இலங்கை: ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை தீயிட்டுக் கொளுத்திய போராட்டக்காரர்கள்

Fire in distance

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு சனிக்கிழமை இரவு அரசு எதிர்ப்பாளர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலகக் கோரி தலைநகரில் போராட்டங்கள் வலுவடைந்த சில மணி நேரத்திலேயே பிரதமர் ரணிலின் வீட்டையும் போராட்டக்காரர்கள் இலக்கு வைத்தனர்.

அந்த வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரதமருக்கு சொந்தமான வாகனங்களையும் போராட்டக்குழுவினர் சேதப்படுத்தியதை காண முடிந்தது.

முன்னதாக, போராட்டக்குழுவினர் ரணில் வசிக்காத பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகையையும் இலக்கு வைத்தனர். "பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை போராட்டக்காரர்கள் உடைத்து தீ வைத்துள்ளனர்" என ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

ரணிலின் வீடு எரியும் காட்சிகள் இடம்பெற்ற காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இலங்கை பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை ராஜிநாமா செய்த அடுத்த சில தினங்களில் நாடாளுமன்றத்தில் ஒற்றை உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க நாட்டின் புதிய பிரதமராக கடந்த மே மாதம் பதவியேற்றார்.

ஆனால், அவர் பதவிக்கு வந்தது முதலே அவர் மீது நம்பிக்கையற்றவர்களாக போராட்டக்காரர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இருந்தனர்.

இந்த நிலையில், "அரசாங்கம் தொடரவும் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாக தமது பதவியை ராஜிநாமா செய்யத் தயார்," என்று ரணில் சனிக்கிழமை மாலை கூறினார்.

இது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் வழங்கிய சிறந்த யோசனையை ஏற்று அதை செயல்படுத்த ஏதுவாக, தான் பதவி விலகுவதாகவும் ரணில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், காலையில் ஜனாதிபதி கோட்டாபய வீட்டை நோக்கி பேரணியாக புறப்பட்ட போராட்டக்காரர்கள், பிற்பகலில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து அதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பிற்பகல் 3 மணிக்குப் பிறகு பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகைக்குள்ளும் அவர்கள் நுழைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக இரவு 8 மணியளவில் கொழும்பு ஐந்தாம் வீதியில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அப்போது ஒரு பிரிவினர் அவரது வீட்டுக்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி நுழைய முற்பட்டனர்.

இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடைசியில் படையினரை தள்ளிக் கொண்டு பெருங்கூட்டம் ரணிலின் வீட்டுக்குள் நுழைந்து அவரது இல்லத்துக்கு தீ வைத்தது.

சம்பவ பகுதிக்கு தீயணைப்புப் படையினர் செல்ல முடியாத அளவுக்கு வீதிகளில் போராட்டக்காரர்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

முன்னதாக, ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவியை விட்டு விலக வைக்கும் முயற்சியாக அவரது வீட்டுக்கு அருகே போராட்டக்குழுவினர் சென்றனர்.இதை செய்தி சேகரிக்கச் சென்ற நான்கு நிருபர்கள் உள்பட குறைந்தது ஆறு பேர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தீயிட்டுக் கொளுத்தப்பட்ட இந்த வீட்டை, தாம் உயிரிழந்த பிறகு ராயல் கல்லூரிக்கு உயில் எழுதி வைத்திருந்தார் ரணில்.

பதவிக்காலத்தை ஒரு முறை கூட முழுமை செய்யாத ரணில்

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க

ரணில் விக்ரமசிங்க ஆறாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என்று கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட போதே, ​​இலங்கையில் அது பெரும் அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது.காரணம், ராஜபக்ச குடும்பத்துக்கு ரணில் விக்ரமசிங்க நெருக்கமானவராக அறியப்படுபவர். அவர் பிரதமராக இருப்பதன் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தாரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்கலாம் என்று நம்பப்பட்டது. இலங்கை பிரதமராக ஆறு முறை இருந்தாலும் தமது பதவிக்காலத்தை ஒரு முறை கூட ரணில் முழுமையாக நிறைவு செய்யவில்லை. இந்த நிலையில், அரசு எதிர்ப்பாளர்கள் ரணிலின் அலுவல்பூர்வ மாளிகைக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே அவர் மீண்டும் ஒருமுறை பிரதமர் பதவியில் இருந்து வெளியேறுவேன் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 1977ஆம் ஆண்டு முதன் முதலாக இலங்கை நாடாளுமன்றத்துக்கு ரணில் தேர்வானார்.

1989ஆம் ஆண்டு ஜனாதிபதியாக ரணசிங்க பிரமதாஸ தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்சியில் ரணிலின் வளர்ச்சி வேகமெடுத்தது. 1993 முதல் 1994 வரை ரணில் நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.எப்பாவல நகரில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்தது. அந்த படுகொலை முயற்சியில் இருந்து அவர் உயிர் தப்பினார்.நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் ஜனாதிபதி பதவிக்கான போட்டியாளராக இருந்தார். ஆனால் அப்போது அவரது செல்வாக்கு படிப்படியாக குறைந்தது. 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் குறைந்தது 250 பேர் கொல்லப்பட்டபோது அவர் இலங்கை பிரதமராக இருந்தார்.அந்த தாக்குதல்களுக்கு முன்னதாக உளவுத்துறை எச்சரிக்கைகள் விடுத்தபோதும் அது பற்றிய தகவல் தமக்கு வராமலேயே தவிர்க்கப்பட்டதாக அவர் பிபிசியிடம் கூறினார்.ஒரு காலத்தில் ஆளும் கட்சியாக இருந்த ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரை மட்டுமே பெற்றது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் பிரதமரானபோது அவர் மீதான மக்கள் கோபம் அதிகரித்தது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: