கொழும்பில் தீயில் வீடிழந்த மக்கள் சீற்றம்: "நாங்கள் வீடுதான் கேட்கிறோம்; சாப்பாடு கேட்கவில்லை"

கொழும்பில் தீயினால் வீடுகளை இழந்த மக்கள் தெரிவிப்பு
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொழும்பு - பாலத்துறை - கஜீமாவத்தை பகுதியிலுள்ள தற்காலிக வீட்டுத் தொகுதியொன்றில் சில நாள்களுக்கு முன்பு பரவிய தீயினால் சுமார் 80 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன. அத்துடன், மேலும் சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தீ விபத்தினால் சுமார் 220 பேர் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இரவு 7.30 அளவில் ஏற்பட்டது.

விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 12 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

தீயணைப்பு பிரிவு, கடற்படை, போலீஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து, தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தினால் உயிர் சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

கஜீமாவத்தை பகுதியில் கடந்த பல வருட காலமாக சுமார் நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக குடியிருப்புக்களை அமைந்து, வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பகுதியில் வாழும் மக்கள் சட்டவிரோதமான முறையில் குடியிருப்புக்களை அமைத்து வாழ்ந்து வருவதாக கூறி, அரசாங்கம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தொடர்மாடி குடியிருப்புக்களை அமைத்து, அந்த பகுதியிலுள்ள ஒரு தரப்பினரை குடியமர்த்தியிருந்தது.

எனினும், கஜீமாவத்தை பகுதியில் வாழும் அனைவருக்கும் இந்த வீட்டுத் திட்டம் கிடைக்கவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.

தமக்கான வீட்டுத் திட்டம் வழங்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை உறுதி வழங்கி, அதற்கான ஆவணங்களை தமக்கு கையளித்த போதிலும், வீட்டுத் திட்டம் உரிய வகையில் தமக்கு கிடைக்கவில்லை என அந்த மக்கள் கூறுகின்றனர்.

வாக்குரிமை மற்றும் நீர்பாசன திட்டம் இந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மின்சார வசதிகள் வழங்கப்படவில்லை.

சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்று பயன்படுத்தி வந்த சூழ்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த பகுதி மக்கள் மீது மின்சார சபை வழக்கு தொடர்ந்துள்ளது.

கொழும்பில் தீயினால் வீடுகளை இழந்த மக்கள் தெரிவிப்பு
படக்குறிப்பு, என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்களுக்கு இதுக்குள் வீடு வேண்டாம். இது மாதிரி எத்தனையோ தடவை எரிந்து விட்டது என்கிறார் பாதீமா பீபீ.

இதையடுத்து, குறித்த பகுதிக்கு மின்சார விநியோகம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கஜீமாவத்தை பகுதியிலுள்ள தற்காலிக வீட்டுத் தொகுதியில் இதுவரை மூன்று தடவைகள் தீ பரவியுள்ளன.

எனினும், சில தினங்களுக்கு முன்பு பரவிய தீயே மிகவும் பாரதூரமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீ விபத்தினால் தனது வீடு மற்றும் சொத்துக்களை இழந்த பாதீமா பீபீ கண்ணீருடன், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

''நாங்கள் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தோம். எரியுது என கூறினார்கள். வெளியில் வந்து பார்க்கும் போது, அங்கே தீ எரிகின்றது. எல்லாரும் ஓடினார்கள். பொருட்கள், பிள்ளைகளை தூக்கிக் கொண்டு எல்லாரும் ஓடினார்கள். நாங்கள் ஓடினோம்.

திரும்ப வந்துதான் என்னுடைய அடையாள அட்டை, ஆவணங்களை எல்லாம் எடுத்தேன். திரும்ப வந்து பார்க்கும் போது, எல்லாம் எரிந்து முடிந்து விட்டது. பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள், பாதணி, பொருட்கள் எல்லாம் எரிந்து விட்டன. என்னுடைய பிள்ளை 13 வருடங்களாக உழைத்து சம்பாதித்த பொருட்கள் இவை எல்லாம்.

ஒரு வருடம், இரண்டு வருடம் வாங்கிய பொருட்கள் இல்லை. என்னுடைய பிள்ளை சின்ன வயசில் இருந்து சம்பாதித்த பொருட்கள் எல்லாம், மண்ணோட மண்ணாகவே போனது. பாடசாலை ஆடைகள் எல்லாம் பற்றி எரிந்து விட்டது.

என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்களுக்கு இதுக்குள் வீடு வேண்டாம். இது மாதிரி எத்தனையோ தடவை எரிந்து விட்டது. இல்லாதமையினால் தான் இப்படி இருக்கின்றோம். இருந்தால் இப்படி இருக்க மாட்டோம்." என தீ விபத்தினால் தனது வீட்டை முழுமையாக இழந்த பாதீமா பீபீ தெரிவித்தார்.

கொழும்பில் தீயினால் வீடுகளை இழந்த மக்கள் தெரிவிப்பு
படக்குறிப்பு, பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இந்த வீட்டில் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது என்பதற்காகவே, நாங்கள் திருட்டு தனமாக மின்சாரத்தை எடுத்து, இன்று வழக்குகளை எதிர்நோக்கி வருவதாக பாதிக்கப்பட்ட பெண்ணான உமாதேவி குறிப்பிடுகின்றார்

பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இந்த வீட்டில் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது என்பதற்காகவே, நாங்கள் திருட்டுத்தனமாக மின்சாரத்தை எடுத்து, இன்று வழக்குகளை எதிர்நோக்கி வருவதாக பாதிக்கப்பட்ட பெண்ணான உமாதேவி குறிப்பிடுகிறார்.

''நாங்கள் ஆசைக்கு இந்த இடத்தில் இருக்கவில்லை. எங்களுக்கு போக வழியில்லை. எங்களுக்கு இங்கே வாக்குரிமை இருக்கின்றது. அப்படியிருந்தால், நாங்கள் எங்கே போவது. நாங்கள் வீடுதான் கேட்கின்றோம். உங்களிடம் நாங்கள் சாப்பாடு கேட்கவில்லை. மின்சாரம் இல்லை. நாங்கள் சட்டவிரோதமாக மின்சாரம் பயன்படுத்தினோம். அதற்கு இன்னும் வழக்கு நடக்கிறது.

நாங்கள் ஒத்துக்கொள்கின்றோம். நாங்கள் செய்தது தவறு. அரசாங்கத்திடமிருந்து திருட்டு தனமாக மின்சாரம் எடுத்தது தவறு. மின்சாரம் இல்லாமல், இந்த வீட்டில் பெண் பிள்ளைகளை வைத்திருக்க முடியுமா?. பகலிலேயே வீட்டை உடைத்து திருடுகின்றார்கள். இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியுமா?

அதனால்தான் நாங்கள் அப்படி செய்தோம். எங்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள். இது மூன்றாவது தடவை எரிகிறது. எப்படி எரிகிறது? ஏன் எரிகிறது என்று தெரியவில்லை. இது இவ்வாறு நீடிக்க முடியாது. ஏனென்றால், இன்றைக்கு உயிர் போகவில்லை. நாளை உயிர் போனால்..." என பாதிக்கப்பட்ட பெண்ணான உமாதேவி தெரிவித்தார்.

கொழும்பில் தீயினால் வீடுகளை இழந்த மக்கள் தெரிவிப்பு

"நாங்களும் இந்த நாட்டில் உள்ளவர்கள். நாங்கள் கள்ளத் தோணியா?" என பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணான விஜயகுமாரி கூறுகிறார்.

''மழை பெய்தது, வெள்ளம் வந்தது. அந்த மாதிரி கஷ்டப்பட்டுக்கொண்டு, பிள்ளைகளை வைத்துக்கொண்டு இருந்தோம். இல்லாதமையினால் தான் இருக்கின்றோம். வீடொன்று இருந்திருந்தால், நாங்கள் இங்கே இருந்திருக்க மாட்டோம். எப்படியும் போய்விடுவோம். வீடு வழங்குவதாக கூறி மூன்று வருடங்கள் ஆகின்றன. வீடு இன்னும் தரவில்லை. நம்பர் எல்லாம் தந்திருக்கின்றார்கள். பயந்து பயந்துதான் இருக்கின்றோம்.

நேற்று இரவு முழுவதும் வீதியில் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இருந்தோம். இதற்கு முன்பும் தீ பரவியது. வந்தார்கள் பார்த்தார்கள், போய்விட்டார்கள். இன்னும் வீடு தரவில்லை. இப்போது அந்த பக்கம் எரிந்துள்ளது. நாங்களும் இந்த நாட்டில் உள்ளவர்கள் தான்.

நாங்கள் கள்ளத் தோணியா, இல்லையே. அடையாள அட்டை இங்கே இருக்கின்றது. வாக்களிக்கும் உரிமை இங்கிருக்கின்றது. எல்லாம் இங்கிருக்கின்றது. தேர்தல் காலத்தில் மாத்திரம் வருகிறார்கள். கும்பிடுகின்றார்கள், வாக்களிக்க சொல்கிறார்கள். போகிறார்கள். பிறகு எங்களை பார்க்கிறார்கள் இல்லை" என கஜீமாவத்தை பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரி தெரிவித்தார்.

ஜனாதிபதி விடுத்த உத்தரவு

கொழும்பு - கஜீமாவத்தை பகுதியில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உடனடி உதவிகளை செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொழும்பில் தீயினால் வீடுகளை இழந்த மக்கள் தெரிவிப்பு

ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், ஜனாதிபதி செயலாளர் ஊடாக அந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட செயலாளர், முப்படை தளபதிகள், சுகாதார பிரிவு, தீயணைப்பு பிரிவு, நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களை இணைத்துக்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உடனடி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை, கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன, தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று விடயங்களை இன்று ஆராய்ந்தார்.

''ஒன்றரை வருட காலப் பகுதிக்குள் மூன்றாவது முறையாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குழுக்கூட்டத்தின் முழுமையாக ஆராய்ந்து, இந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களை விரைவில் மாற்று இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்" என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவிக்கின்றார்.

Banner
காணொளிக் குறிப்பு, "பாசிசம் ஜனநாயகத்தை முற்றிலும் விழுங்க நினைக்கிறது" - கவிதா கிருஷ்ணன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: