"ஆ. ராசாவின் வாக்குறுதி நம்பிக்கை தரவில்லை" - போராட்டத்தை தொடரும் அன்னூர் விவசாயிகள் - என்ன நடக்கிறது?

விவசாயிகள் போராட்டம்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவை அன்னூர் தொழிற்பூங்காவுக்காக விவசாயிகள் நிலங்கள் பலவந்தமாக கையகப்படுத்தப்படாது என்று திமுக எம்.பி ஆ. ராசா அளித்த வாக்குறுதி நம்பிக்கை அளிக்கவில்லை என்றும் போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் கூறியிருக்கிறார்கள், இந்த திட்டத்தை எதிர்த்துப் போராடும் விவசாயிகள்.

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3,864 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் சார்பில் ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

இந்தத் திட்டத்திற்கு அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதம், பேரணி எனப் பல கட்டங்களாக விவசாயிகள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

தொழிற்பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்ட 17 கிராமங்களில் போராட்டக் குழுவினர் அலுவலகங்கள் அமைத்துள்ளனர். "தொழிற்பூங்கா, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பணிகளுக்காக அரசு அதிகாரிகள் யார் வந்தாலும் கையெழுத்து வாங்கிவிட்டு தான் ஊருக்குள் அனுப்ப முடிவு செய்துள்ளோம். விவசாயிகள் சார்பில் பறக்கும் படை அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றும் போராட்டக் குழுவினர் அறிவித்தனர். 

சில பிரதான அரசியல் கட்சிகளும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தொழிற்பூங்கா திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று கோரி வருகின்றன. 

விவசாயிகளின் நிலங்கள் எடுக்கப்படாது - ஆ.ராசா

ஆ.ராசா
படக்குறிப்பு, போராட்டக்குழுவினருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செய்தியாளர்களை திமுக எம்.பி ஆ. ராசா சந்தித்தார்.

இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அன்னூர் தொழிற்பூங்கா திட்டம் தொடர்பாக கோவையில் டிசம்பர் 14ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசியவர், "அன்னூரில் தொழிற் பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியபோது விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மாவட்ட நிர்வாகிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நான் கோவை மாவட்ட ஆட்சியர், முதல்வர், தொழில் துறை அமைச்சர் ஆகியோருடன் பேசிவிட்டுதான் வருகிறேன்.

இங்கு வரக்கூடிய நிறுவனங்கள் மாசுபடுத்தாத நிறுவனங்களாகத்தான் அமையும். அதையும் உறுதி செய்யும் பொறுப்பு இந்திய அரசுக்கும் இருக்கிறது. ரூ.50 கோடிக்கு மேல் எந்த தொழிற்சாலை திட்டம் வந்தாலும் அதற்கு இந்திய அரசு அனுமதி தர வேண்டும். மத்திய அரசு தவறான திட்டங்களை அனுமதிக்காது என்கிற நம்பிக்கை அனைவருக்கும் வேண்டும்," என்று கூறினார்.

கம்பெனி நிலங்களே போதும்

விவசாயிகள் போராட்டம்

"தொழிற்பூங்கா திட்டமிடப்பட்ட இடத்தில் 2,000 ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு சொந்தமானவை அல்ல. கம்பெனி வசம் தான் இந்த நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களை கையகப்படுத்த தடை இருக்காது. இந்த நிலையில் வேளாண் விளை நிலங்கள் பறிக்கப்பட்டுவிடும் என சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். தொழில் துறை அமைச்சருடன் பேசிய பிறகு கம்பெனி நிலங்களை மட்டுமே தொழிற்பூங்காவுக்காக எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பயிர் செய்யக்கூடிய வேளாண் நிலங்களை விவசாயிகள் தாமாக முன்வந்து கொடுத்தால் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் என அரசு முடிவு செய்துள்ளது," என்றார்.

முதல்வர் அளித்த உறுதி

மேலும் இது பற்றிப் பேசிய ஆ.ராசா "வலுக்கட்டாயமாக யாருடைய நிலமும் கையகப்படுத்தப்படாது என முதல்வர் உறுதியளித்துள்ளார். பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் சார்ந்த திட்டங்கள் இங்கு வர உள்ளன. மாசுபாடு ஏற்படுத்தும் எந்த நிறுவனங்களும் இங்கு வராது. தனியார் நிலங்கள் எடுக்கப்படும் என்ற அரசாணை இருந்தாலும், அதற்கு மாறாக, தனியார் நிலங்கள் எடுக்கப்படாது என்று தமிழ்நாடு அரசின் சார்பில் பத்திரிகை செய்தி வெளியிடப்படும்," என்று கூறினார்.

"கம்பெனி நிலங்களை மட்டுமே வைத்து தொழிற்பூங்கா அமைத்துக் கொள்வோம். 700, 800 ஏக்கர் அளவில் கம்பெனி நிலங்கள் ஒருங்கிணைந்து சதுரமாக உள்ளன. அதை வைத்து தொழிற்பூங்கா அமைத்துக் கொள்ளலாம். எந்த தொழிற்சாலை வருகிறது எனப் பாருங்கள். அது மாசுபடுத்தும் தொழிற்சாலை எனத் தெரிந்தால் நிச்சயம் அனுமதி வழங்கப்படாது. தமிழ்நாடு அரசு மட்டுமில்லை, இந்திய அரசும் அனுமதி வழங்க வேண்டும். உச்சநீதிமன்றமும் சுற்றுச்சூழல் துறையை கண்காணித்து வருகிறது. அதனால் தவறு எதுவும் நடந்து விடாது.

தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடக்கும் அதே வேளையில் தொழிற்சாலை வேண்டும் என ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்," என்று ராசா தெரிவித்தார்.

"அண்ணாமலையின் அரசியல் எனக்குப் புரியவில்லை. பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு விற்கிறது மத்திய அரசு. இங்கே டான் டீயை மத்திய அரசிடம் கொடுங்கள் எனக் கேட்கிறார் அவர். அரசியல் செய்ய வேண்டும் என எதையும் பேசக்கூடாது." என்றும் ராசா கூறினார்.

விவசாயிகளின் கோரிக்கை

விவசாயிகள் போராட்டம்

இதைத்தொடர்ந்து ஆ.ராசாவின் அறிவிப்புக்கு எதிர்வினையாக அன்னூர் விவசாயிகள் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

போராட்டக் குழுவின் தலைவர் குமார ரவிக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "விவசாய நிலங்களை பறிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அறிவித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் எங்கள் நோக்கம் தொழிற்சாலையே வேண்டாம் என்பதுதான்," என்று கூறினார்.

அரசுக்கு எங்கள் கோரிக்கை என்னவென்றால் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். கிராம சபையில் ஏற்கனவே இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

2000 ஏக்கர் கம்பெனி நிலம் இருக்கிறது என ஆ.ராசா கூறியிருந்தார். அந்தக் கருத்து முற்றிலும் தவறு. அதிகாரிகள் அவரிடம் தவறான கருத்துக்களை தெரிவித்தார்களா எனத் தெரியவில்லை.

1,200 ஏக்கர் தான் கம்பெனி நிலம் உள்ளது, அதிலும் 200 ஏக்கர் நிலங்களை தனியார் வாங்கி தற்போது அங்கு விவசாயம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. அதுபோக 450 ஏக்கர் நிலம் சர்ச்சையில் உள்ளது.

இவை போக மீதமுள்ள நிலங்கள் தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன. ஆனால் அதுவும் முழுமையாக இல்லை. இரண்டு இடங்களில் மட்டும் தான் 100 ஏக்கர் நிலம் ஒருசேர உள்ளது. 700, 800 ஏக்கர் நிலம் ஒரு சேர இல்லை. தொழிற்சாலைகளே வேண்டாம்.

ஏற்கெனவே 200 ஏக்கரில் சாயப்பட்டறை அமைக்க முயற்சி நடந்தபோது விவசாயிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. நாங்கள் தொழிற்சாலைக்கு எதிரானவர்கள் இல்லை.

எங்கள் பகுதியில் மாசுபடுத்தாத தனியார் தொழிற்சாலைகள் கிராம மக்களின் அனுமதி பெற்று எங்களின் கண்காணிப்பில் இயங்கி வருகின்றன. விஸ்கோஸ் என்கிற தொழிற்சாலைக்கு எதிராக 13 ஆண்டுகள் விவசாயிகள் மட்டுமே போராடி தொழிற்சாலையை மூடினோம். தொழிற்சாலையின் பாதிப்புகளை நேரடியாக பார்த்துள்ளோம். அதனால் புதிதாக தொழிற்சாலைகளே தேவையில்லை என்பதே எங்களின் நிலைப்பாடு.

