You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - சீனா எல்லை மோதல்: 'தவறாகப் பேசிய' 6 பேரை கைது செய்த சீனா - கல்வான் சம்பவம்
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் கல்வன் பள்ளத்தாக்கில் நடந்த கைகலப்பில் உயிரிழந்த, சீன ராணுவ வீரர்களைக் குறித்து தன் கருத்தைப் பதிவிட்ட, க்வி (Qiu) என்கிற சீன வலைத்தள பதிவர் ஒருவரை கைது செய்திருக்கிறது சீன காவல் துறை.
38 வயதாகும் அந்த நபர், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் நடந்த மோதலை, "மிக மலினமாக உண்மையைத் திரித்துக் கூறினார்" என சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இப்படி கல்வான் மோதல் குறித்து தவறாகப் பேசியதாக சீனா தடுப்புக் காவலில் வைத்திருக்கும் ஆறு பேரில் இவரும் ஒருவர்.
2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்பட்ட இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான மோதல், 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
"சீனாவின் நாயகர்கள் மற்றும் சீனாவுக்காக உயிர்நீத்தவர்கள் குறித்து அவதூறு பேசத் தடை" என 2018ஆம் ஆண்டில் சீனா ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது.
சீனாவின் குற்றவியல் சட்டத்தில், ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தால் தான், இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்ய முடியும். அச்சட்டத் திருத்தம் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. என சீனா டெய்லி என்கிற பத்திரிகை கூறியுள்ளது.
அச்சட்டத்தின் கீழ், குற்றம் நிரூபிக்கப்படுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இதே குற்றத்தைக் க்வி 10 நாட்களுக்குப் பின் செய்திருந்தால், சீனாவின் நாயகர்கள் மற்றும் சீனாவுக்காக உயிர்நீத்தவர்களைக் குறித்து அவதூறு பேசத் தடை விதிக்கும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் முதல் குற்றவாளியாக இருந்திருப்பார் என சீனா டெய்லி பத்திரிகை கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி 19-ம் தேதி க்வி (Qiu) என்கிற பெயரைக் கொண்ட 38 வயதுடைய வைபோ பயனர் கைது செய்யப்பட்டிருப்பதாக நான்ஜிங் பொது பாதுகாப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
அவரை 2.5 மில்லியன் பேர் பின்தொடர்ந்து இருப்பதாகவும் உள்ளூர் செய்திகள் கூறுகின்றன. அவருடைய வைபோ கணக்கு அடுத்த ஓர் ஆண்டு காலத்துக்கு முடக்கப்பட்டு இருப்பதால், பிபிசியால் அதைச் சரிபார்க்க முடியவில்லை.
சீனா தனக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் மீது, "சண்டை போடுவது மற்றும் பிரச்னைகளைத் தூண்டுவது" என்கிற குற்றத்தின் கீழ் வழக்கு தொடரும். அதே பிரிவின் கீழ் தான் க்வியையும், சீன ராணுவ வீரர்களை விமர்சித்த பலரையும் பதிவு செய்திருக்கிறது.
ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் என்ன கூறினார்கள் என்பதை சீன அதிகாரிகள் தரப்பு வெளியிடவில்லை.
கடந்த வாரத்தில் தான் முதல் முறையாக இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில், கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில், தன் தரப்பில் நான்கு வீரர்கள் இறந்திருப்பதை சீனா வெளிப்படையாக ஒப்புக் கொண்டது.
பி.எல்.ஏ டெய்லி எனப்படும் சீன ராணுவத்தின் அதிகாரபூர்வ பத்திரிகை, அந்த நான்கு சீன வீரர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டியது. அந்த நால்வருக்கும் சீனா விருதுகளைக் கொடுத்து கெளரவித்திருக்கிறது.
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான 3,440 கிலோமீட்டர் நீளும் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டு (லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்) எல்லைப் பகுதியினால் தான் கடந்த பல தசாப்தங்களாக இரு நாடுகளும் உரசிக் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் இரு நாடுகளும் தங்கள் தரப்பு ராணுவத்தை பின் வாங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: