கிம் ஜாங் உன்னின் ‘மதிப்பிற்குரிய மகள்’ கிம் ஜூ ஏ தான் வட கொரியாவின் அடுத்த தலைவரா?

கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜூ ஏ என்பது யார்?

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு, வடகொரியாவின் அடுத்த வாரிசு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு பிறகு அவரது வாரிசாக கருதப்படும் அவரின் மகள் கிம் ஜூ ஏ தான் அவரது அரசியல் வாரிசா? அவரது பெயர் தற்போது செய்திகளில் அடிபடுவது ஏன்?

கிம் ஜூ ஏ வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் இளைய மகள் ஆவார். அது மட்டுமின்றி அவருக்கு அடுத்து நாட்டை கூட ஆளலாம். அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தென் கொரியாவின் உளவுத்துறை நிறுவனமான தேசிய புலனாய்வு சேவை (என்.ஐ.எஸ்) தெரிவித்துள்ளது.

யார் இந்த கிம் ஜூ ஏ?

தனது குடும்பம் குறித்து பல்வேறு ரகசியங்களை காத்து வருகிறார் கிம் ஜாங் உன். அதனால், அவரது குடும்பம் குறித்து பொதுவெளியில் மிகவும் குறைந்த தகவல்களே உள்ளன. அவரது மனைவியான ரீ சால் ஜுவை கூட திருமணத்திற்கு பிறகு சில காலம் ரகசியமாகவே வைத்திருந்தார். அதற்கு பின் முதன்முறையாக 2012-ஆம் ஆண்டு ஒரு பொது நிகழ்வில்தான் அவர் மக்கள் முன் தோன்றினார்.

அவர்கள் இருவரும் 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியிட்டது தென் கொரிய ஊடகம். 2010-ஆம் ஆண்டு அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது. மேலும், அந்த குழந்தைக்கு அடுத்து சில வருடங்கள் கழித்து பிறந்த கிம் ஜூ ஏ-வுக்கும் அவரே தாய் என்று நம்பப்படுகிறது.

கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜூ ஏ என்பது யார்?

பட மூலாதாரம், EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு, கிம் ஜூ ஏ-வின் பெயர் முதன்முறையாக 2013ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது.

யார் இந்த கிம் ஜூ யே?

கிம் ஜூ ஏ-வின் பெயர் முதன்முறையாக 2013-ஆம் ஆண்டு, ஓய்வுபெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரரான டென்னிஸ் ராட்மேன் வடகொரியா வந்த போது வெளிச்சத்திற்கு வந்தது. அவர் கிம்மின் குடும்பத்துடன் நேரத்தை கழித்ததாகவும், அவர்களுடன் கடற்கரையில் ஓய்வு எடுத்ததாகவும் மற்றும் அவர் ஜூ யே என்று அழைக்கப்பட்ட அவர்களது குழந்தையை கையில் ஏந்தியதாகவும் ஊடங்கங்களில் தெரிவித்திருந்தார்.

வட கொரிய ஊடகங்கள் கூட கிம் ஜூ ஏ-வை “அவரை கிம் ஜாங் உன்னின் மகள் என்று மட்டுமே அவரது பெயரையோ வயதையோ குறிப்பிடாமல்” கூறி வருவதாக தெரிவிக்கிறார் சியோலில் உள்ள கூக்மின் பல்கலைக்கழகத்தில் வட கொரிய அரசியலை ஆய்வு செய்து வரும் ஃபியோடர் டெர்டிட்ஸ்கி. "அதை தவிர பகிரங்கமாக வேறு எதுவும் தெரியவில்லை," என்று கூறுகிறார் அவர். மேலும் ஜூ யேவுக்கு 10 வயது வரை இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

கடந்த ஆண்டு ஒரு தனிப்பட்ட விளக்கவுரையில், அதிகாரப்பூர்வ கல்வி நிலையங்கள் எதிலும் கிம் ஜூ ஏ ஒருபோதும் பதிவு செய்யப்படவில்லை என்றும், பியோங்யாங்கில் உள்ள வீட்டிலேயே அவர் கல்வி கற்பதாகவும், தென்கொரிய அரசியல்வாதிகளிடம் தெரிவித்திருந்தது என்.ஐ.எஸ். அவர் குதிரை சவாரி, நீச்சல் மற்றும் பனிச்சறுக்கு போன்ற பொழுதுபோக்குகளை கொண்டிருப்பதாகவும் அது தெரிவித்திருந்தது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கிம் ஜாங் உன் குறிப்பாக ஜு யேவின் குதிரை சவாரி திறமையில் திருப்தியடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஜூ ஏ-வுக்கு ஒரு அண்ணன் மற்றும் பாலினம் உறுதிப்படுத்தப்படாத ஒரு இளைய சகோதரர் இருப்பதையும் என்.ஐ.எஸ் தெரிவித்துள்ளது. ஆனால், அவர்கள் யாரையும் இதுவரை பொதுவெளியில் கண்டதில்லை.

கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜூ ஏ என்பது யார்?

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு, வட கொரிய அரசாங்கம் கிம் ஜு ஏ என்று அழைக்கப்படும் யாராவது இருந்தால் தங்களது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்முறை பொதுவெளியில் தோன்றிய தருணம்

கிம் ஜூ ஏ முதன்முதலில் 2022 நவம்பரில் தான் பொதுவெளியில் தோன்றினார். அப்போது தனது தந்தையோடு ஏவுகணை சோதனையை பார்க்க வந்திருந்தார். அன்றிலிருந்து ராணுவம் சார்ந்த மற்றும் சாராத பல நிகழ்வுகளில் அவர் தனது தந்தையுடன் கலந்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் கூட, பியாங்யாங்கின் மே 1 ஸ்டேடியத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில், அவரும் அவரது தந்தையும் ஒருவருக்கொருவர் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டனர்.

டிசம்பர் மாதம், அவர்கள் இருவரும் வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் திட-எரிபொருள் பாலஸ்டிக் ஏவுகணையான (ICBM) Hwasong-18 ஏவுதல் நிகழ்வில் கலந்து கொண்டனர். இது நாட்டின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் மேம்படுத்தப்பட்ட நீண்ட தூர ஏவுகணையாகும். மேலும், நவம்பரில் நடந்த மல்லிகியோங்-1 உளவு செயற்கைக்கோள் ஏவப்படும் போதும் கூட ஜூ ஏ தனது தந்தையுடன் காணப்பட்டார். இந்த செயற்கைக்கோள் கிம் ஜாங் உன்னுக்கு வெள்ளை மாளிகையின் பார்வையை வழங்கும் என்று பியோங்யாங் கூறியது.

பிப்ரவரி 2023-இல், வட கொரிய அரசாங்கம் கிம் ஜு ஏ என்று அழைக்கப்படும் யாராவது இருந்தால் தங்களது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக ரேடியோ ஃப்ரீ ஏசியா தகவல் ஒளிபரப்பியது.

இந்நிலையில் கிம் ஜு ஏ தற்போது 'பிரியமான மகள்' என்று குறிப்பிடப்படாமல், 'மதிப்பிற்குரிய மகள்' என்று குறிப்பிடப்படுகிறார் என்றும் வட கொரியவை உற்றுநோக்குபவர்கள் தெரிவிக்கின்றனர். 'மதிப்பிற்குரிய' என்ற சொல் வட கொரியாவின் மிகவும் மரியாதைக்குரியவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, கிம் ஜாங் உன்னின் விஷயத்தில் கூட, அவர் வருங்காலத் தலைவர் என்ற அந்தஸ்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, 'மதிப்பிற்குரிய தோழர்' என்று அழைக்கப்பட்டார்.

கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜூ ஏ என்பது யார்?

பட மூலாதாரம், PA MEDIA

படக்குறிப்பு, 1948ஆம் ஆண்டில் வடகொரியா நிறுவப்பட்டதில் இருந்து, அது கிம் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களாலேயே ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது.

அடுத்த வாரிசாவது சாத்தியமா?

வடகொரியா தீவிரமான ரகசியம் காக்கும் நாடாக இருப்பதால், தனது தந்தைக்கு அடுத்ததாக ஏன் அதிகமாக பொதுவெளியில் கிம் ஜூ ஏ தோன்றி வருகிறார் என்பது பலருக்கும் தெளிவாக தெரியாத ஒன்றாகவே உள்ளது.

வட கொரியாவின் குடிமக்களுக்கு கிம் குடும்பம் ஒரு புனிதமான இரத்த வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களால் மட்டுமே நாட்டை வழிநடத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சில ஆய்வாளர்கள் இதுகுறித்து பேசுகையில், இவ்வளவு சிறு வயதிலேயே கிம் ஜூ ஏ-வை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவது, அவர் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே மக்கள் முன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதை உறுதி செய்வதற்கான வழியாகும் என்று கூறுகின்றனர்.

எதுவாக இருந்தாலும் இன்னும் சில காலங்களுக்கு எந்த விதமான ஆட்சி மாற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. இதற்கு முன்னாள் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து பரவிய வதந்திகள் கூட நிராகரிக்கப்பட்டு விட்டன.

மேலும் சிலர், கிம் ஜாங் உன்னுக்கு ஒரு தீவிரமான ஆணாதிக்க சமூகத்தில் தான் ஒரு அக்கறையுள்ள குடும்பஸ்தன் என்பதை அடையாளம் காட்டிக் கொள்ள இது ஒரு வழியாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

"வடகொரியாவின் முன்னாள் தலைவர்களாக கிம் ஜாங் இல் மற்றும் கிம் இல் சுங் ஆகியோர் இருந்தபோது, வட கொரியத் தலைவரின் பாத்திரமானது அவர்களின் தாய்வழி மற்றும் தந்தைவழி நபரை மையமாகக் கொண்டு நிறைய பிரச்சாரங்கள் இருந்தன" தெரிவிக்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அரசியல் விரிவுரையாளரும் கொரிய தீபகற்பத்தின் நிபுணருமான எட்வர்ட் ஹோவெல். "எனவே இந்த அடையாளம் தற்போது ஜூ ஏ-வை அவரது தந்தையுடன் பொதுவில் முன்னிலை படுத்துவதின் மூலம் தொடர்கிறது என்று நான் நினைக்கிறேன்."

1948ஆம் ஆண்டில் வடகொரியா நிறுவப்பட்டதில் இருந்து, அது கிம் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களாலேயே ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. ஒருநாள் தனது தந்தைக்கு பிறகு கிம் ஜூ ஏ அந்த இடத்தை பிடிப்பாரானால் அவரே வடகொரியாவின் முதல் பெண் தலைவராக இருப்பார்.

ஆனால் "வட கொரிய தலைமையை பொறுத்தவரை கிம் குடும்பத்தின் உறுப்பினராக இருப்பது மிகவும் முக்கியமானது, அதுவே ஒரு பெண் எனும் பட்சத்தில், கிம் குடும்பத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர் என்றால் சிறந்தது" என்று குறிப்பிடுகிறார் ஹோவெல்.

கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜூ ஏ என்பது யார்?

பட மூலாதாரம், KCNA/EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு, கிம் ஜு ஏ-வை விட மிகவும் வயதானவர் மற்றும் வட கொரிய அரசியலில் அதிக அனுபவம் உடையவர் கிம் யோ ஜாங்

அடுத்த தலைமைக்கு எத்தனை போட்டியாளர்கள் உள்ளனர்?

வடகொரியாவில் கிம் ஜாங் உன்னுக்கு அடுத்ததாக தலைமையை பிடிக்க மேலும் ஒரு சாத்தியமான போட்டியாளர் இருப்பதாக நம்புகிறார் இவர். அது கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங். இவர் முதன்முதலில் 2014 மார்ச்சில் அதிகாரபூர்வமாக அந்நாட்டு ஊடகத்தில் குறிப்பிடப்பட்டார். தற்போது ஆளும் தொழிலாளர் கட்சியில் முக்கியமான மூத்த பதவியில் உள்ளார்.

"அவர் கிம் ஜு ஏ-வை விட மிகவும் வயதானவர் மற்றும் வட கொரிய அரசியலில் அவருக்கு அதிக அனுபவமும் உள்ளது" என்று கூறுகிறார் அவர். "எனவே அது மகளாக இருந்தாலும் சரி, சகோதரியாக இருந்தாலும் சரி, இருவருமே பெண்ணாக இருக்கலாம், ஆனால் அவர்கள் கிம் குடும்பமாக இருப்பதே மிக முக்கியமான விஷயம்."

மேலும் “பல மாறுதல்கள்" இருப்பதால் "அனைத்து சாத்தியக்கூறுகளையும்" இன்னும் பரிசீலித்து வருவதாக கூறியுள்ளது தென் கொரியாவின் என்ஐஎஸ்.

கிம் ஜூ ஏ-வை பொதுவில் காண்பிப்பதன் மூலம், "அடுத்த சாத்தியமான வாரிசுக்காக பொதுமக்கள் மற்றும் உயர்தட்டு வர்க்கத்தின் கருத்தை கிம் ஜாங் உன் சோதித்து வருகிறார்" என்று நம்புகிறார் ஃபியோடர் டெர்டிட்ஸ்கி.

சரியான காலம் வருவதற்கு முன்னதாகவே கிம் ஜாங் உன்னின் வாரிசு குறித்து பேசப்படுகிறது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

"கிம் ஜாங் உன், அவரது தந்தை இறந்த அதே வயதான 70 வயதில் இறப்பாரானால் , அப்போது 2054-ஆம் ஆண்டு ஆகியிருக்கும். வட கொரிய அரசு அதன் தற்போதைய வடிவத்திலேயே அதுவரை நீடித்திருக்கும் என்று நாம் வைத்துக்கொண்டாலும் கூட, அனேகமாக தற்போதுள்ள சமூகத்தை போலவே அப்போதும் இருக்காது" என்று அவர் கூறுகிறார்.

"மேலும் அவர் , பொதுவில் பாலின சமத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கும், ஒரு பெண் ஆட்சியாளரை ஏற்றுக்கொள்வதற்கும் வித்தியாசம் இருப்பதை ஒருவர் கவனிக்க வேண்டும்," என்று கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)