எங்கள் போராட்டத்திற்கு நிறைய அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எங்களை பாஜகவுடன் முடிச்சு போட வேண்டாம். மத்திய அரசும் கண்காணிக்கும் என ஆ.ராசா சொல்கிறார். மத்திய அரசு, மாநில அரசு என எந்த அரசாங்கம் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நிலம் கையகப்படுத்த விவசாயிகள் அனுமதிக்க மாட்டோம். அரசாணை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்.

அமைதியான முறையில் எங்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறும். உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறோம். விவசாய நிலம் வேண்டாம் என அறிவித்திருப்பது மகிழ்ச்சி. ஆனால் அரசாணையை ரத்து செய்யாமல் அறிவிப்பு மட்டும் வழங்குவதில் பலன் இல்லை. அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. அந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை எங்களின் போராட்டம் தொடரும். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக உள்ளோம்" என்று ரவிக்குமார் தெரிவித்தார்.

பேரணிக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் போராட்டம்

இந்த செய்தியாளர் சந்திப்புக்கு பின்னர் ஊர்வலம் சென்று மனு அளிக்க விவசாயிகள் அனுமதி கோரிய நிலையில் காவல்துறையினர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. 

இதனைத் தொடர்ந்து துணை வட்டாச்சியர் இல்யாஸ் நேரில் வந்து விவசாயிகளிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

அந்த மனுவில் அன்னூர் பகுதியில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு முந்தைய திமுக ஆட்சியில் அறிவித்தவாறு 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு அறிவித்த திடீர் முடிவு

இதற்கிடையே, தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 1630 ஏக்கர் தரிசு நிலம் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசின் தொழில்துறை சார்பில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

"தொழில் மற்றும் கல்வி துறைகளில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தி, முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் தமிழ்நாடு அரசு ஒரு தொழிற் பூங்காவை நிறுவ முடிவு எடுத்தது.

கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்க வைக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், மேற்படி தொழிற்பூங்கா அமைக்க 3862 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு. (அரசு ஆணை எண்.202, தொழில், மு.ஊ (ம) வர்த்தகத் (எம்.ஐ.இ.1) துறை, நாள் 10.10.2022) அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

அக்கோரிக்கையை கருத்தில் கொண்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும். தற்போது விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும். மேலும், எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும்.

விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு அவர்களின் நலனிற்காக மட்டுமே செயல்படும்.

இத்தொழிற்பூங்காவில் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும். எனவே, டிட்கோ மூலம் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான தரிசு நிலங்களில் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க தற்போது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஆ.ராசா தவறான கருத்துகளை கூறுவது கண்டனத்துக்குரியது' - அண்ணாமலை

விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்றும் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் தமிழ்நாடு தொழிற்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பாஜக வரவேற்றுள்ளது. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "விவசாய நிலங்கள் கையக்கப்படுத்தப்படாது என அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி. அதே சமயம் அரசு கொடுத்துள்ள வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும், இல்லையென்றால் பாஜக பெரிய அளவில் போராட்டம் நடத்தும். 50 கோடிக்கும் மேல் அமையும் தொழிற்சாலைகளை மத்திய அரசு கண்காணிக்கும் என ஆ.ராசா சொல்கிறார். அவர் மத்திய அமைச்சராக இருந்தாரா என்றே சந்தேகமாக உள்ளது.''

''1996 ஆம் ஆண்டு தான் இந்த விதி இருந்தது. அதன் பின்னர் இந்த வரம்பு காங்கிரஸ் ஆட்சியிலே 150 கோடி வரை உயர்த்தப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு கொள்கையின்படி தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ள வகையிலான தொழிற்சாலைகளுக்கு மாநில அரசே அனுமதி வழங்கலாம் என விதி தளர்த்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் தெரியாமல் தான் ஆ.ராசா பேசி வருகிறார். மேலும் நான்குநேரியில் உள்ள 2,000 ஏக்கர் தொழிற்பூங்காவில் 20 ஆண்டுகளாக எந்த தொழிற்சாலையும் வரவில்லை. அன்னூரில் தொழிற்பூங்கா யாரும் கேட்கவில்லை. நாங்குநேரிக்கு போகாமல் அன்னூருக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வருவது நிலத்திற்காக அல்ல நீருக்காக தான். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பவானி அணையின் நீர்வளம் வேண்டும். அதற்காக தான் தமிழ்நாடு அரசு இங்கு தொழிற்பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது," என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: