விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து: அமைச்சர் விஜயகலா ராஜிநாமா
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டதால் சர்ச்சைக்கு உள்ளான இலங்கையின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Twitter
தனக்கெதிரான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதற்காக இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.
இராஜினாமா கடிதத்தை வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ளதாக அவர் கூறினார். எனினும், அதற்கான பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லையென குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Mark Wilson
''நான் தெரிவித்த கருத்து குறித்து விசாரணையொன்றை நடத்துமாறு சட்டமா அதிபருக்கு சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த விசாரணைகள் நிறைவுபெறும் வரை, அதற்கு ஒத்துழைப்பேன்.'' என்று கூறினார்.
''பதவி விலகுமாறு என்னை யாரும் கோரவில்லை. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதற்காகவே நான் பதவி விலகினேன். எனக்கெதிரான விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவளிப்பேன்'' என்று அவர் குறிப்பிட்டார்.
''இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம்'' என இராஜாங்க அமைச்சர் சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார். கடந்த திங்கள்கிழமை (ஜூலை 02) யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வொன்றில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், AFP
இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என தென்னிலங்கையில் அழுத்தங்கள் அதிகரித்தன.
அமைச்சர் பதவியில் இருந்த விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்ச்சையான கருத்து குறித்து பரிசீலித்து, சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் நேற்று (04) அறிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












