“வாக்குக்கு மட்டும்தான் சமூக நீதியா?” - திமுகவை திணறடிக்கும் தலித் குரல்கள்

பட மூலாதாரம், Facebook/பா ரஞ்சித்
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
சினிமாவில் தனது அரசியலை வெளிப்படுத்த தயங்காத இயக்குனர் பா.ரஞ்சித் இப்போது திமுகவுக்கு எதிரான தனது முகநூல் பதிவில் “உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூகநீதியா?” என்று காத்திரமாகவே கேட்டுள்ளார்.
பட்டியல் சாதி இயக்கங்களின் அதிகாரம் குறித்த அவரின் கேள்வி, 2026 சட்டமன்ற தேர்தல் களத்திலும் இடம்பிடிக்குமா?
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதமாக உள்ள பட்டியல் சாதியினர், பிரதானமாக 3 சாதிகளில் உள்ளனர்.
இந்த சாதிகளில் இருந்து உருவான தலைவர்களால் ஆங்காங்கே சிறு தலித் குழுக்கள் மற்றும் கட்சிகள் உருவானாலும், தேர்தல் கூட்டணிகளால் பெற்ற ஒரு சில இடங்களைத் தாண்டி, அதிகாரத்தை நோக்கி அவர்களால் நெருங்க முடிந்ததில்லை.

பட மூலாதாரம், Facebook/பா ரஞ்சித்
குமுறும் தலித் மக்கள்
தமிழ்நாட்டில் நூற்றாண்டு காலமாக திராவிட இயக்கங்கள் முன்னெடுத்துள்ள சமூக நீதி முழக்கங்களால் தலித் மக்களும் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் அதையே பேசி ஆட்சியை பிடித்த இயக்கங்களில் குறிப்பிடத்தக்க தலித் தலைவர்கள் வெகு சிலரே உள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியும், ஆட்சியும் தலித் மக்களின் அதிகாரத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்தது.
அந்த கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், அதை ஒட்டிய தலித் தலைவர்களின் குமுறல்களும் தலித் மக்களின் அரசியல் முக்கியத்துவம் என்ன என்ற கேள்வியை மீண்டும் முன்னுக்கு கொண்டுவந்துள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான வழக்கில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி சென்னைக்கு வந்த போது வலியுறுத்தினார்.
அதே மேடையில் பேசிய திருமாவளவன், "இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது தான் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் முன் வைக்கும் கோரிக்கை. அதனாலேயே மாயாவதி இந்த வழக்கினை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோருவதற்கான கட்டாயம் எழுந்துள்ளது." என்றார்.

பட மூலாதாரம், Facebook/திருமாவளவன்
திமுக மீது விரக்தி ?
ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்திற்காக நடைபெற்ற போராட்டத்தை விரக்தியுடன் குறிப்பிட்டுள்ள இயக்குனர் பா.ரஞ்சித் காவல்துறையையும், தமிழ்நாடு அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கியுள்ள அவர், தலித் அரசியலுக்கே அச்சுறுத்தல் எழுந்திருப்பதாக குறிப்பிடுகிறார். அவர் தனது பதிவில், “தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது? தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கியுள்ளார்.
இதையேதான் "தலித் தலைவர்கள் சிறிய அளவில் இருந்தாலும் தாக்கப்படுகிறார்கள்" என்று திருமாவளவன் குறிப்பிட்டு பேசினார்.

பட மூலாதாரம், TN DIPR
முதல்வரின் அஞ்சலியும் விளக்கமும்
பாஜகவின் தலித் தலைவராகவும், மத்திய இணை அமைச்சராகவும் உள்ள எல்.முருகன், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாளுக்கு நாள் பட்டியலின தலைவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பலியானவர்களில் 40 சதவீதம் பேர் பட்டியலினத்தவர். தமிழ்நாட்டில் உள்ள 22 ஊராட்சிகளில் தலித் தலைவர்கள் பணியாற்ற முடியவில்லை" என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை பாஜகவை கடுமையாக விமர்சித்தாலும், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்.
இப்படியான விமர்சனங்களின் பின்னணியிலேயே ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு நேரில் சென்று அவரது மனைவி பொற்கொடியை சந்தித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்போது அவர் “இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும், காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்” என்று தெரிவித்தார்.
திமுகவை வீழ்த்துமா தலித் வாக்குகள்?
ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவம் மட்டுமே திமுக மீதான தலித் தலைவர்களின் கேள்விக்கு முதல் காரணம் அல்ல.
சட்டமன்றத்தில் ஆணவக் கொலை தடுப்புக்கு தனிச் சட்டம் கேட்ட கோரிக்கைக்கு பதில் கொடுத்த முதலமைச்சர், அப்படியொரு சட்டம் தேவையில்லை என்று மறுத்தார். இதனால் திமுக அரசு கூட்டணிக் கட்சிகளாலேயே விமர்சிக்கப்பட்டது.
வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இன்றுவரையிலும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. விரக்தியில் அந்த மக்கள் தேர்தலையே புறக்கணிப்பதாக அறிவித்தும் வழக்கில் பெரிய முன்னேற்றம் இல்லை.
இத்தனை நாட்களாக ஒருவரை கூட கைது செய்ய முடியாதது ஏன் என்று இந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.
பல்வேறு நேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் மத்தியில் தனது செல்வாக்கு சரிந்து விடக் கூடாது என்று அச்சப்படும் திமுகவிற்கு தலித் வாக்கு வங்கி பற்றிய கவலை இல்லையா என்று கேட்கிறார் பேராசிரியர் லக்ஷ்மணன்.
“கள்ளக்குறிச்சியில் இறந்த 70 பேரில் 60 பேர் தலித்துகள், வன்னியர் இறந்த போது மரக்காணத்திற்கு சென்ற முதல்வர் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை? வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்காதது ஏன்? கடற்கரையில் கருணாநிதிக்கு இடம் வேண்டும் என்று கதறிய திமுக ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்திற்கு ஏன் 30 கி.மீ தள்ளி இடம் கொடுக்கிறது” என்று திமுக மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
மேலும் அவர் “2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தலித் வாக்கு வங்கி கண்டிப்பாக சரியப் போகிறது. திமுக படுதோல்வியை சந்திக்கும்” என்றார்.
விசிகவுக்கு என்ன சிக்கல்?
ஆனால் இதை முற்றிலும் மறுக்கிறார் தலித் முரசு இதழின் ஆசிரியர் புனித பாண்டியன்.
“கள்ளக்குறிச்சியில் இறந்தவர்கள் தலித்துகள் மட்டுமா? வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என கூறிய அவர், “ஆணவக் கொலைக்கான தனிச்சட்டம் வேண்டும் என்று கேட்பவர்கள் சில தன்னார்வலர்கள்தான்” என்றார்.
ஆனால் திமுகவின் நடவடிக்கைகளால் அவர்களின் கூட்டணிக் கட்சியான வி.சி.க.விற்கும் பின்னடைவு ஏற்படும் என்கிறார் பேராசிரியர் லக்ஷ்மணன்.
“திருமாவளவன், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள் என்று கூறுவது கண் துடைப்பு. ஆம்ஸ்ட்ராங்கிற்கான இடத்தை சென்னையில் பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும், விசிகவும், காங்கிரஸும். திமுக மீதும், விசிக மீதும் தலித் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்து விட்டனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தலித் வாக்குகள் சீமானுக்கும் பாஜகவுக்கும் என பிரிய தொடங்கி விட்டன.” என்றார்.

பட மூலாதாரம், Facebook/க.அண்ணாமலை
பாஜகவின் விருப்பம்
பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது பகுஜன் அரசியல் மூலம் பட்டியல் சாதி வாக்குகளை தன் பக்கம் ஈர்த்ததுடன் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுத்தளமான பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் வாக்குகள் தவிர உயர் சாதி வாக்குகளை குறிவைத்து ஈர்த்தது.
அதே மாநிலத்தில், பல்வேறு சாதிகளிடம் ‘சமூக பொறியியல்’ (சோசியல் எஞ்சினியரிங்) நடவடிக்கைகளை முன்னெடுத்த பாஜக, மாயாவதியின் சாதியை சேர்ந்த மக்களை விடுத்து மற்ற பிரிவு பட்டியல் சாதியினரை தனியே திரட்டியதுடன், பிற சாதி இந்துக்களையும் சேர்த்து வியூகம் அமைத்து ஆட்சியை பிடித்தது.
தமிழ்நாட்டிலோ, பிராமணரல்லாதார் இயக்கத்தின் வழியாக உருவான இரு பெரும் திராவிட கட்சிகள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் வாக்குகளை ஒரே தொகுப்பாக குவித்துள்ளன.
பல பத்தாண்டுகளாக தொடரும் திமுக எதிர் அதிமுக என்ற களத்தில் தனியாக குறிப்பிட்ட சாதி வாக்கு வங்கிகள் உருவாகவில்லை. ஆனால், இங்கும் சமூக பொறியியல் நடவடிக்கைகள் சாத்தியமே என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர் ஒருவர்.
மேலும் அவர் கூறுகையில், “தலித் வாக்குகள் இப்போதும் மொத்தமாக திமுகவிற்கும், அதிமுகவிற்கும்தான் செல்கின்றன. ஆனால் அந்த வாக்குகளை கவர பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. அந்த வாக்குகளை முழுவதுமாக பாஜகவுக்கு மாற்றுவது முடியாது எனினும், அந்த வாக்கு வங்கியை சிதறடிக்க முடியும். தலித்துகளில் சில பிரிவினரை தன் பக்கம் ஈர்ப்பதன் மூலம் அதை பாஜக செய்து வருகிறது” என்றார்.

பட மூலாதாரம், புனித பாண்டியன்
தேவை சமூக மாற்றம்
ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில், தலித் அரசியல் எழுச்சியை எதிர்பார்க்க முடியாது என்கிறார் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன்.
“தனித் தொகுதிகளில் தேர்வாகி, நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஏற்கனவே தலித் உறுப்பினர்கள் உள்ளார்கள். ஆனால் அவர்களால் என்ன சாதிக்க முடிந்தது. தமிழ்நாட்டில் தொல். திருமாவளவன் ஒரு முக்கிய அரசியல் தலைவராக அங்கீகரிக்கப்படுவதற்கு 20 ஆண்டுகள் ஆகியுள்ளன.’’
"எனவே மாற்றம் சமூகத்தில் ஏற்பட வேண்டும். ஒரு சாதி குடுவைக்குள் இருந்துக் கொண்டு தலித்துகளால் எப்படி மேம்பட முடியும்? தலித்துகள் மதம் மாறினாலும், அவர்களுக்கான இட ஒதுக்கீடு உண்டு என்று சட்டம் சொல்கிறது. அப்போதும் கூட ஏன் 9450 பேர் மட்டுமே பௌதத்துக்கு மாறியுள்ளனர்? சமூக மாற்றம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல், அரசின் மீது அனைத்துப் பொறுப்பையும் சுமத்துவது தவறான பார்வை” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












