You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை: "அரசியல் உள்நோக்க குற்றச்சாட்டுகளை நிராகரியுங்கள்"
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை மோசமடைந்து வருவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பான தீர்மானம் மீது இன்றைய நாளின் பிற்பகுதியில் உறுப்பு நாடுகள் அவற்றின்நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் காணொளி வாயிலாக பங்கேற்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பேசினார்.
"இலங்கை இதுவரை இல்லாத பரப்புரைகளால் இலக்கு வைக்கப்படுகிறது. இலங்கையை இன அடிப்படையில் பிரித்து ஒரு தனி அரசை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், மூன்று தசாப்தங்களாக நீடித்த பயங்கரவாத பிரசாரத்திற்குப் பின்னர், உலகின் இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிலிருந்து ஒற்றையாட்சி அரசு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக, இலங்கையின் ஆயுதப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக வீழ்த்தினர்."
"இலங்கையில் பதவியில் இருந்த ஜனாதிபதி மற்றும் இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் தனது பயங்கரவாதத்தை விரிவுபடுத்தி இந்தியாவின் முன்னாள் பிரதமர் என இரண்டு உலக தலைவர்களை கொலை செய்த உலகின் ஒரே பயங்கரவாத அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகும்."
"இலங்கையில் பயங்கரவாதத்தின் முடிவானது, அனைத்து உரிமைகளிலும் மிகவும் மதிக்கத்தக்க உரிமையான, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய அனைத்து இலங்கையர்களின் உயிர் வாழ்வதற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளித்தது."
"கடந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுநோயின் பாதிப்புக்களை இலங்கை எதிர்த்துப் போராடியபோதிலும், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சவால்களுக்கு மத்தியிலும், நாங்கள் ஆகஸ்ட் 2020 இல் ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான பொதுத் தேர்தலை நடாத்தி, ஆசியாவின் மிகப் பழமையான நாடாளுமன்ற ஜனநாயக நாடுகளில் ஒன்றான எமது நாட்டில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது."
"இலங்கைக்கு எதிராக செயல்படும் சக்திகள், வேறு நாடு சார்ந்த தீர்மானத்தை இங்கே முன்வைக்க விரும்புவது வருந்தத்தக்கது. இந்த அமைப்பு எந்த நோக்கத்துக்காக அமைக்கப்பட்டதா அதன் மதிப்புகள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில், வெறும் அரசியல் உள்நோக்க முயற்சிக்கு இலங்கை இரையாக வேண்டுமா என்பதை இந்த கவுன்சில் தீர்மானிக்க வேண்டும்," என்றார் குணவர்த்தன.
முன்னதாக, இலங்கை உள்நாட்டுப்போரின்போது போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ராணுவ உயரதிகாரிகள் மற்றும் பிறருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் தலைமை அதிகாரி மிஷெல் பேச்லெட் வலியுறுத்தினார்.
2009இல் முடிவுக்கு வந்த 37 ஆண்டுகால போரின் இறுதிகட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதி வழங்குவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற இலங்கை தவறி விட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அணி திரண்ட பிரிட்டிஷ் எம்.பி.க்கள்
இந்த வரைவுத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் வெளியிட்ட உடனேயே, பிரிட்டன் எம்.பிக்கள் தலைமையிலான தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு சார்பில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப்பிடம் ஒரு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இலங்கை போர் குற்ற விதி மீறல் தொடர்பான ஆவணங்களை தொகுப்பதுடன், தன்னிச்சையான விசாரணைக்கு பிரிட்டன் சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டு இலங்கையின் முயற்சியை ஆதரிக்குமாறு இந்தியாவுக்கு இலங்கை அழைப்பு விடுத்தது.
எனினும் இந்த விவகாரத்தில் இந்தியாவின் கருத்து இதுவரை தெளிவாகவில்லை.
பிற செய்திகள்:
- பாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - என்ன நடந்தது?
- சித்ரவதை செய்து பணிப்பெண் கொலை: சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்
- டெல்லி கலவர வழக்கு: ஆதாரங்கள், சமூக ஊடக பதிவுகள் - மர்மங்களும் திருப்பங்களும் - பகுதி 2
- உலக பணக்காரர் பட்டியல்: ஒரே மாதத்தில் முதலிடத்தை இழந்த ஈலோன் மஸ்க்
- கிம்முக்கு டிரம்ப் கொடுத்த அசாதாரண சலுகை - அதிர்ச்சியில் அமெரிக்கா
- இந்தியா - சீனா மோதல்: 'தவறாகப் பேசிய' 6 பேரை கைது செய்த சீனா
- 'அமெரிக்காவில் உலகப் போரைவிட கொரோனாவால் அதிக மரணங்கள்' - பைடன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: