சட்ட விரோத மீன்பிடி தொழிலுக்கு எதிராக யாழ்பாணத்தில் முற்றுகை போராட்டம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சட்ட விரோதமாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக் கோரி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் இணைந்து யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தை இன்று (வெள்ளிக்கிழமை)காலை 7 முதல் 11 மணிவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

பட மூலாதாரம், EyesWideOpen/Getty Images
வடமராட்சி கிழக்கில் சுமார் 1500க்கும் மேற்பட்ட தென்பகுதி மீனவர்கள் சட்ட விரோதமாக தங்கியிருந்து கடலட்டை படிக்கும் தொழில் செய்துவருகின்றனர்.
இந்த தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
இன்றையதினம் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மற்றும் அரசியல்வாதிகள், பொது அமைப்புக்கள் இணைந்து யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் கதவுகளை மூடி முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதனால் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்ல முடியாத நிலையில் வீதியில் நிற்க வேண்டியதாயிற்று.
"நீரியல்வளத்துறை திணைக்களமே சட்டதிட்டங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்து", "எமது கடல்வளம் எமது மக்களுக்கே", "கடலட்டை பிடிக்கும்போது உண்டாகும் பாதிப்புக்களுக்கு யார் பொறுப்பு?" என்பன போன்ற கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை எந்திக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மிக அமைதியான முறையில் முற்றுகை போராட்டத்தை நடத்தினர்.

பட மூலாதாரம், Getty Images
சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் இறுதியில், மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடலட்டை பிடிப்பதற்கான நியமங்களை வடமராட்சி கிழக்கில் சட்ட விரோதமாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்கள் பின்பற்றாததால் எமது மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். தினசரி எமது மீனவர்களின் வலைகள் அறுக்கப்பட்டு வருகின்றன என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எனவே, கடற்றொழில் அமைச்சருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, கடலட்டை பிடிப்பதற்கான நியமங்களை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திற்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டது.
அந்த உத்தரவாதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால்தான் முற்றுகை போராட்டத்தை நடத்துகிறோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்,
ஆகவே, கடைபிடிக்க வேண்டிய நியமங்களை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டால் முற்றுகை போராட்டத்தை கைவிட தயார் என்று போராட்டக்காரர்கள் சார்பாக கூறப்பட்டது.
இவ்வாறு சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்துவருவதாக நீரியல் வளத்துறைத்திணைக்கள உத்தியோகத்தர்கள் கூறினர்.
ஆயினும், ஒருசில படகுகளையே பிடிப்பதால் பயனில்லை. அதிக அளவிலான படகுகளை பிடிக்கவேண்டும். அவ்வாறு செய்யும்போது தென்பகுதி மீனவர்கள் வெளியேறுவார்கள் எனவும் கூறப்பட்டது.
இதற்கு பதிலளித்த கடற்றொழில் திணைக்கழக ஊழியர்கள், கடற்படையின் உதவியை பெற்று சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
மேலும், தென்பகுதி கடலட்டை தொழிலாளர்கள் சட்டத்தை மீறி தொழில் செய்கிறார்கள் என்பதை வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தினால் அது தொடர்பிலும் உடனடி நடவடிக்கை எ டுக்கப்படவேண்டும் எனவும் கேட்கப்பட்டது.
இதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள ஊழியர்கள் இணங்கியதை தொடர்ந்து கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தை மீறி கடலட்டை பிடிக்கும் தென்பகுதி மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை அதிகாரிகள் ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கமைய இரண்டு, மூன்று நாட்கள் கடற்றொழில் திணைக்களத்தின் நடவடிக்கைகளை அவதானிப்போம்.
அவர்களுடைய நடவடிக்கைகளில் திருப்பதி ஏற்பட்டால், சட்டத்தை மீறும் அனைத்து மீனவர்களை கைது செய்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி சிந்திப்போம். இல்லையேல் எதிர்வரும் திங்கள்கிழமை காலை முதல் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
- 12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி: யார் இந்த ஈஸ்வரி ராவ்?
- தலை வெட்டப்பட்ட பிறகும் கொத்திய பாம்பு : கடிபட்டவருக்கு தீவிர சிகிச்சை
- திருமணத்துக்கு அஞ்சும் இளைஞர்கள்: சரியும் பிறப்பு விகிதம் - காரணம் என்ன?
- டிரம்ப்-கிம் உச்சி மாநாடு நடைபெற சென்டோசா தீவை தேர்ந்தெடுத்தது ஏன்?
- சுவையான, தரமான உணவு வேண்டுமா?: 10 முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












