இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - களநிலவரம் SriLanka corona Updates

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் (மார்ச்14) வரை 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்த தொகையானது நேற்றிரவு (மார்ச்15) ஆகும் போது 18 வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை உறுதிப்படுத்தி அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று (மார்ச் 15) காலை அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்று மாலை புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியிலிருந்து வருகைத் தந்து, பொலன்னறுவை - கந்தகாடு தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்ட வந்த 7 பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு இலக்கான குறித்த 7 பேரும் பொலன்னறுவை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகைத்தந்தவர்கள் அனைவரும் கடந்த 10ஆம் தேதி முதல் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று ஆய்வு மத்திய நிலையங்களுக்கு 14 நாட்கள் கண்காணிப்புக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் இத்தாலியிலிருந்து வருகைத் தந்த பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிலையங்களில் சுமார் 1700 பேர் வரை தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 133 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் இன்று அரச, வங்கி, வர்த்தக விடுமுறை

சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் தவிர்ந்த ஏனைய அனைவருக்கும் அரசாங்கத்தினால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக இன்றைய தினம் (16) இலங்கை அரசாங்கத்தினால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வோர் வழமை போன்று தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் குறிப்பிடுகின்றது.

அத்துடன், பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வழமை போன்று செயற்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவிக்கின்றார்.

கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற பின்னணியிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்விசார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சினிமா திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

அதேபோன்று, மத வழிபாடுகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அந்தந்த மதத் தலைவர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: