You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா: நாட்டில் உள்ள எல்லா மக்களையும் தனிமைப்படுத்துவோம் - செக் குடியரசு பிரதமர் அறிவிப்பு
உலக அளவில் கொரோனா வைரஸ் பிரச்சனையில் தற்போதைய முக்கிய செய்திகள்:
- நாட்டில் உள்ள எல்லா மக்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று செக் குடியரசின் பிரதமர் ஆன்ட்ரெஜ் பாபிஸ் தெரிவித்ததாக அந்நாட்டின் சிடிகே செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டில் 214 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், நேற்றில் இருந்து புதிதாக 25 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் முன்னதாக செக் குடியரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
- 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ள இருப்பதாக பிரிட்டன் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
- பிரான்ஸ் மக்களில் பாதிப்பேருக்கு இந்த வைரஸ் தொற்றும் என்று அந்நாட்டு கல்வி அமைச்சர் ழீன்-மைக்கேல் பிளான்கர் தெரிவித்துள்ளார்.
- தொழிலாளர்களில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்றக்கூடும் என்று தெரிவித்த பிரிட்டன், நிலைமை மோசமானால் தங்கள் நாட்டு மக்கள் தொகையில் 80 சதவீதம் பேருக்கு இந்த நோய் தொற்றக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
- ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக வருகிற அனைவரையும் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
- ஸ்பெயினில் நோய்த் தொற்றியவர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2000 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
- கொரோனா வைரஸ் தொடர்பான விரிவான கட்டுப்பாடுகள் இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க பிரான்ஸ் மக்கள் செல்கின்றனர்.
- கத்தோலிக்க சமயத் தலைமையமகான வாட்டிக்கனில், ஈஸ்டர் வார கொண்டாட்டங்கள், வழிபடும் மக்கள் இல்லாமல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான விசாரணை, இந்தப் பிரச்சனையால் மே 24 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்குத் திரும்பி வருகிறவர்களுக்கு விமான நிலையத்தில் மேற்கொள்ளவேண்டிய கட்டாயப் பரிசோதனைகள் குறித்த புதிய உத்தரவால், விமான நிலையங்களில் நீண்ட வரிசைகளில் பயணிகள் காத்திருக்கின்றனர்.
- கஜகஸ்தான் அவசரநிலை அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்த நாட்டில் இருந்து வெளியே செல்லவும், அந்த நாட்டுக்கு உள்ளே வரவும் கிட்டத்தட்ட முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சார்க் நாடுகளின் தலைவர்களுடன் கொரோனா தொற்று அபாயம் குறித்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாடிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, "கோவிட்-19 அவசரகால நிதி என்ற பெயரில் ஒரு நிதியை நாம் உருவாக்கலாம். தன்னார்வமாக நாடுகள் இதற்குப் பங்களிக்கலாம். இந்த நிதிக்கு தொடக்க பங்களிப்பாக இந்தியா 1 கோடி அமெரிக்க டாலர்கள் வழங்கும்" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: