"ரோஹிஞ்சா குடும்பத்தின் செத்துப் பிழைக்கும் வாழ்க்கை" - வங்கதேச எல்லை முகாமின் கள நிலவரம்

ரோஹிஞ்சா அன்வர்
    • எழுதியவர், ரஜினி வைத்தியநாதன்
    • பதவி, பிபிசி நியூஸ், காக்சஸ் பஜார், வங்கதேசம்

2017ஆம் ஆண்டு செப்டம்பரில் வங்கதேச எல்லையில் உள்ள அகதிகள் முகாமில் பிபிசி குழு முதன்முதலில் குழந்தை அன்வர் சாதிக்கை சந்தித்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆகியிருந்தான். அந்த பிஞ்சுக்குழந்தை இப்போது வளர்ந்து ஐந்து வயதை கடந்துள்ளான்.

ஒரு மெல்லிய பருத்தித் துணியால் தாய் மொஹ்சேனா குழந்தை அன்வரை மூட வேண்டியிருந்தது. அந்தத் தாய் தன் பிஞ்சுக் குழந்தையை தற்காலிக கூடாரத்தின் கீழ், வெற்று நிலத்தின் மீது போட்டு வைத்திருந்தார்.

மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உலகில் பிறந்த குழந்தை அன்வர், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் பலவீனமாக காணப்படுகிறான்.

பசி, நோய் மற்றும் அதிர்ச்சியான இயற்கை சூழ்நிலைகளுக்கு மத்தியில் இங்கு வளரும் ஐந்து லட்சம் குழந்தைகளில் சிறுவன் அன்வரும் ஒருவர்.

இங்கு நிலைமை விரைவில் சரியாகி விடும் என்ற சிறிய எதிர்பார்ப்பு இங்குள்ளவர்களுக்கு இருந்தாலும், இந்த முகாமில் முறையான கல்வி வசதிக்கோ வேலைக்கோ வாய்ப்புகள் குறைவு.

இந்த மண்ணில் குழப்பமும் ஆபத்தும் நிறைந்த வாழ்க்கைச்சூழலில் அன்வர் பிறந்தான். மியான்மரில் இருந்து தப்பித்தபோது எடுத்து வர எதுவுமின்றி தப்பி வந்த எண்ணற்ற வெகுஜன ரோஹிஞ்சாக்களில் அன்வரின் பெற்றோரும் ஒரு பகுதி.

"நான் இவனை ஒரு அழகான மற்றும் அமைதியான உலகில் வளர்ப்பேன் என்று நினைத்தேன்," என்று அந்த நேரத்தில் (2017) நம்மிடம் கூறினார் மொஹ்சேனா.

"ஆனால், இன்று (2023) நான் அகதிகள் முகாமில் இருக்கிறேன். இது ஒரு அழகான இடம் அல்ல," என்கிறார் அவர்.

இப்போது கிட்டத்தட்ட பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் இங்கு வாழ்கின்றனர். இவர்களின் வாழ்விடங்களைச் சுற்றிலும் முள் கம்பி வேலிகள் நிறுவப்பட்டுள்ளன. இதனால், இந்த மக்களுக்கு வெளி உலகத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சிறுபான்மை ரோஹிஞ்சா மக்களை திட்டமிட்ட முறையில் கொலை செய்தல், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குதல் மற்றும் சித்ரவதை செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளை சுமக்கும் மியான்மர் படைகளிலிருந்து இந்த மக்கள் தப்பி ஓடி வந்தவர்கள். மியான்மர் படையினர் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக அமெரிக்க அரசாங்கம் கடந்த ஆண்டு பகிரங்கமாக குற்றம்சாட்டியது.

இப்போது, அதே மியான்மர் ராணுவம் 2021இல் நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு பிறகு தங்களுடைய தாயகத்தின் ஆளுகையை நிர்வகிப்பதால், மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்பும் வாய்ப்பு இந்த மக்களுக்கு வெகு குறைவாகவே உள்ளது.

அன்வரை தேடிய பிபிசியின் பயணம்

குழந்தை அன்வரை தேடி

கடலோர நகரமான காக்சஸ் பஜார் அருகே, உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமாக மாறிய, நெரிசல் மிகுந்த மற்றும் குறுகிய பாதைகளின் பரந்த நிலத்தில் அன்வரை பிபிசி கண்டுபிடித்தது.

ஒரே மாதிரியான மூங்கில்கள் மூலம் பிணைக்கப்பட்ட தங்குமிடங்களின் முடிவில்லாத வரிசைகளுக்கு மத்தியில் அன்வரின் குடும்பத்தை கண்டுபிடிப்போம் என்பதை எங்களாலேயே நம்ப முடியவில்லை.

2017இல் இந்த குடும்பம் நிலையான முகவரி இல்லாமல் திறந்தவெளியில் வசித்தது. இப்போதும் இந்த குடும்பத்திடம் வெளித் தொடர்புக்கு செல்பேசி வசதி கிடையாது.

இன்று அன்வர் அகண்ட கண்களுடன் கூச்ச சுபாவமுள்ள சிறுவனாக வளர்ந்து நிற்கிறான். எந்நேரமும் தனது தாயை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு நம்மை பார்க்கிறான். தாயின் மடியில் தலையை வைத்துக்கொண்டு, அம்மாவின் இளஞ்சிவப்பு புடவை மடிப்பை தன்பக்கம் இழுத்துப் போர்த்திக் கொள்கிறான்.

அன்வருக்கு இரண்டு இளைய சகோதரிகள் உள்ளனர். இரண்டு வயது சடேகா மற்றும் அல்மர் ரூஃபா. உருவத்தோற்றத்தில் ஒரே மாதிரியே உள்ளனர்.

இந்த குடும்பம் முன்பு போல கேன்வாஸ் விரிப்பில் இருக்க வேண்டியதில்லை. அந்த வகையில் இவர்களின் வசிக்கும் இடம் முன்பை விட மேம்பட்டுள்ளது.

சூரிய வெளிச்சம் உள்ளே வர முடியாத ஒரேயொரு சாதாரண அறை கொண்ட தங்குமிடத்தை இவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். வெப்பத்தின் உஷ்ணத்தை தணிக்க மின்விசிறிகள் இல்லை. காற்றோட்ட வசதியும் குறைவு.

அன்வர் மற்றும் அவரது சகோதரிகள் தூங்குவதற்கு படுக்கை விரிப்பு கூட இல்லை - ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட ஒரு பாய் மட்டுமே இவர்களுக்கு மெத்தை. கடினமான கான்கிரீட் தரையில் அதை விரித்துப் போட்டுள்ளனர். இப்போதைக்கு அதுவே நிவாரணம்.

கொடுமையின் உச்ச அனுபவம்

மியான்மர் ரோஹிஞ்சாக்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்த சிறிய அறையில் நிவாரண உதவி அமைப்புகள் மூலம் கிடைத்த சில உடைமைகள் - உலோக பாத்திரங்கள், கயிற்றில் காய வைக்கப்பட்டிருந்த சில துணிகள் மட்டுமே இவர்களின் சொத்துகள்.

"மியன்மாரில் நாங்கள் மரப்பலகைகளால் ஆன ஒரு பெரிய வலுவான வீட்டைக் கொண்டிருந்தோம். எங்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தது. அதில் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்தோம்," என்கிறார் மொஹ்சேனா.

2017ஆம் ஆண்டு செப்டம்பரில் மியான்மர் ராணுவத்திடம் இருந்து தனது கணவர் நூருல் ஹக்குடன் தப்பிச் வந்தபோது, மொஹ்சேனாவுக்கு வயது வெறும் 15 மட்டுமே.

இவரது மாமா மீன் பிடிக்கச் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார், வசிப்பிடத்தை விட்டு விரைவாக வெளியேறாவிட்டால் அடுத்த இலக்கு தமது குடும்பம் ஆகவே இருக்கும் என்று மொஹ்சேனா பயந்தார்.

அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மொஹ்சேனா உயிரை கையில் பிடித்துக் கொண்டு பல நாட்கள் வெறுங்காலுடன் நடந்ததால் இவரது கணுக்கால் வீங்கியிருந்தது.

ஒரு வழியாக அண்டை நாடான வங்கதேசத்தின் ஆற்றைக் கடக்கும்போது அது நடந்தது.

