டிரம்ப்-கிம் சந்திப்பு நடைபெறும் சென்டோசா தீவை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையில் நடைபெறும், அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சந்திப்பு, சிங்கப்பூரின் சென்டோசா தீவில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

பட மூலாதாரம், REUTERS/CAPELLA SINGAPORE
ஜூன் மாதம் 12ம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த சந்திப்பு 2 வாரங்களுக்கு முன்னால் அதிபர் டிரம்பால் ரத்து செய்யப்பட்டது.
ஆனால், அப்போது முதல் இருதரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொடர்புகளாலும், முயற்சிகளாலும் இந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
திட்டங்கள் மிகவும் நன்றாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக செவ்வாய்க்கிழமை அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் அணு ஆயுத திட்டத்தை கைவிடப்போவதை உறுதி அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.
ஆனால், சிங்கப்பூரில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையின்போது எவற்றை பற்றி விவாதிக்க போகிறார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
"வட கொரிய நிலைமையை அறிந்துகொள்ள உதவுகிற சந்திப்பு" என்று இந்த சந்திப்பை குறிப்பிட்டுள்ள அதிபர் டிரம்ப், "இந்த முதல் சந்திப்பு நீண்ட கால தொடர் பேச்சுவார்த்தைகளின் தொடக்கமாக அமையும்" என்று தெரிவித்திருக்கிறார்.
"அதிக தொடர்புகள் உருவாகியுள்ளன. இந்தப் பயணத்திற்கு முன்னால் பல பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இவை மிகவும் முக்கியமானவை" என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் இந்த சந்திப்பு, வட கொரிய தலைவருக்கும், தற்போதைய அமெரிக்க அதிபருக்கும் நடைபெறுகின்ற முதல் சந்திப்பாக அமையும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
டிரம்ப்-கிம் இடையிலான இந்த சந்திப்பு கேபெல்லா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் சாரா சான்டர்ஸ் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த இரண்டு தலைவர்களும் வெவ்வேறு இடங்களில் தங்குவர் என்று தோன்றுகிறது.
அமெரிக்க அதிபர்கள் முன்னதாக தங்கிய ஷாங்கரி-லா ஹோட்டலில் அதிபர் டிரம்ப் தங்கலாம். ஆனால், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சிங்கப்பூரின் செயின்ட் ரெஜிஸில் தங்கலாம் என்று ஸ்டெட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
இவ்விரு ஹோட்டல்களும் பிரபலமான ஆர்ச்சர்ட் சாலையின் வணிகப்பாதையில் சென்டோசா தீவின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளன.
சிங்கப்பூரை உருவாக்குகின்ற 63 தீவுகளில் சென்டோசாவும் ஒன்று.
500 ஹெக்டேர் பரப்பளவுடைய சென்டோசா தீவு, தீவின் பெருநிலத்தின் குறுகிய தொலைவில்தான் அமைந்துள்ளது. இது ஆடம்பர உல்லாச விடுதிகள், தனியார் கப்பல் தொகுதிகள் மற்றும் ஆடம்பர கோல்ஃப் கிளப்கள் இருக்கின்ற இடமாகும்.
ஆனால், கடற்கொள்ளை, இரத்தம் சிந்தியது மற்றும் போர் பற்றிய இருண்ட வரலாறும் இந்த தீவுக்கு உண்டு.
கடற்கொள்ளையர் கூடாரம்
19ம் நூற்றாண்டு பிரிட்டிஷாரின் வணிக நிலையமாக சிங்கப்பூர் நிறுவப்பட்டது.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான கடல்வழிப் பாதையில் சிங்கப்பூரின் முக்கிய இடம் சிறந்ததொரு தேர்வாக அமைந்தது.
பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு முன்னதாகவும், சிங்கப்பூர் வளர்ந்து வந்த வணிக மையமாக திகழ்ந்தது. வணிகர்களும், வர்த்தகர்களும், கடற்கொள்ளையரும் கூட அடிக்கடி சந்திக்கிற இடமாக இது திகழ்ந்தது.
அக்காலத்தில் சென்டோசா தீவு "புலாவ் பிலாகாங் மாதி" என்று அறியப்பட்டது. இதற்கு "இறப்புக்கு பிந்தைய தீவு" என்று பொருள். அதிக கடற்கொள்ளையர் இருந்ததை இந்த பெயர் குறித்து காட்டுகிறது.
மலாய், சீனர் மற்றும் சுலாவெசி என்கிற இந்தோனீஷிய தீவை பூர்வீகமாக கொண்ட மாலுமிகளான புகிஸ் மக்கள் பெரும்பாலும் இந்த தீவில் வாழ்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
படுகொலை நடைபெற்ற இடம்
1942ம் ஆண்டு பிரிட்டிஷ் காலனிய படைப்பிரிவுகள் சரணடைந்தபோது, சிங்கப்பூர் ஜப்பானிடம் தோல்வியடைந்தது.
"தெற்கின் விளக்கு" என்று பொருள்படுகின்ற "சயோனாம்" என்ற ஜப்பானிய பெயர் இந்த தீவுக்கு வழங்கப்பட்டது.
ஜப்பானிய எதிர்ப்பு கூறுகளை அழிக்கும் நடவடிக்கையின் பேரில், சீன சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அடுத்த சில ஆண்டுகளில் படுகொலை செய்யப்பட்டனர்.
18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட சீன ஆண்கள் வெவ்வேறான இடங்களுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டனர் அல்லது கடலில் எறியப்பட்டனர்.
இந்தப் படுகொலை இடங்களில் அடங்குகின்ற செனடோசாவின் கடற்கரைகள் தற்போது கேபெல்லா ஹோட்டலால் பராமரிக்கப்படுகின்றன. இந்த ஹோட்டலில்தான் அதிபர் டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் சந்திக்கவுள்ளனர்.
கூட்டணி படைகள் மற்றும் துப்பாக்கி சுடும் வீர்ர்கள் பங்கேற்ற போர் கைதி முகாம் ஒன்றையும் செனடோசா நடத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சுற்றுலா வளர்ச்சி மற்றும் அபாயகரமான விபத்துகள்
1970ம் ஆண்டு சிங்கப்பூர் அரசு செனடோசா தீவின் பெயரை "அமைதி மற்றும் சாந்தம்" என்று பொருள்தரும் வகையில் மாற்றி, சுற்றுலா தளமாக வளர்ச்சியடைய செய்தது.
ஆனால், இந்த தீவின் பிரச்சனைகள் தொடர்ந்தன.
1983ம் ஆண்டு எண்ணெய் எடுக்கும் கப்பல் ஒன்று சுற்றுலா கேபிள் பாதையில் மோதி, அந்த கேபிள் பாதையில் ஓடிக்கொண்டிருந்த கார்களில் இரண்டு கடலில் விழுந்தன.
"ஃபேன்டஸி தீவு" என்ற நீர் கேளிக்கை பூங்கா திறக்கப்பட்டது. ஆனால், இது பற்றிய பாதுகாப்பு குறைபாடுகளால் புகார்கள் குவிந்தன.
2000ம் ஆண்டு தோனி கவிழ்ந்து 8 வது சிறுமி உயிரிழந்தார், 2002ம் ஆண்டு இந்த கேளிக்கை பூங்கா மூடப்பட்டது.
அதுமுதல் செனடோசா தீவு தனக்கு "வேடிக்கைகான இடம்" என்ற தோற்றத்தை உருவாக்கி கொண்டது.
இப்போது இங்குள்ள யூனிவர்சல் ஸ்டுடியோ கேளிக்கை பூங்கா, புதியதொரு நீர் கேளிக்கை பூங்கா மற்றும் வேல்டு கேசினோ உல்லாச ஓய்விடங்கள் (ரிசார்ட்ஸ்) ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான சிங்கப்பூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன.

பட மூலாதாரம், ROBERT RECK/CAPELLA SINGAPORE
பேச்சுவார்த்தைகளுக்கு ஆடம்பர பின்னணி
30 ஏக்கர், 112 அறைகளுள்ள இந்த கேபெல்லா உல்லாச விடுதி (ரிசார்ட்) வெப்பமண்டல மழைகாட்டில் கட்டப்பட்டுள்ளது.
பிரபலமான பிரிட்டிஷ் கட்டடக்கலைஞர் நோர்மான் ஃபோஸ்டரால் வடிவமைக்கப்பட்ட இது, காலனிய கால கட்டடங்களின் பல்வேறு சிறப்புகளை கொண்டு விளங்குகிறது.
பழமையும், புதுமையும் பின்னிப்பிணையும் ஆடம்பர இடமென இந்த ஹோட்டல் தன்னை விவரிக்கிறது.
பிரிமியர் கார்டன் கிங் அறைக்கு ஓர் இரவுக்கு 500 டாலரிலிருந்து, 3 படுக்கையறை மற்றும் தனி நீச்சல் குளம் உள்ள கர்னெல் மனோர் அறைக்கு ஓர் இரவுக்கு 7, 500 டாலர் வரை இந்த ஹோட்டலின் அறைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
இந்த சந்திப்பு பற்றிய விவரங்களை உறுதி செய்து வருகையில், செயல்பாட்டு ஊழியர்களின் துணை தலைவர் ஜோ ஹகின் மற்றும் பிற அதிகாரிகளுடன் இந்த ஹோட்டலில் தங்கி, இந்த இடத்தை பற்றிய முன்னோட்டத்தை ஏற்கெனவே வெள்ளை மாளிகை பெற்றிருக்கிறது.
இப்போதிலிருந்து ஜூன் 15ம் தேதி வரை இந்த ஹோட்டலில் எந்த அறைகளில் தங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், இங்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் சற்று ஏமாற்றம் அடைவே செய்வார்கள்.

பட மூலாதாரம், Getty Images
பணக்கார மற்றும் பிரபலங்களின் மைதானம்
படகு தங்குதளங்களோடு கூடிய பல மில்லியன் டாலர் வீடுகள் இருக்கின்ற, சிங்கப்பூரின் மிகவும் கௌரவமிக்க குடியிருப்பு இடங்களான செனடோசா கோவ் இங்குதான் அமைந்துள்ளன.
அதிக கோல்ஃப் இடங்களும், சிங்கப்பூரின் மிகவும் ஆடம்பரமான ஹோட்டல்களும் சில மிச்சிலின் நட்சத்திர ரெஸ்ரான்ட்டுகளும் இங்கு உள்ளன.
ஏன் செனடோசா?
இந்த செனடோசா தீவு, பெருநிலப்பகுதியை விட்டு சற்று தொலைவில் இருப்பதால் பாதுகாப்பான இடமாக உள்ளது.
இந்த தீவுக்கு வருவோரை எளிதாக கட்டுப்படுத்திவிட முடியும்.
இங்கு வர ஒரு கேபிள் கார், ஒரு மோனோ ரயில், பாதசாரிகள் கடக்கும் பாதை மற்றும் வாகன போக்குவரத்து குகைப்பாதை மட்டுமே உள்ளன.
வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்தப் பேச்சுவார்த்தையின்போது சற்று இளைப்பாற இந்த நாடுகளின் தலைவர்கள் நினைத்தால், கோல்ஃப் விளையாட்டு மைதானங்கள் இருக்கவே செய்கின்றன.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












