இலங்கை உள்நாட்டுப் போரில் பார்வையை இழந்த தமிழீழ முன்னாள் போராளி தற்போது எப்படி இருக்கிறார்?

இலங்கை உள்நாட்டு போர்
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெறும் சில புகைப்படங்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, 14 வருடங்கள் பூர்த்தியாகினாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் எதிர்கால சந்ததி வரை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறு எதிர்கால சந்ததிக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கடல் கரும்புலி போராளியின் செய்தியே இது.

தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முன்னெடுத்திருந்தது. அந்த அமைப்பில் இணைந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான போராளிகளில் கந்தசாமி சேயோனும் ஒருவராவார்.

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட இவருக்கு, தற்போது 36 வயது. 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கந்தசாமி சேயோன் இணைந்துகொண்டுள்ளார்.

வவுனியாவிலிருந்து, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள வன்னி பிரதேசத்தில் உறவினரை பார்க்கச் சென்ற வேளையில், விடுதலைப் புலிகளினால் சேயோன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்தமையினாலேயே, சேயோன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தனது உறவு முறை சகோதரி ஒருவர், விடுதலைப் போராட்டத்தின்போது வீர சாவடைந்ததை, விசாரணைகளின்போது சேயோன், விடுதலைப் புலிகளிடம் தெரிவித்துள்ளார்.

''அவளை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தபோது, அவர்கள் என்னிடம் கேட்டார்கள், உங்கள் அக்கா இயக்கத்திற்கு வந்து வீர மரணம் அடைந்திருக்கின்றார். உங்களுக்கு எண்ணம் இல்லையா? உங்களுடைய வீட்டில் யாரும் பங்களிப்பு செய்யவில்லை," என விடுதலைப் புலி உறுப்பினர்கள், சேயோனிடம் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலி உறுப்பினர்களின் விசாரணைகளின்போது, சேயோன், விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

அன்று முதல் தனது விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார் சேயோன்.

விடுதலைப் புலிகள் கட்டாயப்படுத்தி, உங்களை இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்களா என பிபிசி தமிழ், சேயோனிடம் வினவியது.

''இல்லை. கட்டாய ஆட்சேர்ப்பானது 2008ஆம் ஆண்டு முதல்தான் ஆரம்பித்தது" என அவர் பதிலளித்தார்.

இலங்கை உள்நாட்டு போர்
படக்குறிப்பு, சேயோன்

விடுதலைப் புலிகளுடன் இணைந்தது முதல் கரும்புலி வரை

2006ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் இணைந்ததை அடுத்து, தனக்கு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டதாக சேயோன் கூறுகின்றார்.

அதன்பின்னர் இரண்டாம் கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும், கடல் மற்றும் தரை ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த பயிற்சிகள் முடிவடைந்ததை அடுத்து, படையணிக்கு தான் அனுப்பப்பட்டதாக கூறிய அவர், தனக்கு கரும்புலியில் இணைவதற்கு விருப்பம் என விடுதலைப் புலிகளிடம் கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

''என்னை படையணிக்கு விடும்போது நான், இரண்டாம் கட்ட பயிற்சி முகாமின் போது கடிதம் கொடுத்தேன். கரும்புலியில் இணைய போகின்றேன் என கடிதம் கொடுத்தேன். எனக்கு ஒரு வாரத்தின் பின்னர் அனுமதி கிடைத்தது. அதன் பின்னர் கடல் கரும்புலியில் இணைந்தேன். புகழரசன் செவ்வானம் படையணியில் இணைத்தார்கள். யுத்தம் முடியும் வரை கடல் கரும்புலியாகவே எனது கடமை இருந்தது" என கந்தசாமி சேயோன் தெரிவிக்கின்றார்.

இலங்கை ராணுவத்துடன் நடுக்கடலில் நடந்த 86 சண்டைகளில், சேயோன் நேரடியாக மோதியுள்ளார்.

''தரையில் சண்டை பிடித்தால், புத்து, வீழ்ந்த மரங்கள், குழிகள் போன்றவற்றை பாதுகாப்பு அரணாக பயன்படுத்த முடியும். ஆனால் கடலில் முப்படைகளும் தாக்கும். விமானப்படை, கடற்படை, தரைப்படை என முப்படைகளும் தாக்கும் இடம் தான் கடல்.

கடலில் யுத்தம் நடந்துக்கொண்டிருக்கும் போதே, குண்டு வீசும் விமானங்கள் வரும். உலங்கு வானூர்தி தாக்குதல் இருக்கின்றது. கடலில் கடற்படையின் தாக்குதல் இருக்கின்றது. தரையிலிருந்து பீரங்கி தாக்குதல் இடம்பெறும். அவை மூன்றுக்கும் முகம் கொடுத்துதான் நாங்கள் சண்டை பிடிக்க வேண்டும்," என்றார் கந்தசாமி சேயோன்.

இலங்கை உள்நாட்டு போர்

முல்லைத்தீவிலிருந்தே விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் செயற்பட்டுள்ளது. முல்லைத்தீவிலேயே விடுதலைப் புலிகளின் படகுகளின் தளம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் போன்ற கடலில் படகுகளை இறக்கி, அவற்றை செலுத்திக் கொண்டு பருத்தித்துறை வரை சென்றே மோதல்கள் இடம்பெறும் என அவர் குறிப்பிடுகின்றார்.

தங்களின் விருப்பத்திற்கு அமைய சண்டையிட முடியாது எனவும், கட்டளைகளுக்கு கட்டுப்பட்டே சண்டைகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

கண் பார்வையை இழந்த சேயோன்

வவுனியாவில் தற்போது வாழ்ந்து வரும் கந்தசாமி சேயோன், யுத்தம் காரணமாக தனது இரண்டு கண்களையும் இழந்துள்ளார்.

இலங்கை ராணுவத்துடனான யுத்தம், சேயோனை, இருள் சூழ்ந்த ஒரு வாழ்க்கைக்கு தள்ளியுள்ளது. இது அவரை மாத்திரமன்றி, அவர் சார்ந்த மனைவி மற்றும் குழந்தைகளையும் பாதித்து, எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னரே சேயோன், கார்த்திகாவுடன் திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்டுள்ளார்.

சேயோன், அந்த சந்தர்ப்பத்தில் தனது ஒரு கண் பார்வையை இழந்த நிலையில், வவுனியாவில் கடமையாற்றிய கார்த்திகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இலங்கை உள்நாட்டு போர்

அதன்பின்னரான காலத்தில் சேயோன், தனது இரண்டாவது கண்ணின் பார்வையையும் இயல்பாகவே இழந்துள்ளார்.

யுத்தம் ஏற்படுத்திய தாக்கமே, அவரது இரண்டாவது கண் பார்வை இழக்கப்படுவதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குண்டுத் தாக்குதலின் பின்னர், அதன் துகில்கள் இன்றும் கண்ணிற்குள் உள்ளதாக மருத்துவர்களினால் கூறப்பட்டுள்ளது.

சேயோன் எப்படி ராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்கானார்?

2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி சேயோன், ராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

தங்களுடன் சண்டைக்கு சென்ற படகொன்று காணாமல் போன நிலையில், அந்த படகை தேடுமாறு தமக்கு கட்டளையொன்று பிறப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

''தேடுவதற்காக சென்ற போது, ` 35 மீட்டர் தூரத்தில் இலக்கொன்று தெரிவிக்கின்றது. அது எங்களுடைய படகு போல இருக்கின்றது. பார்ப்போம். சிக்னலை போட்டு பார்த்து விட்டு, அருகில் செல்வோம்` என அண்ணன் ஒருவரிடத்தில் சொன்னேன். அதற்கு அவர், "இல்லை. அது எங்களுடைய படகு தான். நேரடியாக போவோம் என சொல்லி, அங்கு சென்றார். ஆனால் அது கடற்படையின் படகு. கடற்படை எம்மை நோக்கி சுட ஆரம்பித்தது. ஒவ்வொரு படகிலும் ரேடார் இருக்கும். ஸ்கேனல் இருக்கும். ஸ்கேனலின் பைப்பில் பட்டு வெடித்தது. அது வெடித்த இடத்தில் நான் காயப்பட்டேன். வலது கை இயலாது. இடது கையால் இழுத்து இழுத்து ஊர்ந்து போய், மற்ற கரையில் இருந்து விட்டேன். மற்றவர்கள் கடற்படை படகை மூழ்கடித்து விட்டு, என்னையும் அழைத்து கொண்டு கரைக்கு வந்து விட்டார்கள். அந்த சண்டை வெற்றி என்றவுடனும், மேலதிக படகுகள் வராமையினாலும் கரைக்கு வந்தார்கள். என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்."

இலங்கை உள்நாட்டு போர்

வலது கண் பார்வையை இழந்த சேயோன், பின்னரான காலத்தில் இடது கண் பார்வையையும் படிப்படியாக இழந்துள்ளார்.

மோதலின் போது இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தினால் தனது கண்ணுக்குள் சில துகில்கள் காணப்படுகின்றமையும், ஒரு கண்ணில் ஏற்பட்ட ரத்த அழுத்தமும் பார்வை இழக்கப்படுவதற்கான காரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.

அதேவேளை, தனது ஒரு கால் சதையில் மாத்திரமே செயற்படுவதாக கூறிய அவர், அதனை எம்மிடம் காண்பித்தார்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகைத் தந்து, ராணுவத்திடம் சரணடைந்ததாக கூறுகின்றார் சேயோன்.

அதன்பின்னரான காலத்தில் தனக்கு ராணுவம் புனர்வாழ்வளித்து, தன்னை பெற்றோரிடம் ஒப்படைத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ராணுவம் தன்னை மிகவும் அரவணைத்து, தனக்கான மருத்துவ உதவிகளை வழங்கி புனர்வாழ்வு அளித்ததாகவும் அவர் கூறுகின்றார்.

''பழைய காலத்து ஆட்கள் கூறுவார்கள் எதிரியையும் அணைக்க வேண்டும் என்று. அவர்கள் என்னை எதிரியாக நினைக்கவில்லை. அரசாங்கம் எதிரியாக நினைக்கவில்லை எங்களை. சகோதரன் மாதிரி நினைத்து, டாக்டர் கிளினிக் போட்டு கொடுத்த நேரத்திற்கு தவறாமல் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, கிளினிக்கை முடித்த பின்னர் புனர்வாழ்வில் விட்டார்கள்." என கூறுகின்றார் சேயோன்.

இலங்கை உள்நாட்டு யுத்தம்
படக்குறிப்பு, சேயோன் - கார்த்திகா

காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சேயோன் - காதலை பகிர்ந்த மனைவி கார்த்திகா

யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான காலத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட சேயோன், வவுனியாவில் வாழ்ந்து வந்துள்ளார்.

இதன்போது, தனது ஒரு கண் பார்வையை மாத்திரமே இழந்திருந்த சேயோன், வவுனியாவில் பணிப் புரிந்த கார்த்திகாவை சந்தித்துள்ளார்.

சேயோனின் காதலை முதலில் ஏற்க மறுத்த கார்த்திகா, பின்னரான காலத்தில் தனது விருப்பத்தை தெரிவித்து, திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

''பேக்கரி பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்தேன். அப்போது நாளாந்தம் வருவார். இவருடைய நண்பர்களும் வருவார்கள். போன் நம்பரை கேட்பார். நான் கொடுக்க மாட்டேன். சோடா வாங்கி குடித்து விட்டு போவார். எனக்கு கொஞ்சம் காது பிரச்னை. உனக்கு காது பிரச்னை, எனக்கு ஒரு கண் பிரச்னை என்று இவர் சொன்னார். இப்படி நாளாந்தம் சோடா குடிக்க வரும் இவர், ஒரு நாள் சோடாவை குடித்து விட்டு, உனக்கு விருப்பமாக இருந்தால், இந்த சோடா அரைவாசியை குடி என்று சொன்னார். போன் நம்பரை கேட்டார்.

எனக்கு விருப்பம் இருந்தது. திடீரென்று சொல்ல முடியாது தானே. போன் நம்பரை விளையாட்டாக நான் சொன்னேன். இவர் பாடமாக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. போயிட்டு, ஐந்து நிமிடங்களில் தொலைபேசியில் அழைத்தார். பிறகு நாளாந்தம் கதைப்பார். நானும் சரி சொல்லிவிட்டேன். எங்களுடைய வீட்டில் விருப்பம் இல்லை. இவருடைய அம்மா, அப்பாவிற்கு விருப்பம். பிறகு இவருடைய வீட்ட நான் போய் விட்டேன்.

பிறகு மூத்த மகள் பிறக்கவிருந்த போது, எனது குடும்பத்துடன் சேர்ந்துக்கொண்டேன். இவருக்கும் நான்கு, ஐந்து வருடங்கள் பார்வை இல்லாது போய்விட்டது. மூத்த மகளை தெரியும், இரண்டாவது மகளை தெரியும். கடைசி மகளை தெரியாது. கடைசி மகள் வயிற்றில் இருக்கும் போது தான் பார்வை முழுமையாக இல்லாது போனது. போராட்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்." என தனது காதலை பிபிசியுடன் பகிர்ந்துக்கொண்டார் சேயோனின் மனைவி கார்த்திகா.

விவசாயத்தையும், கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் தையல் போன்ற தொழில்களை வாழ்வாதார தொழில்களாக செய்து, தங்களது வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்கின்றது சேயோன் குடும்பம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: