You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா: மலேசியாவில் ஒரே நாளில் 190 புது நோயாளிகள்
மலேசியாவில் இன்று ஒரே நாளில் 190 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 428ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் கிருமித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும் சந்தேக நபர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதும் கண்காணிப்பதும் தீவிரமடைந்துள்ளது.
இன்று நோய்த் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் என மலேசிய சுகாதார அமைச்சர் அதம் பாபா தெரிவித்துள்ளார். அந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் பங்கேற்ற நிலையில், அவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை நீடித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சமய நிகழ்வில் பங்கேற்ற புருனே நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரைப் பற்றி மலேசிய சுகாதார அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
"சமய நிகழ்வில் பங்கேற்றவர்கள் தாமே முன்வந்து மருத்துவப் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் உடனடியாக அருகில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தை தொடர்பு கொண்டால் உரிய வழிகாட்டுதல் கிட்டும்.
"சமய நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம். கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் அவசியம்," என்று அதம் பாபா தெரிவித்தார்.
9 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி; 42 பேர் குணமடைந்தனர்
மலேசியாவில் 428 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 9 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்புக்காக சிகிச்சை பெற்றவர்களில் 42 பேர் முழுமையாக பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருமித் தொற்று குறித்து தவறான, பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. அதே சமயம் கிருமித் தொற்றில் இருந்து பலர் முழுமையாக குணமடைவது குறித்த தகவல்களை பரவலாகப் பகிர்ந்து கொள்ளுமாறு அரசு தரப்பு அறிவுறுத்தி உள்ளது.
பிரதமர் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்
கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பது மலேசியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக நாளை மலேசிய பிரதமர் மொகிதின் யாசின் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இத்தகவலை செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்த சுகாதார அமைச்சர் அதம் பாபா இந்த சிறப்புக் கூட்டத்தில் தாமும், பாதுகாப்புத் துறை அமைச்சரும் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார்.
கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாக அமைச்சர் கூறினார்.
கிருமி - நோய்த் தொற்று, கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துதல், கிருமித் தொற்றை குறைத்தல் என மூன்று கட்டங்களாக கொரோனா கிருமித் தொற்றை அணுக வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தற்போது மலேசியா இரண்டாம் கட்டத்தின் இறுதிப் பகுதியில் இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து இதுவரை சிங்கப்பூர், மலேசியா எல்லைப் பகுதி வழியே சுமார் 68 லட்சம் பேர் சென்று வந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் கூட கிருமித் தொற்றுக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா சிக்கலுக்கு மத்தியில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்
கொரோனா கிருமித் தொற்றால் சிங்கப்பூரில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்நாட்டு அரசு தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அங்கு பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அங்கு நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் முடிவடைந்ததை அடுத்து, தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவின் அறிக்கையை அரசாங்கம் மார்ச் 13ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டுவிட்டதால் விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தரப்பினர் கருதுகின்றனர். அதே சமயம், தற்போதைய சூழலில் தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது என்றும், கொரோனா கிருமிக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் தேர்தலை நடத்துவது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"தற்போதைய சூழலைப் பார்க்கும்போது, நிலைமை சீரடைந்த பிறகு தேர்தலை நடத்துவது அல்லது முன்னதாகவே தேர்தலை நடத்தி முடிப்பது என இரு தெரிவுகள் உள்ளன.
"தற்போதைய சூழலையும் எதிர்காலக் கண்ணோட்டத்தையும் பொறுத்தே தேர்தல் நடத்தப்படும் தேதி முடிவு செய்யப்படும்," என்று பிரதமர் லீ தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: