இலங்கை நெருக்கடி: கோட்டாபயவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்திய சபாநாயகர் அலுவலகம் - நிபுணர்களுடன் ஆலோசனை

கோட்டாபய ராஜபக்ஷ
படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான கடிதத்தை சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதர் வழியாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ என தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ, மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைத்துள்ள ராஜிநாமா கடிதம் செல்லுபடியாகுமா என்பது குறித்து தற்போது பலரும் பேச ஆரம்பித்துள்ளனர். இலங்கை அரசியலமைப்பில் மின்னஞ்சல் மூலம் ஜனாதிபதி ஒருவர் ராஜிநாமா செய்ய முடியுமா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. இது குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவாவிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "2006 இலத்திரனியல் பரிமாற்று சட்டத்தின் 4ஆவது சரத்துக்கு அமைய, இந்த ராஜிநாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும்," என்று கூறினார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் ராஜிநாமா கடிதம், சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

இதையடுத்து, கோட்டாபய ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதாக நாம் அழைக்கலாம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர் கையெழுத்திட்டு ராஜிநாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

ஆனால் ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொறுப்பு ஜனாதிபதி ஆக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும்வரை அவரை இடைக்கால ஜனாதிபதி ஆக கருத முடியாது. மேலும், ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டால், 30 நாட்களுள்ளாக நாடாளுமன்றத்தில் தனக்கான ஒப்புதலை ரணில் பெற வேண்டியது அவசியம். அந்த ஒப்புதலைப் பெற அவர் தவறினால் புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பை எம்.பி.க்கள் நடத்த வேண்டும் என்று கூறுகிறார், இந்த விவகாரத்தில் உரிய நிபுணர்களுடன் பேசிய எமது செய்தியாளர் எம். மணிகண்டன்.

இலங்கை சபாநாயகர் அலுவலகம்

பட மூலாதாரம், SRI LANKA SPEAKER OFFICE

கோட்டாபய அனுப்பியுள்ள கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து மீண்டும் ஆராய்ந்து, அனைத்து சட்ட நடவடிக்கைகளும் நிறைவு பெற்றதன் பின்னர், அது குறித்து நாளைய தினத்திற்குள் அதிகாரபூர்வமாக அறிவிப்பதாக சபாநாயகர் அலுவலகம் அறிக்கையில் கூறியுள்ளது.

சிங்கப்பூருக்கு வந்த கோட்டாபய

கோட்டாபய ராஜபக்ஷ

முன்னதாக, தாய்நாட்டில் இருந்து மாலத்தீவுக்கு புதன்கிழமை அதிகாலையில் தமது மனைவி, இரண்டு பாதுகாவலர்களுடன் சென்ற கோட்டாபய, வியாழக்கிழமை நண்பகலில் அங்கிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு உள்ளூர் நேரப்படி இரவு 7.15 மணியளவில் வந்தார்.

அவர் சிங்கப்பூரில் அடைக்கலம் கேட்பார் என்று அலுவல்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த நிலையில், கோட்டாபய தனிப்பட்ட பயணமாகவே சிங்கப்பூருக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளார். அந்த வகையில் தற்போதைய அவரது பயணமும் அதே நோக்கத்துடனேயே இருக்கலாம் என்றும் அந்த அடிப்படையிலேயே அவர் நாட்டுக்குள் வருவதற்கு சிங்கப்பூர் அரசு அனுமதித்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், கோட்டாபய தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோட்டாபய சிங்கப்பூர் அரசிடம் அடைக்கலம் கோரவில்லை. அவருக்கு அடைக்கலமும் தரப்படவில்லை. அடைக்கலம் கோரலை சிங்கப்பூர் ஏற்பதில்லை என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

எந்த விசாவில் வந்தார் கோட்டாபய?

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

சிங்கப்பூர், இலங்கையிலான உடன்பாட்டின்படி இலங்கையர்கள் சிங்கப்பூருக்குள் விசாயின்றி குறுகிய கால பயணத்தை மேற்கொண்டு அதிகபட்சமாக 30 நாட்களுக்கு தங்கியிருக்கலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியே கோட்டாபய சிங்கப்பூருக்கு வந்துள்ளதாக அறிய முடிகிறது.

முன்னதாக, கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூருக்கு வரும் தகவல் பிற்பகலிலேயே உள்ளூர் மக்களுக்கு கிடைத்தது. இதையடுத்து அவரை பார்க்க சிறிய அளவில் விமான நிலையத்தில் இருந்த மக்கள் கூட்டம், நேரம் செல்லச்செல்ல அதிகமானது.

வழக்கமாக சிங்கப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு மூன்றாவது முனையத்திலேயே பயணிகளை செளதி ஏர்லைன்ஸ் விமானம் இறக்கி விடும். ஆனால், இன்று இரண்டாவது முனையத்திலேயே அந்த விமானம் பயணிகளை இறக்கி விட்டது.

இதேவேளை, அவர் சமூக வருகை (சோஷியல் விசா) நுழைவு அனுமதி பெற்று நாட்டுக்குள் வந்துள்ளார் என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. கோட்டாபய விவகாரத்தில் நாட்டில் உள்ள சிங்கப்பூர் குடிமக்கள், வேலைக்கான அனுமதி பெற்று பணியாற்றும் வெளிநாட்டினர், சமூக நுழைவு அனுமதி பெற்றவர்கள் அனைவரும் சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும் என்றும் விதிகளை மீறி பொது இடத்தில் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங்கப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, கோட்டாபய மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட சில மணி நேரத்தில் மாலத்தீவின் முன்னாள் அதிபரும் அந்நாட்டில் ஜனநாயக முறையில் முதலாவது ஜனாதிபதி ஆக தேர்வானவருமான மெஹாம்மத் நஷீத் தமது ட்விட்டர் பக்கத்தில் கோட்டாபய தொடர்பாக சில தகவலை பகிர்ந்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

"கோட்டாபய ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி விட்டார். இனி இலங்கை முன்னோக்கிச்செல்லும் என எதிர்பார்க்கிறேன். இலங்கையிலேயே அவர் இருந்திருந்தால் உயிர் பயத்துடன் இருந்து கொண்டு அவரால் ராஜிநாமா செய்திருக்க முடியாது. மாலத்தீவு அரசாங்கம் சிந்தித்து எடுத்த நடவடிக்கையை பாராட்டுகிறேன். இலங்கை மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்," என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், சிங்கப்பூரில் கோட்டாபய ராஜபக்ஷ எத்தனை நாட்கள் தங்கியிருப்பார், இங்கிருந்து வேறு நாட்டுக்கு செல்வாரா என்பதை கோட்டாபயவோ அவரது தரப்போ தெளிவுபடுத்தவில்லை.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்தமைக்கான 'ஆவணம்' தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாக, சபாநாயகர் அலுவலகம் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தியது. ஆனால், மின்னஞ்சல் மூலம் வந்த தகவலை ராஜிநாமா கடிதம் என்று அழைக்காமல் ஆவணம் என்று சபாநாயகர் அலுவலகம் குறிப்பிடுகிறது.இந்த விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :