கோவா இரவு விடுதி தீ விபத்து- உரிமையாளர்களை தாய்லாந்தில் இருந்து அழைத்து வருவது எவ்வளவு சவாலானது?

பட மூலாதாரம், Getty Images
கோவா இரவு விடுதியில் தீ பற்றிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டெல்லியை சேர்ந்த அஜய் குப்தா என்பவரை கோவா காவல்துறை காவலில் எடுத்துள்ளது.
இந்த தகவலை கோவா காவல்துறை தன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
"அஜய் குப்தாவின் வீட்டை சோதனையிட்ட போது, அவர் தப்பிச் செல்ல முயன்றார்." என காவல்துறை தெரிவித்துள்ளது
கடந்த சனிக்கிழமை இரவு (டிசம்பர் 06) கோவாவில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேன்' எனப்படும் இரவு விடுதியில் பெரும் தீப்பற்றிக்கொண்ட நிலையில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். சிலிண்டர் வெடித்ததில் தீ பற்றியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
வடக்கு கோவாவின் அர்போரா எனும் பகுதியில் உள்ள இந்த இரவு விடுதியில் தீப்பற்றியதில் சுற்றுலாப் பயணிகள் சிலரும் கொல்லப்பட்டனர். இறந்த பலரும் அந்த விடுதியின் பணியாளர்கள் என நம்பப்படுகிறது.
முன்னதாக, இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்கள் மற்றும் இரவு விடுதியின் உரிமையாளர்களான சௌரப் லுத்ரா மற்றும் கௌரவ் லுத்ராவுக்கு எதிராக இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸை பிறப்பித்ததாக கோவா காவல்துறை தெரிவித்துள்ளது.
"இந்த நோட்டீஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களை கண்டடைவதற்கு உதவும், மேலும் அவர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கிருந்து இடம்பெயர்வதை தடுக்கும்," என கோவா காவல்துறை தன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை கோவா காவல்துறையின் டிஐஜி வர்ஷா ஷர்மா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறுகையில், "இரவு விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்தில் உள்ள ஃபுகெட் எனும் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது," என்றார்.
"இது மிகவும் துயரமான விபத்து, இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரவு விடுதியின் உரிமையாளர்களுக்கு எதிரான நடவடிக்கையையும் நாங்கள் உடனடியாக தொடங்கினோம். அவர்கள் ஃபுகெட் எனும் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, சிபிஐ மற்றும் இண்டர்போல் உதவியுடன் அவர்களை அடைவதற்கு முயற்சித்து வருகிறோம்." என்றார் வர்ஷா ஷர்மா
தாய்லாந்தில் உள்ள ஃபுகெட் தீவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்தில் இருந்தால், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் என்ன சவால்கள் இருக்கும் என்ற கேள்விகள் எழுகின்றன. குற்றம் சாட்டப்பட்ட நபர்களை நாடு கடத்துவது தொடர்பாக தாய்லாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே ஒப்பந்தம் உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
இந்தியா - தாய்லாந்து இடையேயான ஒப்பந்தம்
உள்துறை அமைச்சகத்தின்படி, இந்தியா மற்றும் தாய்லாந்துக்கு இடையே 2013ம் ஆண்டு, பாங்காக்குக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சென்றிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களை சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் சட்ட தகவல்கள் மற்றும் மற்ற தேவையான உதவிகளை வழங்கும்.
அதன்மூலம் அந்நாடுகள் தலைமறைவான நபர்களை சம்பந்தப்பட்ட நாட்டுக்கு ஒப்படைக்க முடியும்.
அந்த ஒப்பந்தத்தின்படி, பொருளாதார குற்றங்களில் குற்றம் சட்டப்பட்டவர்களையும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஒப்படைக்க முடியும்.
வெளியுறவு துறை அமைச்சகத்தின்படி, 48 நாடுளுடன் இத்தகைய ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. அவற்றில் வங்கதேசம், பூடான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகள், இஸ்ரேல், சௌதி அரேபியா, ரஷ்யா, துருக்கி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஒப்பந்தம் மட்டும் போதுமா?
எளிய வார்த்தைகளில் சொல்வதானால், இதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் எந்த நாட்டுக்கு தப்பியோடினாரோ அங்கிருந்து அவரை சம்பந்தப்பட்ட நாட்டுக்குத் திருப்பி ஒப்படைக்க முடியும்.
இதுதொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் இருந்தால் தான் இவ்வாறு செய்ய முடியும்.
இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின்படி, விசாரணையில் உள்ள அல்லது நிலுவையில் உள்ள வழக்குகளில் ஒருவரை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்குமாறு கோர முடியும். மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்குகளிலும் இவ்வாறு கோர முடியும்.
விசாரணை நடைபெற்று வரும் வழக்குகளில் அதை விசாரிக்கும் விசாரணை முகமைகள், வெளிநாட்டு நீதிமன்றங்களில் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் போதுமான ஆதாரங்களை வழங்குவதை உறுதி செய்வதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராகவும் சர்வதேச சட்டங்களில் நிபுணராகவும் உள்ள முனைவர் அஜேந்திர ஸ்ரீவஸ்தவா பிபிசி செய்தியாளர் சௌரப் யாதவிடம் கூறுகையில், "இந்தியாவிலுள்ள போலீஸார் ஒருவரை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்குமாறு கூறினால், அதை வெளிநாட்டு போலீஸார் அப்படியே செய்வார்கள் என்பது அர்த்தமில்லை. இது இரண்டு நாடுகளின் நீதிமன்றங்களையும் உள்ளடக்கிய சட்ட நடவடிக்கை. இரு நாடுகளுக்கிடையேயும் இதுதொடர்பாக ஒப்பந்தம் இருக்க வேண்டும், மேலும் ஒருவரை சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைப்பதற்கு சட்ட வழிமுறைகள் உள்ளன." என்றார்.
குற்றச் சம்பவம் நடந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை முகமைகளிடம் ஆதாரங்கள் இருந்தும் ஏன் சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைக்க முடிவதில்லை, அல்லது அதற்கு ஏன் அதிக காலம் எடுக்கிறது என்ற கேள்வி எழலாம்.
அஜேந்திர ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "சம்பந்தப்பட்ட நாட்டுக்கு ஒப்படைக்கப்படுவதற்கு கோரப்படும் நபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவரை ஒப்படைக்கும் நாடுகளுக்கும் சட்டங்கள் உள்ளன, ஒரு நாடு கேட்கும்போது சம்பந்தப்பட்ட நபரை ஒப்படைக்க வேண்டுமா, இல்லையா என்பது அந்த சட்டத்தின்படியே தீர்மானிக்கப்படும்." என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "அந்த நாட்டின் நீதிமன்றத்தில் தொடர்புடைய நபர் மீதான வழக்கு குறித்து சமர்ப்பித்து, தங்கள் நாட்டில் அந்நபர் குற்றம் புரிந்தார் என்பதற்கான முகாந்திரம் (prima facie) இருப்பதாக கூற வேண்டும். அந்த குற்றத்தை அந்நபர் தப்பியோடிய நாட்டின் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். சட்ட நடவடிக்கைகளின்படி, அந்நபருக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்படும் என உறுதி கூற வேண்டும். உண்மையிலேயே ஒரு குற்றம் நடந்ததாக அந்நாட்டின் நீதிமன்றம் திருப்தியடைந்தால் மட்டுமே, அவரை தொடர்புடைய நாட்டுக்கு ஒப்படைக்க அனுமதிக்கும்." என்றார்.

பட மூலாதாரம், @NIA_India
முந்தைய வழக்குகள்
2008ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ரானா இந்தாண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மும்பை மற்றும் டென்மார்க்கில் தனது நண்பர் டேவிட் கோல்மேன் ஹெட்லியுடன் இணைந்து தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாக கடந்த 2013ம் ஆண்டு அமெரிக்காவில் தஹாவூர் ரானா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதில், அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அகஸ்தாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்கப்பட்ட வழக்கில் இடைத்தரகராக செயல்ப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் 2018ம் ஆண்டு துபாயிலிருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்டார்.
அகஸ்தாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து 12 விவிஐபி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் காங்கிரஸ் தலைமையிலான முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஏற்படுத்தப்பட்டது.
இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸின் மூலம் 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த சோட்டா ராஜனை இந்தோனீசிய காவல்துறை கைது செய்தது. அதன்பின் அவர் அதே ஆண்டு நவம்பர் 6 அன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
1993 மும்பை வெடிகுண்டு தாக்குதல்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அபு சலீம் 2005ம் ஆண்டு போர்ச்சுகல்லில் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அபு சலீமை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு பாஜக தலைவரும் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான எல்கே அத்வானி, அபு சலீமை 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருக்க மாட்டோம் என்றும் அவருக்கு மரண தண்டனை வழங்க மாட்டோம் என்ற உறுதியை போர்ச்சுகல் அரசு மற்றும் நீதிமன்றத்திடம் எழுத்துபூர்வமாக வழங்கினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












