வட துருவம் கண்டுபிடிக்கப்பட காரணமான கருப்பின மனிதர் வரலாற்றில் மறைக்கப்பட்ட கதை

பட மூலாதாரம், Nelly George/Alamy
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசிக்கு வெளியே மேரிலேண்டின் மாண்ட்கோமெரி கவுண்டி பகுதியில் அமைந்துள்ளது 116 ஏக்கர் பரப்பிலான மேத்யூ ஹென்சன் ஸ்டேட் பார்க்.
அடர்ந்த பசுமை மரங்கள் சூழ்ந்த 4.2 மைல்கள் நீள நடைபாதை, பறவையினங்களின் ரீங்காரம், மான், வான்கோழி என காட்டு விலங்குகளின் தரிசனம் என்று பார்வையாளர்களை அன்றாடம் பரவசத்தில் ஆழ்த்தி வரும் இந்த தேசிய பூங்கா தாங்கி நிற்கும் மேத்யூ ஹென்சன் என்ற பெயரை வெகுஜன மக்கள் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.
ஆனால் கருப்பினத்தைச் சேர்ந்த பயண ஆய்வாளரான இவரது சாதனை வாழ்க்கை வரலாறு, அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.
மேரிலேண்டுக்கு உட்பட்ட சார்லஸ் கவுண்டி எனும் இடத்தில் 1866இல் பிறந்தார் மேத்யூ ஹென்சன். 1879இல் தமது 13வது வயதில், கேட்டி ஹைன்ஸ் கப்பல் பணியாளர்களுடன் இணைந்து, கேபின் பணி சிறுவனாக 1884 வரை ஐந்தாண்டுகள் உலகை வலம் வந்தார்.
1887இல், நிகரகுவா பகுதியில் கால்வாய் அமைப்பதற்கான ஆய்வுப் பணியில் ராபர்ட் இ பியரிக்கு உதவும் வகையில் அவருடன் இணைந்து பணியாற்றினார்.
1909இல் பியரியுடன் இணைந்து, பூமியின் வட துருவத்தை அடைந்து அங்கு அமெரிக்க கொடியை நாட்டினார் ஹென்சன்.
1891 தொடங்கி 18 ஆண்டுகள் மேத்யூ ஹென்சனின் வாழ்க்கையில் முக்கிய காலக்கட்டமாகக் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில்தான் அவர், பியரியுடன் இணைந்து வட துருவத்தைத் தேடி, ஆர்க்டிக் பகுதியை அடைந்தார்.
பூமிப் பந்தில் ஆராயப்படாத பகுதிகளில் ஒன்றான வட துருவத்தை அடைவது என்பது பல நூற்றாண்டுகளாக ஆய்வாளர்களின் ஆவலாக இருந்து வந்தது. அவர்களில் பலர் வட துருவத்தில் இருப்பதை ஏதோ வேறு ஒரு கிரகத்தில் இருப்பதைப் போன்று கற்பனை செய்து கொண்டனர்.
ஹென்சனின் உருவ தோற்றம்
மெல்லிய ரோமம் கொண்ட புருவங்கள், முட்புதர் போன்ற மீசை, உரோமங்களால் ஆன தொப்பி அலங்கரித்திருந்த அவரது தலை என, ஹென்சனின் அந்த கருப்பு, வெள்ளை புகைப்படமே அவர் ஒரு துருவ ஆய்வாளர் என்பதைப் பறைசாற்றுவதாக உள்ளது. ஆனால் அவர் கருப்பினத்தைச் சேர்ந்தவராக இருந்தார்.
“தான் பள்ளிப் பருவத்தில் மேத்யூ ஹென்சனை பற்றி கேள்விப்பட்டதே இல்லை” என்கிறார் எக்ஸ்ப்ளோரர்ஸ் கிளப்பின் இயக்குநர்கள் குழுவில் பணியாற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜே.ஆர். ஹாரிஸ்.
“வட துருவத்தை ராபர்ட் பியரி கண்டுபிடித்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம் என்று கூறும் ஹாரிஸ், மேத்யூ ஹென்சனை யாரோ ஒருவர் என்றுதான் பலர் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல” என்கிறார்.
முதல் வழிகாட்டி
ஹென்சனின் வாழ்க்கை ஒரு வெற்றியாளனின் சாகச நாவலை போன்றது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், ஒரு வணிகக் கப்பலில் பணியாளர்களுடன் இணைந்து தொலைதூர கண்டங்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன், அந்தச் சிறு வயதில் கடினமான பணிகளைச் செய்தார்.
ஹென்சனின் முதல் வழிகாட்டி, ஒரு கப்பலின் கேப்டனான சில்ட்ஸ். இவர்தான் இளைஞரான ஹென்சனுக்கு கடலில் வாழ்வதற்கான பயிற்சியை அளித்தார். அத்துடன் அவருக்கு படிப்பையும் கற்றுக் கொடுத்தார்.
1883இல் குழந்தைகள் இறப்பால் தமது வாழ்நாளில் மிகப் பெரிய சோதனை, நெருக்கடியைச் சந்தித்தார் ஹென்சன். 1887இல் பியரியை சந்திக்கும் வரை, நான்காண்டு காலம் ஹென்சனின் வாழ்க்கை மிகவும் போராட்டமாகக் கடந்தது.
பியரி உடனான சந்திப்பு ஹென்சனின் வாழ்க்கையில் மீண்டும் வசந்தத்தைக் கொண்டு வந்தது. அமெரிக்க கடற்படையில் பொறியாளராகப் பணியாற்றிய கமாண்டர் பியரி, ஹென்சன் எனும் இளைஞரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
அதன் பயனாக, 1887இல், நிகரகுவா பகுதியில் கால்வாய் அமைப்பதற்கான ஆய்வுப் பணியில் தமது உதவியாளராக பணியாற்றும்படி ஹென்சனை பணித்தார் ராபர்ட் இ பியரி.

பட மூலாதாரம், Everett Collection Inc/Alamy
சகலகலா வல்லவரான ஹென்சன்
உலகை ஆராயும் இந்தப் பயணங்களின் தலைவராக பியரி இருந்தார். அத்துடன் பயணத்திற்கான பணத்தைத் திரட்டியதுடன், அணிகளை ஒருங்கிணைக்கும் பணியையும் அவர் மேற்கொண்டார். பியரியின் ஒவ்வொரு பயணத்திலும் ஹென்சன் அவருடன் இருந்தார்.
வட அமெரிக்காவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த இன்குயிட் இன மக்களுடனும், கிரீன்லேண்டை சேர்ந்த இன்யூட் மக்களுடனும் ஹென்சன் இந்தப் பயணத்தில் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.
இந்த நட்பின் பயனாக, இக்லூ எனப்படும் பனி வீடுகளைக் கட்டவும் பனியில் பயணிக்கப் பயன்படும் சக்கரமில்லா வாகனமான ஸ்லெட்ஜ்ஜை வடிவமைக்கவும் ஹென்சன் கற்றுக்கொண்டார்.
மேலும் அவர் இனுக்துன் மொழியையும் சரளமாகத் தெரிந்து வைத்திருந்தார். துருவ விலங்குகளை வேட்டையாடுவதில் கைதேர்ந்திருந்த ஹென்சன், பனிப் பிரதேசங்களில் போக்குவரத்து உள்ளிட்ட தேவைகளுக்காக நாய்களைப் பயன்படுத்தும் கலையான முஷிங்கையும் கற்றுத் தேர்ந்தார்.
ஹென்சன் ஒரு சிறந்த வேட்டைக்காரர், நாய்களைத் திறம்படக் கையாளுபவர் என்பதைத் தவிர, பிற மனிதர்களைவிட ஸ்லெட்ஜ் வாகனத்தைத் திறமையாகக் கையாளுபவராகவும் திகழ்ந்தார் என்று அவர் குறித்த தமது குறிப்பில் சிலாகித்து எழுதியிருந்தார் பியரி. ஹென்சன் இல்லாமல் தம்மால் இதையெல்லாம் பழகியிருக்க முடியாது என்றும் பியரி குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Niday Picture Library/Alamy
விடாமுயற்சி
1891 முதல் 1909 வரையிலான 18 ஆண்டுகளில், புவியின் வட துருவத்தை அடைய ஏழு முறை முயன்றார் பியரி. இந்த முயற்சிகள் அனைத்திலும் பியரியின் வலது கரம் என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு பக்கத் துணையாக இருந்தார் ஹென்சன்.
ஆனால், வட துருவத்தை அடைவது அவர்களுக்கு அவ்வளவு எளிதான விஷயமாக இருக்கவில்லை. பல தருணங்களில் இருவரும் பனியில் உறைந்தனர். பட்டினியில் கரைந்தனர். பனிக்கட்டிகளின் தொடர் தாக்கத்தால் பியரி தமது கால் விரல்களை கூட இழக்க வேண்டியதானது.
ஒரு சூழலில், பனி உருகிய நீரில் சிக்கிய பியரியை தமது இன்யூட் நண்பர்களுடன் சேர்ந்து ஹென்சன் தக்க தருணத்தில் காப்பாற்றாமல் இருந்திருந்தால் பியரி அந்த நீரில் மூழ்கியிருக்கக் கூடும். 1909இல் வட துருவத்தை அடைந்த தங்களின் இறுதிப் பயணம் வரை அவர்கள் பனிப்புயல், உருகும் பனி எனப் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர்.
எனினும் அந்த இன்னல்கள் எல்லாம் ஹென்சன், பியரி மற்றும் அவரது குழுவினரை செம்மைப்படுத்தவே செய்தன. ஒரு கட்டத்தில், வட துருவத்தில் இருந்து 134 மைல்கள் தொலைவில் இருந்தபோது, தங்களது குழுவினர் 50 பேரையும் கப்பலுக்குத் திரும்புமாறு உத்தரவிட்டார் பியரி.
நான்கு இன்யூட்ஸ் இன மக்கள் மற்றும் ஹென்சனை மட்டும் தமது தொடர் பயணத்தில் உடன் இருக்கும்படி அவர் பணித்தார்.

பட மூலாதாரம், Alpha Stock/Alamy
வட துருவத்தில் பறந்த அமெரிக்க கொடி
அறிவியல் மற்றும் இயற்கை குறித்த இதழான ‘ஸ்மித்சோனியனில்’ வெளியான கட்டுரையின்படி, பல நாட்கள் சாகச பயணத்துக்குப் பிறகு கடினமான மலையேற்றத்துக்குப் பின், தற்போது நாம் வட துருவத்தில் இருப்பது போன்ற உணர்வு தமக்கு ஏற்படுவதாக ஹென்சன் பியரியிடம் கூறினார்.
ஹென்சனின் அந்த வார்த்தைகளைக் கேட்டு பூரிப்படைந்த பியரி, உடனே தமது உடைக்குள் பத்திரமாக வைத்திருந்த, தன் மனைவி தைத்துக்கொடுத்து அனுப்பிய மடிந்த அமெரிக்க கொடியை, துருவத்தில் கட்டமைத்த பனிக் குடிலின் மேல் பறக்கவிட்டார்.
அதற்கு அடுத்த நாள், வட துருவத்தில் தங்களின் இருப்பிடத்தைத் தீர்மானித்த பியரி, தங்களது இந்த சாகசப் பயணம் குறித்த குறிப்பை அங்கு எழுதி வைத்துவிட்டு, தாங்கள் நட்ட அமெரிக்க கொடியை ஒரு சிறு பெட்டியில் வைத்து, அதைப் பனியில் புதைத்தார். அதன் பின் அந்த சாதனை மனிதர்கள் இருவரும் தங்களது வீடுகளுக்குத் திரும்ப உற்சாகமாக கப்பலை நோக்கி பயணிக்கத் தொடங்கினர்.
வெள்ளைக்காரருக்குத் துணையாக இருந்த கருப்பின மனிதர்
“உலகின் மற்றொரு சாதனை செய்து முடிக்கப்பட்டது” என்று 1912இல் எழுதிய தமது நினைவுக் குறிப்பான “A Negro Explorer at the North Pole” இல் ஹென்சன் எழுதினார்.
மேலும், “கடந்த காலங்களைப் போலவே, வரலாற்றின் தொடக்கத்தில் இருந்து உலகின் எந்த மூலையிலும் சாதனைப் பணிகளை ஒரு வெள்ளைக்காரர் மேற்கொண்டாலும் அவருடன் ஒரு வெள்ளை நிறம் அல்லாத மனிதர் இருப்பார்” என்று பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார் ஹென்சன்.
“சாதிக்க துடிக்கும் ஓர் இதயத்துக்கு, புத்திசாலித்தனம் நிறைந்த ஒரு நபர் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்தால் இனம், நிறம், சூழல் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை” என்று ஹென்சனின் புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில் பெருமிதத்துடன் கூறியிருந்தார் பியரி.
கொண்டாடப்படாத ஹென்சன்
இருப்பினும், வட துருவத்தை அடைந்ததற்காக பியரி பல்வேறு தரப்பினராலும் கொண்டாடப்பட்டார். அதேநேரம், ஹென்சனின் பெயர் மக்களின் மனதில் இருந்து விரைவாக மறைந்தது. அவரது பெருமைமிகு காலம் குறுகியதாக இருந்தது.
ஜிம் க்ரோ விவகாரம் உச்சத்தில் இருந்தபோது அவர் அமெரிக்காவுக்குத் திரும்பினார். அவரது இந்தப் பயணம் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் சந்தேகம் எழுப்பினர்.
வடதுருவம் குறித்த பியரியின் ஆய்வு சரியானதுதானா என்று வரலாற்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அங்கு சென்று முதலில் ஆய்வு செய்தவர் அவர்தானா என்பது குறித்த சர்ச்சையும் உள்ளது.
இருப்பினும் ஹென்சனின் துணை இல்லாமல், பழைமையான இன்யூட் வாழ்க்கையைத் தழுவி, பியரியால் வட துருவத்திற்குச் சென்றிருக்க முடியாது என்பதையும் பெரும்பாலானோர் ஒப்புக்கொள்கின்றனர்.
உரோமங்களால் ஆன ஆடைகள், நாய்களால் இயக்கப்படும் ஸ்லெட்ஜ் வாகனத்தை இயக்குதல் என இன்யூட்களை போல் அங்கு வாழும் திறனை இருவரும் பெற்றிருந்தனர் என்கின்றனர் அவர்கள்.
ஹென்சனை போலவே, உலகெங்கிலும் உள்ள வனப் பகுதிகளில் ஏராளமான சுய ஆதரவு தனிப் பயணங்களைத் தொடங்கினார் ஹாரிஸ். தொலைதூரங்களில் உள்ள பழங்குடியின மக்களுடன் நல்லுறவை உருவாக்கினார் அவர்.
அதேநேரம், பியரியை ஒரு முரண்பாடான மனிதர் என்று விமர்சித்த ஹாரிஸ், அவரது குழுவில் உள்ள ஒருவரால் இன்யூட் மக்களுடன் நல்ல உறவை ஏற்படுத்த முடியும் என்று ஹென்சனை மறைமுகமாக பாராட்டினார்.