மொஹ்சேனா பயணம் செய்த பழுதடைந்த மரப் படகு ஆற்றில் கவிழ்ந்தது. தானும் தன் கருவில் இருக்கும் குழந்தையும் நீரில் மூழ்கிவிடுவார்கள் என்று மொஹ்சேனா நினைத்தார். நல்ல வேளையாக அவரையும் அவரது கருவில் இருந்த சிசுவையும் அவரது கணவர் காப்பாற்றினார்.

ஆற்றைக் கடக்கும்போது களைப்பாகவும், முற்றிலும் நனைந்து போயும் இருந்தனர். அன்வர் பிறந்த எல்லை மருத்துவமனைக்கு செல்லும் வரை இந்த தம்பதி நிற்காமல் நடந்து கொண்டே இருந்தனர்.

இத்தனை கொடுமையான சூழ்நிலைக்குப் பிறகும் வயிற்றில் சிசு உயிர் பிழைத்தது மொஹ்சேனாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு, மொஹ்சேனா மீண்டும் முகாம்களுக்கு அருகே் உள்ள அதே எல்லை மருத்துவ நிலையத்துக்கு சென்றபோது தமது மகன் அன்வரை இழக்க நேரிடும் என்று கவலைப்பட்டார்.

காரணம், அன்வருக்கு பயங்கர காய்ச்சல் ஏற்பட்டது. இதயம் வேகமாகத் துடித்தது. இந்த பிஞ்சுக்குழந்தை இருமலை நிறுத்தவில்லை. அவனை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த குடும்பத்தில் உள்ள பிஞ்சுகள், நோய்வாய்ப்படாமல் ஒரு வாரம் கூட இயல்பாக இருந்ததில்லை.

முகாமில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை நிலைமைகள் மோசமானவை. காரணம், இங்குள்ள சூழ்நிலைகள் சுகாதாரமற்றவை. குப்பை குவியல்களுக்கு அருகே உள்ள பகுதிதான் இவர்களுக்கு விளையாட்டு மைதானம். திறந்த கழிவுநீரின் அடர்த்தியான கருப்பு ஓடைகளில் இருந்து வெளிப்படும் கடுமையான காற்றைத்தான் இவர்கள் சுவாசிக்கிறார்கள்.

ரோஹிஞ்சா முகாம்கள்
படக்குறிப்பு, முகாம் வழியாக வெளியேறும் மாசுபட்ட கழிவு நீரில் இருந்து வரும் துர்நாற்றத்தையே இந்த குழந்தைகள் சுவாசிக்கின்றனர்.

டெல் அவிவ் மற்றும் பெனி ப்ராக்- இருவேறு தன்மைகளைக் கொண்ட நகரங்கள்

அகதிகளுக்கான ஐ.நா தூதரக அலுவலகத்தின் கூற்றுப்படி, இந்த அகதிகள் முகாமில் ஒவ்வோர் ஆண்டும் இங்கு 30,000 குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் இது ஒரு குழந்தை வாழ்வதற்கு உகந்த இடமல்ல. இங்கு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10இல் நான்கு பேர் வளர்ச்சி குன்றியதால் பாதிக்கப்படுகின்றனர்.

"குழந்தைகள் சுகாதாரமற்ற மற்றும் நெரிசலான இடங்களில் வாழ்கின்றனர். இது தொற்று மற்றும் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது," என்று டாக்டர் தன்வீர் அகமது விளக்குகிறார்.

இந்த தன்னார்வலர்களின் முயற்சிகளுக்கு மத்தியிலும் ரோஹிஞ்சா குழந்தைகள் நோயின் சுழற்சியில் சிக்கியுள்ளனர். இவர்கள் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றாலும் பழையபடி அதே நோய்க்கு காரணமான சுகாதாரமற்ற சூழ்நிலைகளுக்கே திரும்பிச் சென்று மீண்டும், மீண்டும் நோய்வாய்ப்படுகிறார்கள்.

சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைக்காததும் இதற்கு ஒரு பெரிய காரணியாகும்.

இது பற்றி அன்வரின் தாய் மொஹ்சேனா கூறும்போது, "சில நேரங்களில் எங்களுக்கு சாப்பாடு கிடைக்கும். சில சமயங்களில் கிடைக்காது," என்கிறார் சோகத்துடன்.

ரோஹிஞ்சா அகதிகள் உணவுக்காக நிவாரண உதவி அமைப்புகளையே நம்பியிருக்கிறார்கள். ஒரு நிலையான மாதாந்திர உணவு கூப்பன் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதை ஐநா விநியோக மையத்தில் வழங்கி அரிசி, கோழி, காய்கறிகள் மற்றும் பருப்பு போன்ற முக்கிய பொருட்களை வாங்கலாம்.

ஆனால், கடந்த மாதம் அகதிகள் நம்பியிருந்த உணவு உதவித்தொகையின் வரம்பு, மாதத்திற்கு $12 (£9.60) என்பதில் இருந்து $10 ஆக குறைக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் அது மீண்டும் $8 ஆக குறைக்கப்படும்.

உலக உணவுத் திட்ட (WFP) சர்வதேச நிதியில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக இந்த தொகையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா கூறுகிறது - யுக்ரேனில் நடந்த போர் காரணமாக, அமெரிக்கா போன்ற முக்கிய நன்கொடை நாடுகளிடம் இருந்து கிடைத்து வந்த நிதியுதவி தடைபட்டதால் இந்த நிலைமை.

ரோஹிஞ்சா
படக்குறிப்பு, மொஹ்சேனாவின் குடும்பம் சாப்பிடுவதற்கு சொற்ப அளவிலான உணவே இருக்கிறது.

மொஹ்சேனாவின் குடும்பம் இந்த மாதம் வாங்கிய கூப்பனுக்கான உணவுப்பொருட்கள் ஏற்கெனவே தீர்ந்து விட்டது. அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் மசாலா நிரப்பப்பட வேண்டிய பிளாஸ்டிக் டப்பாக்கள் அனைத்தும் காலியாக உள்ளன. இவர்கள் வசம் எஞ்சிய பொருட்களாக அரை பானை உப்பு மற்றும் ஒரு பல் பூண்டு மட்டுமே உள்ளன.

அடுத்த தவணையாக உணவுப் பொருட்கள் வழங்கப்படும்வரை பக்கத்திலுள்ள உலோக பானையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சில நாட்கள் பழமையான மீன் மற்றும் கோழிக் கறியில் ஒரு சிறிய பகுதியை இந்த குடும்பம் உண்டு வாழ்கிறது. சில சமயங்களில் பிற குடும்பங்களிடம் இருந்தும் உணவைக் கடன் வாங்க வேண்டியிருக்கும்.

"நாங்கள் எப்படி உயிர்வாழ்வோம் என்று தொடர்ந்து கவலைப்படுகிறோம். எங்கள் குடும்பத்தை நடத்த எப்படி வாழ்க்கையை நடத்தப்போகிறோம்?" என்று கேட்கிறார் மொஹ்சேனா.

22 வயதான இவரது கணவர் நூருல், மாதத்திற்கு ஒரு சில நாட்களே வேலை செய்கிறார். கடின உழைப்பு அல்லது துர்நாற்றம் வீசும் சாக்கடைகளை சுத்தம் செய்கிறார். ஆனால் பெரும்பாலான நாட்களில் வேலை கிடைக்காததால் வீட்டிலேயே உட்கார வேண்டிய கட்டாயம் இவருக்கு உள்ளது.

பிபிசி இவர்களின் வசிப்பிடத்துக்கு சென்றபோது, நூருல் ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்து, இளைய குழந்தையை தூங்க வைத்துக் கொண்டு இருந்தார்.

இவர்களின் முகாமை மோச்சா சூறாவளி தாக்கியபோது, ஒரு சிறிய மரம் இவர்களின் தங்குமிடம் மீது விழுந்தது. அது இவர்கள் வாழ்ந்த மெலிந்த மூங்கில் கட்டமைப்பை வளையச் செய்தது.

புயல் கடந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு வளைந்து போன தங்களுடைய குடிசையை நூருல் சரி செய்தார்.

ரோஹிஞ்சாக்கள்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் இங்குள்ள அகதிகள் முகாம்களை விட்டு வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைவு. முகாம்களில் உள்ள இளைஞர்களில் 95% பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று நார்வே அகதிகள் கவுன்சிலின் (NRC) 2022 அறிக்கை தெரிவிக்கிறது.

அகதிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு இடையே எந்த வகையான ஒருங்கிணைப்பையும் வங்கதேச அரசு கட்டுப்படுத்துகிறது. ரோஹிஞ்சா அகதிகளுக்கு உள்ளூர் மொழி அல்லது பாடத்திட்டத்தை கற்பிக்க கூட அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

ஐந்து ஆண்டுகளாக அகதிகளுக்கு உணவளித்த வங்கதேச அரசு இப்போது அவர்களை விரைவில் மியான்மருக்கு திருப்பி அனுப்ப விரும்புகிறது.

பிபிசிக்கு அளித்த பேட்டியில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்த விஷயத்தில் உலக நாடுகள் மேலதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

"உலக நாடுகள் இந்த சுமையை எப்போதும் எங்கள் மீதே சுமத்திக் கொண்டு இருக்க முடியாது," என்று கூறிய அவர், "எங்களுடையது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, எங்கள் மக்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளனர்," என்று தெரிவித்தார்.

ஆனால், ரோஹிஞ்சா அகதிகள், தங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே மியான்மருக்குத் திரும்புவோம் என்று கூறுகிறார்கள் - உள்நாட்டுப் போர் இன்னும் மியான்மரில் தொடர்வதால், இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

இந்த அகதிகள் நெருக்கடியின் மன வேதனை 'மற்றொரு சொல்லப்படாத கதை'.

"என்னுடைய மகன் என்னைப் போல் கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை" என்கிறார் நூருல். "அவன் கல்வி கற்க வேண்டும், தொழில் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்கிறார் அவர்.

ஆனால் இது ஒரு சவாலான எதிர்நீச்சல் போராட்டமாகவே இருக்கும்.

வங்கதேச முகாம்

ரோஹிஞ்சா குழந்தைகளுக்கு முறையான கல்விக்கான அணுகல் இல்லை - முகாம்களில் பள்ளிகள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் அவர்கள் வெளியில் உள்ள உள்ளூர் வங்கதேச பள்ளிகளில் படிக்க முடியாது.

சில இடைவெளிகளை அடைக்க, உதவி அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் முகாமிற்குள் தற்காலிக வகுப்பறைகளை அமைத்துள்ளனர்.

இந்த கற்றல் மையங்கள் எண்ணிக்கை அளவில் சுமார் 5,000 வரை இயங்குவதாகவும் அவற்றில் பல முறையான தகுதிகள் இல்லாத ஆசிரியர்களால் நடப்பதாகவும் குழந்தைகளுக்கான ஐ.நா. அமைப்பு கூறுகிறது.

அன்வர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒருவரிடம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் படிப்பதற்காக செல்கிறான். வங்கதேசத்தில் வாழ்ந்தாலும் அன்வருக்கான பாடங்கள் பர்மிய (மியான்மர் தாய்மொழி) மொழியில் உள்ளன. இந்த மொழிதான் அன்வரின் பெற்றோர் தப்பி வந்த தாய்நாட்டின் மொழி.

அன்வர் எங்கே பிறந்தார் என்று அவனது தாய் மொஹ்சேனாவிடம் கேட்டபோது, இதே அகதிகள் முகாமில் தான் இவனது வாழ்க்கை தொடங்கியதாக சொல்கிறார்.

"நான் இன்னும் மியான்மரை பார்க்கவில்லையா, அம்மா?" என்று இந்த குழந்தை தனது தாயிடம் கேட்கிறது.

"இல்லை, நீ இன்னும் பார்க்கவில்லை கண்ணே," என மொஹ்சேனா அன்வருக்கு பதிலளித்தார்.

இப்போது நம்முள் ஓடும் கேள்வி இதுதான்: இன்னும் ஐந்து வருடங்களில் இந்த சிறுவன் அன்வர் எங்கே இருப்பான்?

இந்த செய்திக்குரிய கூடுதல் தகவல் மற்றும் புகைப்படம் எடுக்க உதவிய செய்தியாளர்கள்: நேஹா ஷர்மா மற்றும் அமீர் பீர்சாதா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: