பாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - என்ன நடந்தது?

    • எழுதியவர், யூ.எல். மப்றூக்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கைக்கு இரண்டு நாட்கள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை பிற்பகலில் சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் முஸ்லிம் எம்.பிக்கள் முறையிட்டதாக அறிய முடிகிறது.

கொழும்பில் உள்ள ஷாங்ரிலா விடுதியில் பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக அதில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பிபிசி தமிழிடம் கூறினார். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவது தொடர்பில் இம்ரான் கானிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டபோது, இதற்கான முடிவு கிட்டும் என தம்மிடம் இம்ரான் கான் கூறியதாக முஷாரப் தெரிவித்தார்.

"உடல்கள் பலாத்காரமாகத் தகனம் செய்யப்படும் விவகாரம் தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களிடம் தான் பேசியதாக பாகிஸ்தான் பிரதமர் கூறினார். மேலும் கொரோனாவால் மரணிப்போரின் உடல்களை தகனம் செய்வதை முடிவுக்குக் கொண்டு வர தம்முடன் பேசியவர்கள் விருப்பம் கொண்டிருந்ததாகவும் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் எனவும் இம்ரான் கான் நம்பிக்கையூட்டினார்" என்றும் முஷாரப் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் வரையில் நடைபெற்றுள்ளது.

சந்திப்பு ரத்து என அறிவித் அரசாங்கம்

முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் பாகிஸ்தான் விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் - இலங்கையை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம் சென்று வரவேற்றார்.

பாகிஸ்தான் பிரதமரின் இந்தப் பயணத்தின் போது, அவரை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பர் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அந்தச் சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டு விட்டதாக, இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல நேற்று ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில், பாகிஸ்தான் பிரதமருக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்றார். ஆயினும் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் தமது அரசாங்கம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

அரசின் இந்த பதில் தொடர்பாக ஊடகங்கள் வாயிலாக எதிர்வினையாற்றினார், முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம்.

"போலியான, கோழைத்தனமான காரணத்தை கெஹலிய ரம்புக்வெல கூறுகிறார். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாகிஸ்தான் பிரதமர் சந்தித்தால் - அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பாகிஸ்தான் அரசாங்க பிரமுகர்களுக்கு அரசாங்கம் கூறியுள்ளது. இது எந்த அடிப்படையும் இல்லாத பித்தலாட்ட கதையாகும்" என்று ரஊப் ஹக்கீம் கூறினார்.

இம்ரான் கான் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வருகை தரும் நேரத்தில், இலங்கையின் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா காரணமாக மரணிப்போரின் சடலங்களை பலாத்காரமாக தகனம் செய்வதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் பொருட்டும், இவ்விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமரின் கனவத்தை ஈர்க்கும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

சந்திப்புக்கு அனுமதி

இவ்வாறான நிலையிலேயே பாகிஸ்தான் பிரதமருக்கும் இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

இந்த சந்திப்புக்கு முன்னதாக இது குறித்து தனது 'பேஸ்புக்' பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம்; 'பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திடம் தான் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க, அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆயிஷா அபூபக்கர் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியதாக' குறிப்பிட்டிருந்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதோடு, அவர்களின் முன்னிலையில் 05 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களாவன;

1. பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஆகியவற்றுக்கு இடையிலான சுற்றுலா ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

2. இலங்கை முதலீட்டு சபைக்கும் பாகிஸ்தான் முதலீட்டு சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

3. இலங்கை தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி.ஐ), மற்றும் பாகிஸ்தான் கராச்சி பல்கலைக்கழகம் ஆகியற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

4. கொழும்பு தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத்தின் COMSATS பல்கலைக்கழகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு.

5. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாகூர் பொருளாதார கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஜனாதிபதியுடன் சந்திப்பு

இந்த நிலையில், புதன்கிழமை காலை பாகிஸ்தான் பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளினதும் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வது குறித்து, இரு நாட்டு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும், இரு தலைவர்களும் - இதன்போது கவனம் செலுத்தியதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் - இலங்கைக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ள போதிலும், அவர் சுமார் 24 மணித்தியாலங்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருந்தார். இதைத்தொடர்ந்து புதன்கிழமை மாலை 5 மணியளவில் அவர் தனது பயணத்தை நிறைவு செய்து கொண்டு, இலங்கையில் இருந்து பயணமானார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: