ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் சௌதி லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் அல் நாசர் அணி

பட மூலாதாரம், Getty Images
ரொனால்டோ, கிளப் போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக நடப்பு சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி 3 கோல்களை மட்டுமே அவர் அடித்திருந்தார், அதிலும் ஒன்று பெனால்டி மூலம் கிடைத்தது.
இப்போது அல் நாசர் அணிக்காக கடந்த 6 ஆட்டங்களில் 8 கோல்களை அடித்து அசத்தி இருக்கிறார் முன்கள ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இது மட்டுமின்றி 2 கோல்கள் அடிக்க உதவி செய்தும்(அசிஸ்ட்-Assit) அசத்தி இருக்கிறார் இந்த நட்சத்திர வீரர்.
அல் நாசர் vs டமக்

பட மூலாதாரம், Getty Images
சௌதி அரேபியாவில் நடக்கும் கால்பந்து போட்டியான, 'சௌதி புரோ லீக்' தொடரில் நேற்று (பிப். 25) நடந்த போட்டியில் நட்சத்திர வீரரான ரொனால்டோ விளையாடும் அல் நாசர் அணி, டமக் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் சௌதி லீக் போட்டிகளில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறலாம் என்ற நம்பிக்கையுடன் அல் நாசர் அணி களம் கண்டது.
அந்த அணியின் முன்கள ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ நல்ல ஃபார்மில் இருந்தது அல் நாசர் அணிக்கு கூடுதல் உத்வேகத்தை வழங்கியிருந்தது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அல் நாசர் அணி தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்து வந்தது.
ரொனால்டோவின் பெனால்டி
அல் நாசர் அணியின் கோல் முயற்சிகளை தடுக்க டமக் அணி முயற்சி செய்த போது, ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் டமக் அணியின் கேப்டன் ஒரு சிறிய தவறை செய்தார்.
அல் நாசர் அணியில் கோல் அடிக்கும் முயற்சியின் போது D பாக்ஸில் டமக் அணியின் கேப்டனான இப்ராஹிம் கையில் பந்து பட்டதால், நடுவர் ஹேண்ட் பால் அறிவித்து பெனால்டியை வழங்கினார்.
எதிரணியின் தவறால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வீணாக்காமல் கோல் கீப்பரை ஏமாற்றி வலைக்குள் திணித்தார் ரொனால்டோ.
அல் நாசர் அணி 1-0 என முன்னிலை பெற்றாலும், தொடர்ந்து அட்டாங்கிங் செய்து வந்தது.
அந்த அணியின் ஃபார்வர்ட் வீரர்கள் பந்தை தொடர்ந்து எதிரணியின் கோல் ஏரியாவுக்குள்ளேயே வைத்திருந்தனர்.
ஹாட்ரிக் அடித்த ரொனால்டோ
கோல் அடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்ட அல் நாசர் அணிக்காக இரண்டாவது கோலையும் அடித்து அசத்தினார் ரொனால்டோ.
முதலாவது கோல் அடித்த 5 நிமிடத்திலேயே, இரண்டாவது கோலை தனது weak foot ஆன இடது காலால் லாவகமாக அடித்தார் ரொனால்டோ.

பட மூலாதாரம், Getty Images
அவரது கோல் தாகம் அத்துடன் அடங்கவில்லை. ஆட்டத்தின் முதல் பாதி முடிய 1 நிமிடம் இருக்கையில் மீண்டும் ஒரு கோலடித்து அல் நாசர் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்படுத்தினார்.
அல் நாசர் அணியின் கரீப் கொடுத்த வைடு பாஸை பெற்ற அய்மென் யாயா, அதை ரொனால்டோவுக்கு பாஸ் செய்தார். அதை பெற்றுக் கொண்ட ரொனால்டோ நொடியும் தாமதிக்காமல் வலைக்குள் அனுப்பி தனது ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
அல் நாசர் அணிக்காக ரொனால்டோ இந்த சீசனில் அடிக்கும் இரண்டாவது ஹாட்ரிக் கோல் இதுவாகும். முன்னதாக பிப்ரவரி 9ஆம் தேதி அல் வேதா அணிக்கு எதிரான போட்டியில் 4 கோல் அடித்திருந்தார்.
ரொனால்டோ விளையாடிய கடைசி 3 போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக் கோல்கள் உட்பட 7 கோல்களை அவர் அடித்துள்ளார். மேலும் கடந்த போட்டியில் 2 அசிஸ்ட் செய்து அல் நாசர் அணி வெற்றி பெற முக்கியமானவராக திகழ்ந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
புள்ளிப் பட்டியலில் முதலிடம்
டமக் அணியுடனான முதல் பாதியிலேயே 3-0 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணி முன்னிலை பெற்று இருந்தது.
அந்த முன்னிலையுடன் இரண்டாவது பாதியில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை தக்க வைத்தது.
அந்த அணியின் குஸ்டாவோ தடுப்பாட்டத்தை சிறப்பாக கையாண்டார். டமக் அணியை தனது கட்டுப்பாட்டில் பந்தை வைத்திருக்க விடாமல் பாஸ்களை தொடர்ந்து கடத்திக் கொண்டே இருந்தார்.
இதன் காரணமாக டமக் அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட போட முடியவில்லை.
இரண்டாவது பாதியிலும் ரொனால்டோ தனது ஆதிக்கத்தை செலுத்தி வலைக்குள் மீண்டும் பந்தை அனுப்பினார். ஆனால் நடுவர் அதை ஆஃப் சைடு என அறிவித்ததால் அது கோலாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இறுதியில் அல் நாசர் அணி, 3-0 என்ற கோல் கணக்கில் டமக் அணியை வீழ்த்தியது.

பட மூலாதாரம், spl.com
இந்த வெற்றியின் மூலம் சௌதி புரோ லீக்கில் அல் நாசர் அணி முதலிடம் பெற்றது.
நேற்று அல் இட்டிஹாத் - அல் ரீத் அணிக்கான போட்டி சமனில் முடிந்ததையடுத்து டமக் அணியுடனான வெற்றியின் மூலம் கிடைத்த 3 புள்ளிகளுடன் அல் நாசர் அணி முதலிடத்தை பிடித்தது.
கோல் போட்டியில் ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images
போட்டிக்குப் பிறகு பேசிய ரொனால்டோ, "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது அணியுடன் நான் மிகவும் இணக்கமாக இருக்கிறேன். எனது சக வீரர்களின் நகர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு ஏற்ப நானும் களத்தில் நகர்கிறேன். இது அணிக்கு மிக முக்கியமானது."
சௌதி புரோ லீக்கில் தற்போது அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 8 கோல்கள் அடித்து நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்த சீசனில் அல் நாசர் அணிக்காக ஜனவரி மாதம் களமிறங்கிய அவர், 5 போட்டிகளில் 8 கோல்கள் அடித்துள்ளார்.
இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிக்க இன்னும் 5 கோல்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், விரைவில் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த பட்டியலில் ரொனால்டோவின் சக அணி வீரரான ஆண்டர்சன் டலிஸ்கா 14 போட்டிகளில் விளையாடி 13 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












