக உருவாக்கப்பட்டுள்ள தங்குமிடங்களுக்கு நேற்றைய நாள் முழுவதும் மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். காக்ஸ் பஜாரில் உள்ள பள்ளியின் வகுப்பறைகளில் நூற்றுக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சிலர் தங்களது உடைமைகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி எடுத்து வந்தனர். சிலர் தங்களது வாழ்வாதாரமான கால்நடைகள் மற்றும் கோழிகளையும் உடன் கொண்டு வந்தனர்.
17 வயது ஜன்னத் என்ற பெண் பிறந்து இரண்டு மாதமேயான குழந்தையுடன் வகுப்பறை மேஜை ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளார். சில ஆடைகளைத் தவிர வேறு எதையும் அவர் எடுத்து வரவில்லை. ஜன்னத்தை முதலில் அனுப்பிவிட்ட அவரது கணவர், தங்களது கடற்கரை வீட்டில் பொருட்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து பின்னரே முகாமுக்கு வந்து சேர்ந்தார்.

கடந்த ஆண்டு தாக்கிய சிட்ரங் புயலால் தங்களது வீடு சேதமடைந்ததாக கூறிய ஜன்னத், தற்போதைய புயல் பெரும் அச்சத்தை தருவதாக தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய அவர், "அடுத்து என்ன நடக்கும் என்று கவலையாக இருக்கிறது. எனது வீடு மீண்டும் மூழ்கிவிடுமோ என்று பயமாக இருக்கிறது" என்று கூறினார்.
மியான்மரில் இருந்து வெளியேறி இங்கு வந்து தங்கியுள்ள சுமார் 10 லட்சம் ரோஹிஞ்சா அகதிகளும் இன்னும் ஆபத்தின் பிடியில்தான் உள்ளனர். அவர்கள் தங்கியுள்ள பகுதிகளை பாதுகாக்க தங்களால் ஆன அனைத்தையும் செய்து வருவதாக ஐ.நா. கூறுகிறது.
முகாம்களை விட்டு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வெளியே செல்ல வங்கதேச அரசு அனுமதிப்பதில்லை. ஆகவே, முகாம்களை புயல் தாக்கினால் என்ன நடக்குமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
40 வயதான முகமது ரஃபீக்கும் அவரது குடும்பத்தினரும் அகதிகளுக்காக கட்டப்பட்ட சிறிய மூங்கில் வீடுகளில் வசிக்கின்றனர்.
தார்பாலினை கூரையாகக் கொண்ட இந்த வீடுகள், புயலின் போது பெய்யும் கனமழைக்கும், வீசும் பலத்த காற்றுக்கும் எதிராக தாக்குப்பிடிப்பது கடினம்.

"எங்களால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான். கடவுளே எங்களை காப்பாற்றுங்கள் என்பதே அது. பாதுகாப்பு தேடி எங்களால் எங்கும் செல்ல முடியாது. உதவி செய்யவும் யாரும் இல்லை." என்கிறார் முகமது ரஃபீக்.
அவர் மேலும் கூறுகையில், "இதற்கு முன்னரும் பல கஷ்டங்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். கடந்த காலத்திலும் எங்களது வீடுகள் அழிந்து போயுள்ளன. அதேபோன்று இந்த முறை நடக்காது என்று நம்புகிறோம்" என்று குறிப்பிட்டார்.
புயலால் பெய்யும் கனமழை நிலச்சரிவுக்கும் வழிவகுக்கும். இது மலைப்பாங்கான இடங்களில் உள்ள முகாம்களுக்கு ஆபத்தானது. ஏனெனில், அங்கே நிலச்சரிவு என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
அகதிகள் மற்றும் முகாம்களை மேற்பார்வையிடும் வங்கதேச அரசு அலுவலகத்தைச் சேர்ந்த ஷம்சுல் டௌஸா, "புயலை எதிர்கொள்ளும் வகையில் முகாம்களை முடிந்த அளவுக்கு தயார்படுத்த என்.ஜி.ஓ.க்களுடன் இணைந்து செயல்பட்டோம்" என்று பிபிசியிடம் கூறினார்.
அகதிகளை முகாம்களை விட்டு வெளியே அழைத்துச் செல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல.
"பல லட்சம் அகதிகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு அழைத்துச் செல்வது மிகவும் கடினமான காரியம். அதனை செயல்படுத்துவது கடினம். நாம் நடைமுறையில் சாத்தியமானதை சிந்திக்க வேண்டும். உயிர்களைக் காப்பதே எங்களது நோக்கம். புயலுக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் நாங்கள் கணக்கில் கொண்டுள்ளோம். அங்கே பலத்த மழையும், அதனால் பெருவெள்ளமும், நிலச்சரிவும் ஏற்படலாம். அதனால், முகாம்களுக்கு ஆபத்து வரலாம்" என்று அவர் கூறினார்.
மோக்கா புயலால் இந்தியாவிலும் பாதிப்பு
மோக்கா புயல் தென்கிழக்கு வங்கதேசம், மியான்மரை நோக்கிச் செல்வதாக கணிக்கப்பட்டாலும் கூட அதன் தாக்கம் இந்தியாவில் இல்லாமல் இல்லை. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மிசோரம், மணிப்பூர், அசாம் மாநிலங்களில் கனமழையும் பலத்த காற்றும் இருக்கும். மற்ற இடங்களில் உள்ள காற்றில் இருந்து ஈரப்பதத்தை மோக்கா புயல் உறிஞ்சிவிடும் என்பதால் இந்தியாவின் மற்ற பிராந்தியங்கள் வெப்ப அலையில் உழல நேரிடும்.
மிக தீவிர புயலாக மோக்கா புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது மேலும் வலுப்பெற்று சூப்பர் புயலாக உருவாகவும் வாய்ப்புள்ளதாக சில வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போதைய நிலையில், மோக்கா புயலால் 210 முதல் 220 கி,மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. சில நேரம் 240 கி.மீ. வேகத்தையும் தொடுகிறது. ஆனால், காற்றின் வேகம் 221 கி.மீ. வேகத்தை தாண்டி நிலையாக இருக்குமானால் அது சூப்பர் புயலாக உருவெடுக்கும்.
புயல்கள் அடிக்கடி எழுவது காலநிலை மாற்றத்தின் தாக்கமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், கடலின் மேற்பரப்பில் வெப்பநிலை உயரும் போது, அதற்கு மேலே உள்ள காற்றை அது சூடாக்கும்; புயல்கள், சூறாவளிகளை உருவாகத் தேவையான கூடுதல் ஆற்றல் அங்கே உருவாகும் என்பது நமக்குத் தெரியும்.
அதன் விளைவாக, அந்த புயல்களும், சூறாவளிகளும் அதீத மழைப்பொழிவை உண்டாக்குகின்றன.
தொழிற்புரட்சிக்குப் பிறகு பூமியின் வெப்பநிலை ஏற்கனவே 1.1. செல்சியஸ் அளவுக்கு அதிகரித்து விட்டது. கார்பன் உமிழ்வை குறைக்க அனைத்து நாடுகளின் அரசுகளும் நடவடிக்கை எடுக்கத் தவறினால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












