ஆம்ஸ்ட்ராங்: குத்துச்சண்டை வீரர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக உயர்ந்தது எப்படி?

பட மூலாதாரம், BSP - TAMIL NADU UNIT/FB
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பட்டியலின மக்களுக்கான அரசியலில் கீழ் மட்டத்திலிருந்து மேலே வந்தவர்.
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்தான் ஆம்ஸ்ட்ராங்.
ஆரம்ப காலத்தில் குத்துச்சண்டை, உடற்பயிற்சி போன்றவற்றில் ஆர்வம் காட்டிய ஆம்ஸ்ட்ராங்கிற்கு பள்ளிக்கூட நாட்களில் இருந்தே அரசியலில் ஆர்வம் இருந்தது.
ஆரம்பத்தில் முன்னாள் எம்.எல்.ஏ-வான ப.ரங்கநாதனுடன் சற்று நெருக்கமாக இருந்தார் ஆம்ஸ்ட்ராங். 2000வது ஆண்டுவாக்கில் பூவை மூர்த்தி தலைவராக இருந்த புரட்சி பாரதம் கட்சியில் சேர்ந்தார். இதற்கிடையில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கேஸ்வரா சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார்.

பட மூலாதாரம், BSP - TAMIL NADU UNIT/FB
யானை சின்னத்தில் வெற்றி
கடந்த 2002ஆம் ஆண்டு பூவை மூர்த்தி இறந்த பிறகு, அக்கட்சியில் இருந்து விலகிய ஆம்ஸ்ட்ராங், தனியாக 'அம்பேத்கர் தலித் ஃபவுன்டேஷன்' என்ற அமைப்பு ஒன்றைத் துவங்கிச் செயல்பட்டு வந்தார்.
கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 99வது வார்டில் யானைச் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ஆம்ஸ்ட்ராங்.
அந்தத் தருணத்தில் சென்னையில் ஷிப்பிங் கார்ப்பரேஷனில் பணியாற்றி வந்த இடும்பன் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியில் (பி.எஸ்.பி) தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
யானை சின்னத்தில் நின்று ஆம்ஸ்ட்ராங் வெற்றி பெற்றதையறிந்த இடும்பனும் இன்னும் சிலரும் இணைந்து ஆம்ஸ்ட்ராங்கைச் சந்தித்து, பி.எஸ்.பி-யில் இணையும்படி கோரினர். அப்போது பி.எஸ்.பி-யின் ஒருங்கிணைப்பாளராக இருந்த சுரேஷ் மானேவும் கட்சியில் இணையும்படி சொல்லவே, அக்கட்சியில் இணைந்தார் ஆம்ஸ்ட்ராங்.

பட மூலாதாரம், BSP - TAMIL NADU UNIT/FB
‘அம்பேத்கரை முழுமையாகப் படித்தவர்’
உடனடியாக, அதாவது 2007-ஆம் ஆண்டில் அக்கட்சியின் மாநிலத் தலைவராகவும் ஆம்ஸ்ட்ராங்க் நியமிக்கப்பட்டார்.
வி.சி.க-விலிருந்து செல்வப்பெருந்தகை வெளியேறியபோது, அவர் பி.எஸ்.பி-யில்தான் இணைந்தார். ஆகவே அவர் தலைவராக்கப்பட்டு, ஆம்ஸ்ட்ராங் ஒருங்கிணைப்பாளர் ஆக்கப்பட்டார்.
செல்வப்பெருந்தகை காங்கிரசிற்குச் சென்ற பிறகு மீண்டும் பி.எஸ்.பி-யின் மாநிலத் தலைவரானார் ஆம்ஸ்ட்ராங். இந்த நிலையில், 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த மாணவர்களுக்கு இடையிலான கலவரம் தொடர்பாக இவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங், ஒரே நாளில் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். இந்த வழக்கில், 2016-இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர் விடுவிக்கப்பட்டார்.
"ஆம்ஸ்ட்ராங்க், பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிறைய உதவிகளைச் செய்வார். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் படித்துவந்த ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அதைத் தீர்த்து வைப்பார். பணம் இல்லாத மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது போன்ற காரியங்களையும் செய்தார்," என்கிறார் அவருடன் நெருக்கமாக அறிந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த்.
மேலும், "அம்பேத்கரின் எழுத்துகளை முழுமையாக வாசித்தவர் ஆம்ஸ்ட்ராங். யாராவது அவரைப் பார்க்கச் சென்றால், அம்பேத்கரின் நூல்களை எடுத்துக்காட்டி கருத்துகளை முன்வைப்பார்," என்கிறார் ரஜினிகாந்த்.
ஆம்ஸ்ட்ராங் கவுன்சிலராக இருந்த காலட்டத்தில் துப்புரவுத் தொழிலாளர் பிரச்சனைக்காகச் சில போராட்டங்களை நடத்தி இருக்கிறார். பி.எஸ்.பி-யின் மாநிலத் தலைவரான பிறகு மாயாவதியைச் சென்னைக்கு அழைத்து வந்து மிகப் பெரிய மாநாடு ஒன்றையும் ஆம்ஸ்ட்ராங் நடத்தினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான தென்னரசு, கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே கொல்லப்பட்டார். இந்தக் கொலையைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களே தற்போது ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு காரணம் என நம்பப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங்கிற்கு திருமணமாகி, ஒரு குழந்தை இருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












