“யாழ் விமான நிலையத்தில் தமிழுக்கு முன்னுரிமையா?” - சீறும் சிங்கள குழுக்கள்

"யாழ் விமான நிலையத்தில் ஏன் தமிழுக்கு முன்னுரிமை?" - கேள்வி எழுப்பும் சிங்கள் குழுக்கள்

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

உள்ளக விமானச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம், இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டது.

தமிழுக்கு முன்னுரிமை

முதற்கட்டமாகச் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமானச் சேவை எதிர்வரும் முதலாம் தேதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் விமான நிலையம்
படக்குறிப்பு, யாழ் விமான நிலையம் 1981ஆம் ஆண்டு

இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் அதிகளவிலான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய பெயர்ப் பலகைகள் அனைத்து தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்ற பெயர்ப் பலகை உள்ளிட்ட விமான நிலையத்திலுள்ள அனைத்து பெயர்ப் பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு

இலங்கையின் ஏனைய மாகாணங்களில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதுடன், இரண்டாவதாகத் தமிழ் மொழிக்கும், மூன்றாவதாக ஆங்கில மொழிக்கும் முன்னுரிமை வழங்கப்படுவது வழக்கமான விடயமாகும்.

"யாழ் விமான நிலையத்தில் ஏன் தமிழுக்கு முன்னுரிமை?" - கேள்வி எழுப்பும் சிங்கள் குழுக்கள்

இந்த நிலையில், சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்காது, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கியமை பிழையானது என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் பெரும்பான்மை சமூகமான சிங்களர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்ட தரப்புக்கு சமூக வலைத்தள பதிவாளர்கள் சிலர் பதிலடி வழங்கியுள்ளனர்.

விளக்கம்

இலங்கை அரசியலமைப்பின் மொழி தொடர்பான சரத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டமைக்கான நியாயத்தை தெளிவூட்டியுள்ளனர்.

''சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன், பொதுப் பதிவேடுகளைப் பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடாத்தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படுதலும் வேண்டும். வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மொழி அவ்வாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும். மொத்தச் சனத் தொகைக்குச் சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மைச் சனத் தொகை என்ன விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ளதோ அதனைக் கருத்திற்கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும், அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக்கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படுதல் மொழி தவிர்ந்த அத்தகைய இடப்பரப்பிற்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படலாம் எனச் சனாதிபதி பணிக்கலாம்" என அரசியலமைப்பின் மொழி சார் சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ் விமான நிலையம் 1981ஆம் ஆண்டு
படக்குறிப்பு, யாழ் விமான நிலையம் 1981ஆம் ஆண்டு

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள இந்த விடயத்தை அரசியலமைப்பின் சிங்கள பிரதியை சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிட்டு, யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளனர்.

இலங்கை அரசியலமைப்புக்கு அமையச் சிங்கள மொழி அரசகரும மொழியாக இருத்தல் வேண்டும் என்பதுடன், தமிழும் அரசகரும மொழி ஒன்றாதல் வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் என இலங்கை அரசியலமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையையும் காணக்கூடியதாக உள்ளது.

ஹம்பாந்தோட்டை
படக்குறிப்பு, ஹம்பாந்தோட்டை

அரசியலமைப்பில் மூன்று மொழிகள் மாத்திரமே கூறப்பட்டுள்ள பின்னணியில், இலங்கை தென்பகுதியான ஹம்பாந்தோட்டை பகுதியில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தில் சீன மொழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதையும் சில வலைத்தள பதிவாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அரபு மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக மன்னார், காத்தான்குடி போன்ற பகுதிகளில் அரபு மொழிக்கு முன்னுரிமை வழங்கி பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் கருத்துக்கள் பகிரப்பட்டன.

அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத சீன மற்றும் அரபு மொழிகள் நாட்டின் பல பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்க முடியும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பின்னணியிலேயே தற்போது சில தரப்பினர் சர்ச்சைகளைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :