இந்தியா மீது இரான் கோபம் - இருநாட்டு உறவில் பாகிஸ்தான் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன? ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி இந்தி
சமீபத்தில் இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் நிலை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
முஸ்லிம்கள் துன்புறுத்தப்படும் நாடுகளை குறிப்பிட்டு அந்தப் பட்டியலில் இந்தியாவின் பெயரையும் அவர் சேர்த்தார்.
இதற்கு பதிலளித்த இந்தியா, இரான் தலைவரின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, அது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தது.
இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள் மிகவும் பழமையானவை மற்றும் சுவாரசியமானவை. இது 'இரண்டு நாகரிகங்களுக்கு இடையிலான உறவு' என்று அழைக்கப்படுகிறது.
இந்த உறவுகள் வரலாற்று ரீதியாக என்னென்ன ஏற்ற இறங்கங்களை கடந்து வந்துள்ளன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

1971 போர் மற்றும் இரான்

பட மூலாதாரம், Getty Images
1971 ஆம் ஆண்டின் இந்திய-பாகிஸ்தான் போரின் போது இரானின் ஷா, பாகிஸ்தான் பிளவுபடுமோ என்று கவலைப்பட்டார்.
இதற்குப் பின்னால் இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவதாக, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், இரானுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இரண்டாவதாக அந்த நேரத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு சோவியத் யூனியன் அப்பகுதியில் தலையிட வாய்ப்பு ஏற்பட்டுவிடுமோ என்று அவர் பயந்தார்.
ஸ்ரீநாத் ராகவன் தனது '1971 குளோபல் ஹிஸ்டரி ஆஃப் கிரியேஷன் ஆஃப் பங்களாதேஷ்' என்ற புத்தகத்தில், "1971 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் வெளியுறவுச் செயலர் டி.என். கெளல் ஷாவை சந்திக்க டெஹ்ரானுக்குச் சென்றார். இரான் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை அனுப்பியதாக இந்தியாவுக்கு உளவுத் தகவல் கிடைத்திருந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
"பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொடுக்க வேண்டாம் என்றும் ஒரு பெரிய நெருக்கடியாக மாறும் விதமாக விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கானிடம் விளக்குமாறும் ஷாவிடம் கெளல் கேட்டுக் கொண்டார். ஆனால் இந்த சந்திப்பிற்கு முன்பே இரானின் ஷா, அவருடைய கொள்கையை மாற்றிக்கொள்ளுமாறு யாஹ்யா கானிடம் கூறியிருந்தார்.” என்று அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
முகமது யூனுஸ் தனது ‘பூட்டோ அண்ட் தி பிரேக்அப் ஆஃப் பாகிஸ்தான்’ என்ற புத்தகத்தில், “அரசியல் நடவடிக்கை எடுக்க தான் யாஹ்யாவிடம் கோரிக்கை விடுத்ததாக ஷா பின்னர் பூட்டோவிடம் கூறினார். ஷேக் முஜிப்பின் அவாமி லீக் கட்சி ஆட்சி அமைக்க வழி வகுக்கப்பட வேண்டும் என்பதே எனது ஆலோசனை என்றும் அவர் தெரிவித்தார்,” என்று எழுதியுள்ளார்.
இந்திரா காந்திக்கு இரானின் ஷாவிடமிருந்து செய்தி

பட மூலாதாரம், Getty Images
1971 ஜூன் 23 ஆம் தேதி இந்தியாவுக்கான இரான் தூதர் பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து, அவரும் யாஹ்யா கானும் ஒருவரையொருவர் சந்தித்து பேச வேண்டும் என்ற ஷாவின் வாய்மொழிச் செய்தியை தெரிவித்தார்.
”இது ஒரு 'விசித்திரமான ஆலோசனை, யதார்த்தத்துடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாதது' என்று இந்திரா காந்தி கருதினார்,” என்பதை பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் (முன்பு நேரு மெமோரியல் என்று அழைக்கப்பட்டது) வைக்கப்பட்டுள்ள ஹக்ஸர் ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.(பிரதமர் இந்திராகாந்தியின் முதன்மை செயலர் பி. என். ஹக்ஸர்)
இந்திரா காந்தி உடனடியாக தனது அமைச்சர் ஒருவரை ஷா பஹ்லவியை சந்திக்க அனுப்பினார். மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று ஷாவிடம் தெரிவிக்கப்பட்டது.
ஷாவின் யோசனைக்கு கடிதம் மூலம் பதிலளித்த இந்திரா காந்தி, “பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட பிரச்னையின் தீவிரத்தை உங்களுக்கு புரிய வைப்பதில் நாங்கள் வெற்றிபெறவில்லை என்பதை உங்களின் இந்த யோசனை எங்களுக்கு தெரியப்படுத்துகிறது,” என்று எழுதியிருந்தார். (ஹக்ஸர் ஆவணங்கள், கோப்பு 168)
பாகிஸ்தானுக்கு ஆயுதம் அனுப்பியது பற்றிய கேள்வி