பட மூலாதாரம், Everett Collection Inc/Alamy
நண்பனுக்கு மரியாதை
வட துருவத்தை நோக்கி பியரி மேற்கொண்ட பயணத்தின் சக்கரதாரியாக இருந்த மேத்யூ ஹென்சனை மக்கள் விரைவில் மறந்துவிட்டாலும், 1937ஆம் ஆண்டு வரை அவர் எக்ஸ்ப்ளோரர்ஸ் கிளப்பின் உறுப்பினராக இருக்க அனுமதிக்கப்பட்டார்.
தமது வாழ்வின் இறுதிக் காலத்தில் ஹென்சன் இருந்தபோது, அமெரிக்க அதிபர்கள் ஹாரி எஸ் ட்ரூமன் மற்றும் டுவைட் டி ஐசனோவர் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டார்.
1955இல் இந்த உலகை விட்டு மறைந்த ஹென்சன், ஆர்லிங்டன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அங்கு 33 ஆண்டுகள் கழித்து 1988இல் தான் அவருக்கு சிறப்பு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது.
மேத்யூ ஹென்சன் ஸ்டேட் பார்க், கடல்சார் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் 3000 டன் எடையுள்ள USNS கப்பலுக்கும், மேரிலேண்டில் உள்ள பல பொதுப் பள்ளிகளுக்கும் ஹென்சன் பெயர் என அவர் இன்று பெருமைப்படுத்தப்பட்டுள்ளார்.
பாஸ்டனை சேர்ந்த நரம்பியல் நிபுணரும், எக்ஸ்ப்ளோரர்ஸ் கிளப்பின் சக உறுப்பினருமான மறைந்த டாக்டர் எஸ் ஆலன் கவுன்டர் போன்ற, ஹென்சனின் தீவிர ஆதரவாளர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாகவே, ஹென்சனுக்கு இன்று இவ்வளவு பெருமைகள் கிடைத்துள்ளன என்றால் அது மிகையாகாது.
“ஹென்சனின் நண்பரும், ஆய்வாளருமான எனது தந்தை ஆலனுக்கு, வட துருவம் சென்று சாதித்ததற்காக மேத்யூ ஹென்சன் அங்கீகரிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் இருந்தது.
ஹென்சன் பாடப்படாத, புகழப்படாத ஹீரோ என்று சொல்லி வந்த அவர், ஹென்சன் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின் ஹென்சனின் சாதனைக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளார்” என்று பெருமையுடன் கூறுகிறார் ஆலன் கவுன்டரின் மகளான பிலிப்பா கவுன்டர்.

பட மூலாதாரம், Everett Collection Inc/Alamy
அந்த நான்கு பேர்
2017இல் டாக்டர் கவுன்டர் மறைந்தாலும், எக்ஸ்ப்ளோரர்ஸ் கிளப்பை மற்றவர்கள் முன்னெடுத்துச் சென்றனர். ஜே.ஆர். ஹாரிஸ் கிளப்பின் தலைவரானார்.
2022இல் இந்த கிளப்பில் சீக்லூ, எகிங்வா, ஓக்வா, ஊட்டா ஆகிய இன்யூட் இனத்தைச் சேர்ந்த நான்கு ஆண்கள் அவர்களின் மரணத்துக்குப் பின் மானசீகமாக சேர்க்கப்பட்டனர் சேர்க்கப்பட்டனர். பியரி மற்றும் ஹென்சனின் வட துருவத்தை நோக்கிய இறுதிப் பயணத்தில் அவர்களுடன் இருந்தவர்கள் என்பதுதான் இந்த நால்வரின் சிறப்பு.
இதனிடையே பிரன்சுவிக், மைனைவில் உள்ள பியரி -மேக்மில்லன் ஆர்க்டிக் அருங்காட்சியகத்தில் ஹென்சனின் கலைப் பொருட்கள் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவர் தானே வடிவமைத்த ஸ்லெட்ஜ், 1950இல் ஹென்சன் அளித்த ஓர் அரிய தொலைக்காட்சி நேர்காணல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












