கருண் நாயர் மறுபிறவி - இந்திய அணிக்கு தன்னை நிரூபிக்க இங்கிலாந்தில் அவர் செய்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மொஹ்சின் கமல்
- பதவி, பிபிசிக்காக
"நீங்கள் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடப் போவதில்லை என்று நினைத்தால், எங்கள் கிளப்பில் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் விளையாடக்கூடிய ஒரு வெளிநாட்டு வீரராக, எங்களுடனான நீண்டகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட சம்மதிப்பீர்களா?"
நார்தாம்ப்டன்ஷையர் கவுன்டி கிரிக்கெட் கிளப்பின் அப்போதைய தலைமை பயிற்சியாளராக இருந்த ஜான் சாட்லர், 2023இல் கருண் நாயரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்.
நாயரின் பதில் உறுதியாக இருந்தது, "நான் இந்தியாவுக்காக விளையாட விரும்புகிறேன், மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட என்னால் முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறேன். அந்தக் கனவு நனவாகும் வரை, வேறு எதையும் நான் கருத்தில் கொள்ளப்போவதில்லை."
இப்போது அவருக்கு 33 வயதாகிறது. 2017இல் இந்தியாவுக்காக கடைசியாக விளையாடிய பிறகு, வெள்ளிக்கிழமை (ஜூன் 20) லீட்ஸில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த மாத இறுதியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு பயிற்சிப் போட்டிகளில் ஒன்றில், இரட்டை சதம் அடித்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட மீண்டும் வந்துவிட்டேன் என்பதை அவர் பதிவு செய்தார்.
'ஒரு புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர்'

பட மூலாதாரம், Getty Images
2016ஆம் ஆண்டு தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 303 ரன்கள் எடுத்து, முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கருண்.
ஆனால் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிறகு, இந்திய அணியில் தனக்கான இடத்தை அவர் இழந்தார்.
காலப்போக்கில், சர்வதேச கிரிக்கெட் குறித்த அவரது கனவுகள் மங்கத் தொடங்கின. 2022ஆம் ஆண்டில், அவர் கர்நாடகாவின் ரஞ்சி டிராபி அணியிலிருந்து கூட நீக்கப்பட்டார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக மோசமான தருணமாக இருக்கலாம்.
"உள்நாட்டு சீசன் முழுவதையும் தவறவிட்ட பிறகு, அவர் மிகவும் வருத்தப்பட்டார். அவர் என்னிடம் வந்து, 'நான் என்ன செய்வது? மீண்டும் விளையாட என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்று கூறினார்" என்று கருணின் நீண்டகால பயிற்சியாளரான விஜயகுமார் மதியல்கர் நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அவர் ஒரு புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர், அதனால் அவரது மனநிலையைப் பற்றி நான் அவரிடம் தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர் மிகவும் ஃபிட்டாகவும் இருக்கிறார், அதனால் அவரது உடல்திறன் குறித்து சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எனவே அவர் செய்ய வேண்டிய ஒரே விஷயம் அவரது திறன்களை மேம்படுத்துவதுதான்" என்றார்.
தனது அதிர்ஷ்டத்தை மாற்றத் தீர்மானித்தார் கருண். பெங்களூருவில் உள்ள தனது வீட்டிலிருந்து மதியல்கரின் அகாடமிக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, 2 மணிநேரம் பயணம் செய்து செல்வதை வழக்கமாக்கிக்கொண்டார். விஜயகுமார் மதியல்கர், 16 வயதுக்குட்பட்ட பிரிவில் கருண் ஆடிய காலத்தில் இருந்தே அவருக்கு பரிச்சயமானவர்.
"முழுமையாக திருப்தி அடையும் வரை, அவர் ஒருபோதும் வலைப் பயிற்சியில் இருந்து வெளியே வரமாட்டார். ஒவ்வொரு அமர்விலும் சுமார் 600 பந்துகளை எதிர்கொள்வார். அனைத்து ஷாட்களையும் பயிற்சி செய்வார். அவர் மிகவும் கடினமாக உழைத்தார். மணிக்கணக்கில் இடைவிடாமல் பேட்டிங் செய்வதே அவரது விருப்பமாக இருந்தது." என்கிறார் மதியல்கர்.
"அவர் தனது அணுகுமுறையில் ஒருபோதும் அலட்சியமாக இருந்ததில்லை. வலைப் பயிற்சியில் ஒரு பந்தை கூட சாதாரணமாக எதிர்கொண்டதில்லை. அவர் தனது உடற்தகுதி மற்றும் பிற திறன்களை மேம்படுத்துவதிலும் அயராது உழைத்தார்." என்று கூறுகிறார் மதியல்கர்.
கவுன்டி கிரிக்கெட் அனுபவம்

பட மூலாதாரம், Getty Images
பல மாதங்களாகப் போராடிய பிறகு, கருண் மீண்டும் களத்தில் இறங்க ஆர்வமாக இருந்தார். ஆனால் இந்தியாவில் விளையாட அவருக்கான கிரிக்கெட் போட்டிகள் இல்லை. எனவே அவர் இங்கிலாந்தில் உள்ள நார்தாம்ப்டன்ஷையருக்காக, ஒரு வெளிநாட்டு வீரராக விளையாட முடிவு செய்தார். அந்த முடிவு முக்கியமானது என்பது பின்னர் உறுதியானது.
"தங்கள் திறமையை நிரூபிக்க வெளிநாட்டு வீரர்கள் இங்கு வருகிறார்கள். நாங்கள் வழக்கமாக அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தைப் பெறுகிறோம்," என்று நார்தாம்ப்டன்ஷையரில் கருணுடன் பணியாற்றிய சாட்லர் கூறுகிறார்.
"கருண் இந்தியாவுக்காக டெஸ்ட்டில் முச்சதம் அடித்திருந்தார், ஆனால் அதன் பின்னர் சிறிது காலமாக விளையாடவில்லை. எனவே அவர் மீண்டும் விளையாட வேண்டுமென்ற உத்வேகத்தில் இருந்தார். ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்." என்கிறார் சாட்லர்.
அமைதியான சுபாவத்திற்கு பெயர் போன கருண் நாயர், நார்தாம்ப்டன்ஷயர் தனக்கு அளித்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
"அவர் எவ்வளவு அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தார் என்பதுதான் தனித்துவமான விஷயம்," என்று சாட்லர் நினைவு கூர்ந்தார்.
"எட்ஜ்பாஸ்டனில் அவரது முதல் ஆட்டத்தில், ஆடுகளம் பசுமையாக இருந்தது. பந்துவீச்சுக்கு சாதகமான ஒரு ஆடுகளமாக இருந்தது. எங்கள் பேட்ஸ்மேன்களில் சிலர் அங்கு பேட்டிங் செய்வதை கடினமாக உணர்ந்தனர், விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. கருண் உள்ளே வந்தார், அவர் மிகவும் அமைதியாக விளையாடினார். தொடக்கூடாத பந்துகளை அவர் விட்டுவிட்டார்.
பின்னர், அதிரடியாக ஆட வேண்டிய வேண்டிய நேரம் வந்தபோது, அவர் சிறப்பாக ஆடினார். எனவே அவரது ஆட்டம் ஒரு அற்புதமான வரிசையில் காணப்பட்டது." என சாட்லர் கூறுகிறார்.
வலது கை பேட்ஸ்மேனான கருண் நாயர், மூன்று போட்டிகளில் 249 ரன்கள் எடுத்தார். இதில் சர்ரேக்கு எதிரான 150 ரன்கள் உள்பட, அவரது சிறப்பான ஆட்டங்கள் காரணமாக மீண்டும் அவரை நார்தாம்ப்டன்ஷையர் கவுன்டி கிரிக்கெட் கிளப் ஒப்பந்தம் செய்தது.

2024 ஆம் ஆண்டில், மீண்டும் களமிறங்கிய அவர், ஏழு போட்டிகளில் 487 ரன்கள் எடுத்தார், அதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். ஆனால் அவர் எடுத்த ரன்கள் மட்டும் தனித்து நிற்கவில்லை.
"அவரது அணுகுமுறை அற்புதமானது. அவர் மிகவும் கடினமாக உழைத்தார், மிகச்சிறந்த தொழில்முறை வீரராக இருந்தார். ஒவ்வொரு பயிற்சி அமர்வுக்கும் அவர் இருந்தார். களத்தில் பேட்டிங் செய்யும்போது, மிகவும் கவனமாக ஆடினார். ஒருபோதும் தனது விக்கெட்டை விட்டுக்கொடுக்கவில்லை," என்று யார்க்ஷயரில் இப்போது உதவி பயிற்சியாளராக இருக்கும் சாட்லர் கூறுகிறார்.
கருண் நாயர் இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட்டிலும் ரன்கள் குவித்திருந்தாலும், நார்தாம்ப்டன்ஷையர் அணியுடனான அவரது அனுபவமே அவரை மீண்டும் தேசிய அளவில் உறுதியாக நிலைநிறுத்த உதவியது.
"கவுன்டி கிரிக்கெட் என்பது இடைவிடாமல் விளையாடப்படுகிறது, ஆட்டத்திற்கு ஆட்டம், அதிக ஓய்வு இருக்காது. யதார்த்தத்தில் நீங்கள் மாறுபட்ட பிட்ச்களில் விளையாடுகிறீர்கள். சில நேரங்களில் பிட்ச் தட்டையாக இருக்கலாம், சில நேரங்களில் பந்து வேறுமாதிரியாக திரும்பலாம், சில நேரங்களில் அது பசுமையாக இருக்கலாம்." என்கிறார் சாட்லர்.
"அவர் எங்களுக்காக இரண்டு முறை விளையாடியதால், பல்வேறு சூழ்நிலைகளில் விளையாடவும், தனது திறமைகளை சோதிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்று நான் நம்புகிறேன். அது அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது." என்று சாட்லர் கூறுகிறார்.
கருண் நாயர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதில் கவுன்டி கிரிக்கெட் வகித்த பங்கை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூட ஒப்புக்கொண்டார்.
"கருணின் அனுபவம் இந்திய அணிக்கு நல்லது. அவர் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடியவர், அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவரது அனுபவம் கைகொடுக்கும்," என்று ஜூன் 5 அன்று மும்பையில் நடந்த இந்திய சுற்றுப்பயணத்திற்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது கம்பீர் கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில் கேன்டர்பரியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 204 ரன்கள் எடுத்ததன் மூலம், ஹெடிங்லியில் நடைபெறும் முதல் டெஸ்டில் இந்தியாவின் மிடில் ஆர்டரில் கருண் நாயர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு விஷயத்தைக் குறித்து, கருணின் பயிற்சியாளர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
"கருண் அங்கு விளையாடுவதில் அதிக அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அவர் முதல் போட்டியில் நிச்சயமாக விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு சதம் அடிப்பார்." என்று மதியல்கர் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












