You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கைலாசா நாட்டில் கொரோனா வைரஸா? நித்யானந்தா கூறுவது என்ன?
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: 'கொரோனா வைரஸ் என்னை தாக்காது: நித்யானந்தா'
கொரோனா வைரஸ் தன்னை தாக்காது என்றும், பரமசிவன் எங்களை பாதுகாக்கிறார் எனவும் நித்யானந்தா டுவிட்டரில் கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடத்தல் வழக்கில் குஜராத் போலீசார் நித்யானந்தாவை தேடியபோது அவர் பெண் சீடர்களுடன் வெளிநாடு தப்பி ஓடியது தெரியவந்தது. ஈக்வடார் அருகே 'கைலாசா' என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையே பாலியல் வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
நித்யானந்தாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை போலீசார் நாடினர். இதையடுத்து புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து நித்யானந்தாவை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஸ்ரீகைலாசா நாட்டின் பிரதமர் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட நித்யானந்தா தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
"கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் என்னை தாக்காது. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களை பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலாக உள்ளார்".
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி: கொரோனா பாதிப்பு - 1.7 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை
கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து சென்னை திரும்பிய 1.74 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சீனா, இத்தாலி, இரான் என கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவா்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனா்.
அந்த வகையில், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இதுவரை 1.74 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து திரும்பிய 1,973 போ் தொடா் மருத்துவக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். இதுவரை, தமிழகத்தில் 88 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில் 85 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரும் தற்போது குணமடைந்துவிட்டாா். இருவரது பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கண்காணிப்பில் கேரள நபருடன் பயணித்தவா்கள்: கொரோனா பாதிப்புக்குள்ளான கேரள நபருடன் விமானத்தில் பயணித்த தமிழகத்தைச் சோ்ந்தவா்களை மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தவுள்ளதாக சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
அண்மையில் கத்தாா் தலைநகா் தோஹாவில் இருந்து வந்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நபா் கேரளத்தில் தனி வாா்டில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதனிடையே, அந்த நபருடன் விமானத்தில் பயணித்தவா்களில் சிலா் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதுகுறித்த தகவல்களை கேரள சுகாதாரத் துறை தமிழக அரசிடம் பகிா்ந்துள்ளது. அதன்படி, அந்த நபா்களைக் கண்டறிந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்க உள்ளோம் என்று அவா் தெரிவித்தாா்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "மார்ச் 29-இல் திமுக பொதுக்குழு"
திமுக பொதுக்குழு கூட்டம் அக் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.
திமுக பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகன், வயது முதிா்வு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 7-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இந்த நிலையில், கட்சிக்கு புதிய பொதுச் செயலாளரைத் தோ்வு செய்வதற்காக திமுக பொதுக் குழு கூட்டம் நடத்தப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், பொதுக் குழு உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
புதிய பொதுச் செயலாளருக்கான போட்டிக்களத்தில் தற்போதைய பொருளாளா் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு உள்ளிட்டோா் உள்ளனா்.
இதுகுறித்த அறிவிப்பை அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.
இந்து தமிழ் திசை: "ம.பி. சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு"
மத்தியப் பிரதேசத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதவி விலகிய நிலையில், சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடந்த வாரம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதவி விலகினர். இதனால் அக்கட்சியின் பலம் 114-ல் இருந்து 92 ஆக குறைந்தது. இதையடுத்து, முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப் பட்டது.
இந்நிலையில், மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் முதல்வர் கமல்நாத்துக்கு நேற்று முன் தினம் இரவு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
மத்தியப் பிரதேசத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவி விலகல் கடிதங்களை சட்டப் பேரவைத்தலைவருக்கு அனுப்பி உள்ளதாக அறிந்தேன். இதுகுறித்து அவர்கள் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களிலும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் நான் பார்த்தேன்.
மேலும் அந்த 22 பேரும் இது தொடர்பாக கடந்த 10-ம் தேதி எனக்கும் கடிதம் எழுதி உள்ளனர்.
அரசியல் சாசன சட்டத்தின் 174 மற்றும் 175(2) ஆகிய பிரிவுகளின் கீழ், 16-ம் தேதி (இன்று) சட்டப் பேரவை கூட்டத் தொடர் எனது உரையுடன் தொடங்கும். உங்கள் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக கருதுகிறேன். எனவே எனது உரை முடிந்ததும் நீங்கள் (முதல்வர்) பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும். இந்த நடைமுறைகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பை அன்றைய தினமே முடிக்க வேண்டும். எந்தக் காரணத்துக்காகவும் தள்ளி வைக்கவோ, தாமதப்படுத்தவோ கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எனினும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து பேரவைத் தலைவர்தான் முடிவு எடுக்க முடியும் என அமைச்சர் பி.சி.சர்மா தெரிவித்தார்.
இது குறித்து சட்டப்பேரவைத்தலைவர் என்.பி.பிரஜாபதி நேற்று கூறும்போது, "நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இது குறித்து நாளை (இன்று) எனது முடிவை அறிவிப்பேன்" என்றார்.
கொறடா உத்தரவு
சட்டப்பேரவை இன்று கூடும் என ஆளுநர் அறிவித்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் நேற்று போபால் திரும்பினர். எனினும் அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு செல்லவில்லை. ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: