லெபனான்: இஸ்ரேல் தாக்குதலால் தலைநகர் நோக்கிப் படையெடுக்கும் மக்கள் - புகைப்படத் தொகுப்பு

பட மூலாதாரம், Getty Images
இன்று (செப்டெம்பர் 25) காலை லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக திங்கள் கிழமை அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில், 550 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் 50 குழந்தைகள், 94 பெண்கள் மற்றும் பல மருத்துவப் பணியாளர்களும் அடங்குவர் என்றும் செவ்வாயன்று (செப்டெம்பர் 24) நடந்த செய்தியாளர் சந்திப்பில் லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர் ஆபியத் தெரிவித்தார்.
தாக்குதல்களில் காயமடைந்த 1,835 பேருக்கு, 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், நூற்றுக்கணக்கான ஹெஸ்பொலா தளங்களைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறுகிறது. மேலும் ஹெஸ்பொலா அமைப்பு குடியிருப்புப் பகுதிகளில் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
அதேநேரத்தில், ஹெஸ்பொலா 300க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வடக்கு இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் அதிகரித்து வரும் நிலையில், இரு தரப்பும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2006ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஹெஸ்பொலா உருவாக்கியுள்ள ராணுவ கட்டமைப்புகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக லெபனானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock
பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜப்பான், சௌதி அரேபியா, தென் கொரியா, அமெரிக்கா உட்படப் பல நாடுகளும் தங்கள் குடிமக்களை லெபனானை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளன.

பட மூலாதாரம், EPA
தெற்கு லெபனானில் இருந்து தலைநகர் பெய்ரூட் நோக்கிச் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதால், வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், EPA
தலைநகர் பெய்ரூட்டில் தங்க இடமின்றி, பொதுமக்கள் கார்களில் வசித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இடம்பெயர்ந்த மக்கள் 28,000 பேர், தற்போது நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர் என்று லெபனான் அரசு கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
"பெரும்பாலான மக்கள் சில நிமிடங்களில் எதையும் எடுத்துக் கொள்ளாமல், தங்கள் வாகனங்களில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.
அவர்களில் சிலர் தங்கள் வீடுகள் அழிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறார்கள், சிலர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உடன் பிறந்தவர்கள் கொல்லப்பட்டதையோ அல்லது காயமடைந்ததையோ நேரில் பார்த்திருக்கிறார்கள்.
அதனால் தலைநகர் பெய்ரூட்டை அடைந்தவர்கள் பெரும் அதிர்ச்சி மற்றும் மன உளைச்சலில் உள்ளனர்," என்று கூறுகிறார் ஐ.நா. யுனிசெஃப் (UNICEF) அமைப்பின் பிரதிநிதி எட்வர்ட் பெபீடர்.

பட மூலாதாரம், EPA

பட மூலாதாரம், Reuters
ஹெஸ்பொலா ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கும் பகுதிகளைக் காலி செய்யுமாறு லெபனான் மக்களை இஸ்ரேல் எச்சரித்துள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












