9 மாதங்களுக்கு பிறகு இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

சுற்றுலா

பட மூலாதாரம், Twitter

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தெற்காசியாவின் சிறந்த சுற்றுலா நாடுகளில் ஒன்றான இலங்கையின் சுற்றுலா துறை, கடந்த 9 மாதங்களாக முழுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தனது சேவையை தொடங்கியிருக்கிறது.

9 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக இலங்கைக்கு 185 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திங்கட்கிழமை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு யுக்ரேன் நாட்டிலிருந்து இந்த சுற்றுலா பயணிகள் வந்தனர்.

சுமார் 10 முதல் 14 நாட்கள் வரை இவர்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கோவிட் - 19 தொடர்பான சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளுக்கு அமைய, இந்த சுற்றுலா பயணிகள் தென் மாகாணத்திலுள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சுற்றுலா அமைச்சின் தரவுகளுக்கு அமைய, இலங்கையின் சுற்றுலா துறை 1971ஆம் ஆண்டு முதல் சேவையை வழங்கி வருகிறது.

தொடக்க ஆண்டிலேய 39,654 சுற்றுலா பயணிகள் தீவு நாட்டுக்கு வந்தனர். இவ்வாறு சுற்றுலா துறை ஊடாக, 3.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவுக்கு அப்போது இலங்கைக்கு வருமானம் கிடைத்lதது.

இதன் பிறகு இலங்கையின் சுற்றுலா துறை படிப்படியாக அபிவிருத்தி பாதையை நோக்கி நகர்ந்தது. இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட, சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள், வருடந்தோறும் இலங்கைக்கு வந்தனர்.

இந்த நிலையில், ஆரம்ப காலம் முதல் பின்னடைவையே சந்திக்காத சுற்றுலாதுறை, இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு, கோவிட் தொற்று காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்டது.

இலங்கையில் 2019ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலால் ஓரளவு சுற்றுலா துறை பின்னடைவை சந்தித்தாலும், அந்த ஆண்டு ஒப்பீட்டு ரீதியில் பின்னடைவை சந்திக்கவில்லை.

1975ஆம் ஆண்டில் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் என்ற மைல் கல்லை தொட்ட இலங்கையின் சுற்றுலா துறை, 2012ஆம் ஆண்டு முதல் தடவையாக ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகள் என்ற மைல் கல்லை எட்டியது. அதன் பின்னர், 2016ஆம் ஆண்டு இரண்டு மில்லியன் சுற்றுலா பயணிகள் என்ற மைல் கல்லை, இலங்கை எட்டியது. 2018ஆம் ஆண்டில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 796 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்தனர்.

சுற்றுலா

பட மூலாதாரம், Twitter

இதுவே இலங்கை வரலாற்றில் அதிகூடிய சுற்றுலா பயணிகள் நாட்டை வந்த வருடமாக வரலாற்றில் பதிவாகியது. 2019ஆம் ஆண்டு சுற்றுலா துறையில் மற்றுமொரு மைல் கல்லை தொடுவதற்கு இலங்கை முயற்சித்த போதிலும், ஈஸ்டர் தாக்குதல் அதற்கு தடையாக இருந்தது.

இதனால், 2019ஆம் ஆண்டு இலங்கையின் சுற்றுலா துறை மீண்டும் சற்று பின்நோக்கி நகர்ந்தது. 2019ம் ஆண்டு இலங்கைக்கு 19 லட்சத்து 13 ஆயிரத்து 702 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

சுற்றுலா துறையின் ஊடாக 2019ஆம் ஆண்டு இலங்கை, 3,606.9 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியிருந்தது. இலங்கை சுற்றுலா துறை வரலாற்றில் 2018ம் ஆண்டே, அதிகளவிலான வருமானம் கிடைத்த ஆண்டாக பதிவாகியுள்ளது.

இதன்படி, 2018ஆம் ஆண்டு 4,380.6 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானத்தை, சுற்றுலத்துறையின் ஊடாக இலங்கை தனதாக்கிக் கொண்டது.