பட மூலாதாரம், Oxford University Press
1971 போருக்கு முன்பு பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை அனுப்புவதற்கான பல வழிகளை அமெரிக்கா பரிசீலித்தது. அதில் இரானும் அடங்கும்.
“சோவியத் யூனியனுடன் மோதலை விரும்பாததால் பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் மற்றும் விமானிகளை அனுப்பவில்லை என்று அமெரிக்க தூதரிடம் ஷா கூறினார். விமானத்தை ஜோர்டனுக்கு அனுப்ப தான் தயாராக இருப்பதாகவும், ஜோர்டன் விரும்பினால் விமானங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பலாம் என்று அவர் பரிந்துரைத்தார்,” என்று ஸ்ரீநாத் ராகவன் எழுதியுள்ளார்.
"உண்மையில், இந்தியா-பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் கராச்சியின் வான் பாதுகாப்பிற்கு இரான் பொறுப்பு என்று இரான் பாகிஸ்தானுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது," என்று முகமது யூனுஸ் எழுதுகிறார்.
"யாஹ்யாவும் இந்த ஒப்பந்தத்தை இரானுக்கு நினைவூட்டினார். ஆனால் ஷா தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான சண்டை இரண்டு நாடுகளுக்கு இடையிலான சண்டை மட்டும் அல்ல என்பது அவரது வாதம்." என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதில் இரானின் ஆர்வம்

பட மூலாதாரம், Getty Images
குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் 1932 இல் இரான் சென்றிருந்தார். இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் உறவு இல்லாத காலம் அது. இந்தியா பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. இரான் சுதந்திர நாடாக இருந்தபோதிலும் ஆங்கிலேய செல்வாக்கின் கீழ் இருந்தது.
14 ஆம் நூற்றாண்டின் பாரசீக கவிஞர் ஹாஃபேஸின் கவிதைகளை தாகூர் மிகவும் விரும்பினார். ஷிராஜில் உள்ள அவரது கல்லறைக்கும் தாகூர் சென்றார்.
சுதந்திரத்திற்கு முன் இந்தியாவின் எல்லை இரானுடன் இருந்தது. ஆனால் பிரிவினைக்குப் பிறகு எல்லாம் மாறிவிட்டது.
1953 இல் இரானின் ஷா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது இரான் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவளிக்க முடிவு செய்தது. அதேநேரத்தில் இந்தியா அணிசேரா கொள்கையைத் தேர்ந்தெடுத்தது.
பாகிஸ்தானை முதலில் அங்கீகரித்த நாடு இரான். 1965 மற்றும் 1971 ஆகிய இரு போர்களிலும் அந்த நாடு பாகிஸ்தானை ஆதரித்தது.
1969 இல் இரானின் ஷா முதன்முறையாக இந்தியா வந்தார். இந்திரா காந்தி 1973 இல் இரானுக்கு பயணம் மேற்கொண்டார்.
ஷா மீண்டும் 1974 அக்டோபரில் இந்தியா வந்தார். இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனைக்கு சில மாதங்களுக்குப் பிறகு இந்தப் பயணம் நடந்ததால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தப் பயணத்திற்குப் பிறகு இந்தியா இரானில் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யத் தொடங்கியது. மேலும் குத்ரேமுக் இரும்புத் தாது திட்டத்தை மேம்படுத்தவும் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
இஸ்லாமியப் புரட்சிக்குப் பிந்தைய நிலைமை

பட மூலாதாரம், Getty Images
1979 ஆம் ஆண்டின் இஸ்லாமியப் புரட்சி இரானின் உள் மற்றும் வெளி சூழ்நிலைகளை மாற்றியது. ஆனால் காஷ்மீர் மீதான இரானின் நிலைப்பாடு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் நெருக்கம் ஆகியன இருந்தபோதிலும் இரானின் புதிய தலைமை இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருந்தது.
1980கள் மற்றும் 1990களில் இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நாடாக இரான் விளங்கியது.
இரு நாடுகளும் சாபஹார் துறைமுகத் திட்டத்திலும், மத்திய ஆசியாவை ஆப்கானிஸ்தானுடன் இணைப்பதிலும் ஒன்றிணைந்து செயல்பட்டன.
தாலிபன் எழுச்சிக்குப் பிறகு அதை எதிர்த்து போராடிய புர்ஹானுதீன் ரப்பானி தலைமையிலான வடக்குக் கூட்டணிக்கு இந்தியா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளின் ஆதரவும் இருந்தது. அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கும் தாலிபனுக்கும் இடையிலான உறவுகள் உலகம் அறிந்தவை.
சாபஹார் துறைமுகத்தின் மேம்பாடு

பட மூலாதாரம், Getty Images
2003 ஆம் ஆண்டில் இரான் அதிபர் முகமது காத்மியின் இந்திய பயணத்தின் போது, இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையில் 'டெல்லி பிரகடனம்' கையெழுத்தானது. இதன் கீழ் பிராந்திய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் ஆப்கானிஸ்தானை அடையும் வகையில் சாபஹார் துறைமுகத்தை மேம்படுத்துவது, இந்தியா-இரான் உறவுகளின் மையப்புள்ளியாக மாறியது.
இரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்த போது இந்த உறவுகள் சவால்களை எதிர்கொண்டன. இந்தத் தடைகளை நடைமுறைப்படுத்த இரானிய எண்ணெயை வாங்க வேண்டாம் என்று இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது.
இதையெல்லாம் மீறி சாபஹார் திட்டத்தில் இந்தியாவின் ஆர்வம் அப்படியே இருந்தது.
இந்தியா, இரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளையும் இணைக்கும் எண்ணெய் குழாய் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறு தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா பின்னர் திட்டத்தில் இருந்து விலகியது.
இரானுக்கு எதிராக இந்தியாவின் வாக்கு

பட மூலாதாரம், Hurst Publishers
2009ஆம் ஆண்டு இரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்ததால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
அவினாஷ் பாலிவால் தனது 'மை எனிமீஸ் எனிமி’ என்ற புத்தகத்தில், ”2009 இல் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) மன்றத்தில் இரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே கணிசமான பதற்றம் ஏற்பட்டது,” என்று எழுதியுள்ளார்.
ஆனால் அதன்பிறகு 2013 இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும், 2016 இல் பிரதமர் நரேந்திர மோதியும் இரானுக்கு பயணம் மேற்கொண்டனர்.
இது தவிர இஸ்ரேல் மற்றும் செளதி அரேபியாவுடனான இந்தியாவின் ஆழமான உறவுகள் இரானுடனான இந்தியாவின் உறவில் தாக்கத்தை ஏற்படுத்துவது இயற்கையானதே.
இரானுடனான வர்த்தகம் மற்றும் எரிசக்தி உறவுகள் மூலம் இந்த தாக்கத்தைக்குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் வேறுபாடுகள் அப்படியே இருந்தன.
தி கார்டியன் நாளேட்டில் 'ஆப்கான் தாலிபன் செண்ட் டெலிகேஷன் டு இரான்’ என்ற தலைப்பில் எம்மா கிரஹாம் ஹாரிசன் எழுதிய கட்டுரையில், "ஆப்கானிஸ்தானுக்குள்ளேயே இரானிய உளவு அமைப்புகள், ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் ஒரு பிரிவு மற்றும் பிற அமெரிக்க எதிர்ப்பு பிரிவுகளுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டன. அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கத் தொடங்கின,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சாபஹார் துறைமுகம் மற்றும் ஜரஞ்ச்-தெலாராம் நெடுஞ்சாலையில் இந்தியாவின் முதலீடு, இந்தியா-இரான்-ஆப்கானிஸ்தான் உறவுகளுக்கு முத்தரப்பு மூலோபாய விரிவாக்கத்தை அளித்தது.
இந்த நெடுஞ்சாலை இரானை ஆப்கானிஸ்தானுடன் இணைக்கிறது மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை அனுப்ப இந்தியா இரானிய நிலத்தை பயன்படுத்தலாம்.
ஆப்கானிஸ்தானில் கட்டப்பட்ட சல்மா அணை தொடர்பாக இரானின் கோபம்

பட மூலாதாரம், Getty Images
இந்தியா ஆப்கானிஸ்தானில் சல்மா அணையைக் கட்டியது. இது காபூலுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் இந்தியா மீது இரான் கோபம் அடைந்தது.
“ஹரிரூத் நதியில் கட்டப்பட்ட இந்த அணையை இரான் விரும்பவில்லை. சல்மா அணையின் காரணமாக இரானுக்கு செல்லும் தண்ணீர் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. நீர் பங்கீடு விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே அவநம்பிக்கையின் வரலாறு ஏற்கனவே உள்ளது,” என்று அவினாஷ் பாலிவால் எழுதுகிறார்.
முன்னதாக 1971ஆம் ஆண்டு ஹெல்மண்ட் நதி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு இடையே கடும் வார்த்தைப் பரிமாற்றம் நடந்தது.
1998 இல், மஸார்-இ-ஷரீப்பில் இரானிய தூதரக அதிகாரிகள் கடத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தாக்கப்போவதாக இரான் அச்சுறுத்தியது.
"தாலிபன் அரசு ஹெல்மண்ட் நதியை தெற்குப் புறமாக திருப்பியதன் மூலம் ஹமூன்-இ-ஹெல்மண்ட் ஏரியை வற்றச்செய்துவிட்டது. இதனால் அந்தப் பகுதியின் பயிர்கள் மற்றும் வனவிலங்குகள் அழிந்தன," என்று அவினாஷ் பாலிவால் எழுதியுள்ளார்.
2005 பிப்ரவரி 28 ஆம் தேதி அப்போதைய இரானிய வெளியுறவு அமைச்சர் கமல் கராசி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து சல்மா அணை கட்டுமானம் தொடர்பாக அதிகாரப்பூர்வ புகார் அளித்தார்.
இந்த விவகாரத்தில் இரானும் ஆப்கானிஸ்தானும் பரஸ்பரம் பேச வேண்டும் என்று இந்தியா கூறியது.
இந்தியாவிற்கு இரானின் முக்கியத்துவம்

பட மூலாதாரம், @nitin_gadkari
ஷியா இரானுக்கும் சன்னி தாலிபனுக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்படும் போது, இந்தியாவால் அதை ஏன் செய்ய முடியாது என்ற கேள்வியை இரான்-தாலிபன் செயல் உத்தி கூட்டணி எழுப்பியது.
பல விஷயங்களில் இரானுடனான உறவில் விரிசல் மற்றும் அமெரிக்க எதிர்ப்புகள் இருந்த போதிலும், சாபஹார் போன்ற திட்டங்களில் இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகின்றன.
அமெரிக்காவுடனான இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகள், சீனாவுடன் அதிகரிக்கும் இரானின் நெருக்கம், வளைகுடா மற்றும் ஆப்கானிஸ்தானின் பிராந்திய அரசியல் மற்றும் தாலிபன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது போன்ற விஷயங்கள், இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையே இடைவெளியை அதிகரிக்கவில்லை.
இரான் மீது அமெரிக்கத் தடைகள் இருக்கும் போதிலும், இரானின் உதவியுடன் நிலையான எரிசக்தி விநியோகத்தை பராமரிப்பதில் இந்தியா முழு ஆர்வத்துடன் உள்ளது.
மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் இரான், தனது எண்ணெய் ஏற்றுமதியின் முக்கிய இலக்காக இந்தியாவை கருதுகிறது.
அரசியல் பதற்றம் இருக்கும் போதிலும் இந்தியாவுக்கு, செயல் உத்தி ரீதியிலான இரானின் முக்கியத்துவம் குறையவில்லை.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