இவ்வாறு சுற்றுலா துறையில் கொடிகட்டி பறந்த இலங்கைக்கு, கோவிட் - 19 வைரஸ் தடங்கலாக அமைந்தது. இந்த ஆண்டு முதல் 3 மாதங்களில் மாத்திரமே இலங்கையின் சுற்றுலா துறை உயிர் பெற்றிருந்தது.

அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 434 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்தனர். அதேவேளை, பிப்ரவரி மாதம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 507 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர்.

இலங்கையில் முதலாவது கோவிட் தொற்றாளர் பிப்ரவரி மாதம் இறுதி வாரத்திலேயே அடையாளம் காணப்பட்டிருந்தார். இந்த நிலையில், மார்ச் மாதம் 71 ஆயிரத்து 370 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வந்தனர்.

மார்ச் மாதம் 20ஆம் திகதியுடன் நாடு முடக்கப்பட்ட நிலையில், விமான நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் , ஒரு சுற்றுலா பயணி கூட இலங்கைக்கு வருகைத் தரவில்லை.

இலங்கையின் சுற்றுலா துறை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பின்னணியில், 9 மாதங்களின் பின்னர் முதல் தடவையாக 185 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்தனர்.

சுற்றுலா துறை அமைச்சரின் விளக்கம்

இன்று முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி வரை ஒரு புதிய வேலைத்திட்டமாக இந்த சுற்றுலா துறை முன்னெடுக்கவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார்.

இலங்கை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

பட மூலாதாரம், PRASHANNA RANATHUNGA

படக்குறிப்பு, இலங்கை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

சுற்றுலா பயணிகளை பயோ பபல் திட்டத்தின் கீழ், நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் திகதி வரை விசேட விமானங்களின் ஊடாக வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கே இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பின்னர், சாதாரண விமானங்களின் ஊடாக வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கும் நாட்டின் பல பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்தவுடன், பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும் என அவர் தெரிவிக்கின்றார்.

அதன்பின்னர், 5 மற்றும் 7 நாட்களுக்கு இடையில் மற்றுமொரு பி.சி.ஆர் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறுகின்றார்.

சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வோர் கடைபிடிக்க வேண்டிய, சுகாதார வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

ஒவ்வொரு சுற்றுலா தலங்களுக்கும், ஒவ்வொரு நடைமுறைகளை பின்பற்றவுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

சுகாதாரத்துறை கருத்து

சுற்றுலா பயணிகள் ஊடாக நாட்டிற்கு ஏற்படும் அச்சுறுத்தலை குறைத்துக்கொள்ளும் விதத்திலேயே, இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் டாக்டர் ஹரித்த அளுத்கே தெரிவிக்;கின்றார்.

நாட்டு மக்களுடன் இணையாத வகையில், இந்த சுற்றுலா பயணிகளை நாட்டிற்குள் செல்ல அனுமதிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

சுற்றுலா துறை என்பது இலங்கையின் முக்கிய வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு துறை என்பதனால், இந்த துறையை முன்னோக்கி கொண்டு செல்வது கட்டாயமானது எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கை தொடர்பில் நம்பிக்கை இருந்தால் மாத்திரமே, நாட்டிற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தருவார்கள் என அவர் குறிப்பிடுகின்றார்.

கோவிட் தொற்றை கட்டுப்படுத்தி, சரியான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மாத்திரமே, இந்த சுற்றுலா துறையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என அவர் கூறுகின்றார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய, சுற்றுலா பயணிகளை, சுற்றுலாவில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி, பின்னர் சுற்றுலாவிற்கு அனுமதிக்கும் நடைமுறை சாத்தியமற்றது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதனால், தனிமைப்படுத்தலில் இருந்தவாறே, அவர்கள் சுற்று பயணத்தில் ஈடுபடும் சந்தர்ப்பம் குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சுற்றுலா தலங்களுக்கு மாத்திரமே, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :