ஆப்ரேஷன் புளூஸ்டார்: பொற்கோயில் ராணுவ நடவடிக்கையின் நேரடி அனுபவம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரவீந்தர் சிங் ராபின்
- பதவி, பிபிசி, அமிர்தசரசு
(அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் நடைபெற்ற `ஆப்ரேஷன் புளூ ஸ்டார்` நடவடிக்கை குறித்த தனது நேரடி அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் ரவீந்தர் சிங் ராபின்.)
சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் என் நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது.
1984ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று பொற்கோயில் வளாகத்தில் உள்ள சீக்கிய நூலகத்துக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஆயுதம் ஏந்திய சீக்கியர்களால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அரண்களை நான் காண நேர்ந்தது. அந்த தடுப்பு அரண்களை அமைக்க அங்கு தொண்டூழியம் செய்துகொண்டிருந்த பக்தர்கள் உதவி செய்துகொண்டு இருந்தனர்.
1984ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமிர்தசரசில் உள்ள வாய்ராம் சிங் மருத்துவமனையில் பித்தப்பை அறுவைசிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த என் அம்மா கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அவரது உடல் நிலையால் கவலையுற்ற எனது அப்பா என் அம்மாவை அமிர்தசரசில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தரன் தரன் கிராமத்தில் இருக்கும் என் அம்மாவின் உறவினர் ஒருவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
எங்கள் நலம் விரும்பி ஒருவர் பொற்கோயில் குளத்தில் இருந்து புனித நீரை எடுத்துவந்து 'அர்தா' வழிபாடு செய்யுமாறு கூறினார். அதைத் தொடர்ந்து நானும் என் சகோதரிகளும் ராஜஸ்தானில் உள்ள எங்கள் பூர்வீ க இடமான ஸ்ரீ கங்கா நகரில் இருந்து அமிர்தசரசுக்கு கிளம்பினோம். அங்கிருந்து எங்கள் ஊர் 300 கிலோ மீட்டர் தூரம் இருந்தது.
தரன் தரனில் இருந்து பொற்கோயிலுக்கு ஜூன் 1 அன்று நாங்கள் பஞ்சாப் அரசுப் பேருந்து ஒன்றில் சென்றோம்.
பாபா நௌத் சிங் சமத்தில் எங்கள் பேருந்தை நிறுத்திய ராணுவத்தினர் பயணிகளை இறங்கச் சொல்லி சோதனை செய்தனர். அமிர்தசரசை நாங்கள் நெருங்கிய பின்னரும் ஒருமுறை சோதனை செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
ஷஹீதான் சாஹீன் குருத்வாரா அருகே இறங்கி நெரிசலான தெருக்கள் வழியாக நாங்கள் பொற்கோயிலை நோக்கி நடந்தோம். என் தந்தை அங்கிருந்த சந்தையில் ஒரு பிளாஸ்டிக் குடுவை வாங்கினார்.
அந்நாட்களில் பொற்கோயிலில் காலணிகளை பாதுகாப்பதற்கான இடம் இல்லை. சேவகர்கள்தான் காலணிகளை பாதுகாப்பார்கள். பொற்கோயிலில் மரியாதை செலுத்திவிட்டு லட்சுமணசர் சௌக் பகுதியில் இருந்த உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றோம்.
நாங்கள் மைய சன்னதியில் இருந்து சுற்றுச் சுவரை நோக்கி வெளியே வரும்போது , சீக்கிய மதம் பரப்ப கங்காநகர் வந்த பாய் அம்ரிக் சிங்கை பார்த்தோம். எங்களை அடையாளம்கண்டுகொண்ட அவர் நீங்களும் உங்கள் ஊர்க்காரர்களும் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டார்.
சுற்றுச் சுவரை நாங்கள் நெருங்கியபோது துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அங்கிருந்த திண்ணைகளில் மக்கள் தஞ்சம் அடையத் தொடங்கினர்.
வழக்கமாக பொற்கோயில் வருபவர்களுக்கு அந்தச் சத்தம் வியப்பளிக்கவில்லை. ஆனால் எங்களுக்கு அது வியப்பாக இருந்தது.
பொற்கோயில் காவலர்களுக்கு பக்தர்கள் மரியாதை செலுத்துவதையும் நான் கண்டுள்ளேன்.

பட மூலாதாரம், Thinkstock
கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த எங்களை நோக்கி வந்த பொற்கோயிலின் பின்னால் குடியிருக்கும் எங்கள் தந்தையின் நண்பர் கஜன் சிங் வந்தார். அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் மூலம் அங்கு நிலைமை நன்றாக இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
அங்கிருந்த கடைக்காரர்கள் கடைகளை அடைக்கத் தொடங்கினர். ஊரடங்கு உத்தரவு அமலாவதை அப்போதுதான் நான் முதல் முறை பார்த்தேன்.
இரவு உணவுக்குப் பின் பொற்கோயிலில் சேவை செய்ய செல்லுமாறு கஜன் சிங் என் அப்பாவிடம் சொன்னார். அவருடன் நானும் சென்றேன்.
நள்ளிரவு 12 மணியளவில் கஜன் சிங் மற்றும் என் அப்பாவுடன் நான் தரையைக் கழுவிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு பாய்ந்து வந்த புல்லட் அங்கிருந்த விளக்கைத் தாக்கியது. அங்கு இருள் சூழ்ந்தது.
எனக்கு பயம் உண்டானது. இரண்டு சேவகர்கள் வந்து எங்களை நுழைவாயில் அருகே அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் தொடங்கிய எங்கள் தொண்டூழியம் அரை மணி நேரம் தொடர்ந்தது. பின்னர் 2 மணிக்கு நாங்கள் கஜன் சிங் வீட்டுக்குச் சென்றோம்.
அப்போது ஜூன் 2 ஆகியிருந்தது. இப்போதுவரை பஞ்சாபின் பல்வேறு இடங்கள் ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதும், பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதும் எங்களுக்குத் தெரியாது.

பட மூலாதாரம், Getty Images
அன்றைய பகல் பொழுதில் ராணுவம் மற்றும் ஆயுதம் ஏந்திய சீக்கிய இளைஞர்கள் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. ராணுவத்தினர் வரும் தெருக்களைத் தெளிவாகப் பார்க்க வேண்டும் என்று அந்த இளைஞர்கள் கூறியிருந்ததால் தங்கள் கடைகள் முன்னாள் இருந்த கூடாரங்களை கடைக்காரர்கள் அகற்றிக்கொண்டிருந்தனர்.
அன்று மீண்டும் பொற்கோயில் சென்றபோது அங்கு கங்காநகரை சேர்ந்த மொஹிந்தர் சிங் கபாரியாவைச் சந்தித்தோம். அவர் கையில் 303 ரைபில் ஒன்றை வைத்திருந்தார். பஞ்சாபில் சூழ்நிலை சரியில்லை என்றும் ராஜஸ்தானில் உள்ள எங்கள் பூர்வீக வீட்டுக்கே குடும்பத்தினரை திரும்ப அழைத்துச் செல்லுமாறும் அவர் என் அப்பாவிடம் கூறினார்.
அவரிடம் சீக்கியத் துறவி ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே குறித்து என் அப்பா கேட்டார். அவர் ஆயுதம் ஏந்தும் இளைஞர்களை மட்டுமே சந்திப்பார் என்று அதற்கு மொஹிந்தர் பதிலளித்தார்.
அங்கிருந்த நுழைவாயில் அருகே தடுப்பரண்கள் அமைக்க அங்கிருந்த பக்தர்களிடம் கட்டுமானப் பொருட்களை வழங்கிக்கொண்டிருந்தனர். நானும் என் சகோதரிகளும் அங்கிருந்த நூலகத்தின் மேற்கூரைக்கு சில செங்கற்களை எடுத்துச் சென்றோம்.
நாங்கள் மேலே சென்றபோது மேலே மூன்று ஆயுதம் தாங்கிய சீக்கிய இளைஞர்கள் இருந்தனர். அன்று மாலை மீண்டும் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.
கஜன் சிங் வீட்டு மாடியில் இருந்து நாங்கள் பார்த்தபோது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு சீக்கிய இளைஞர்கள் பதில் தாக்குதல் நடத்தியதைக் கண்டோம். அன்று சிலர் இறந்துவிட்டதாக வதந்தியும் பரவியது.
ஒரு ரிசர்வ் போலீஸ் அதிகாரியிடம் சென்ற என் தந்தை பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அனுமதிக்குமாறு சொன்னார். ஆனால் ராணுவம்தான் முடிவெடுக்கும் என்று அந்த அதிகாரி கூறிவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
ஜூன் 3 அன்று ராணுவம் பொற்கோயிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. சீக்கிய இளைஞர்களுடனான மோதல் தவிர்க்க இயலாதது ஆகிவிட்டது.
அன்று சீக்கிய மதத்தின் ஐந்தாம் குருவான குரு அர்ஜன் சிக்கின் நினைவுநாள். அன்று வழக்கம்போல குளிர்ந்த நீர் வழங்கப்படவில்லை.
பொற்கோயிலில் இருந்து வெளியே செல்ல நினைப்பவர்கள் செல்லலாமென்று அப்போது ராணுவம் அறிவித்தது. அங்கிருந்த புனித குளத்தில் நீரை எடுத்துக்கொண்டு வெளியேற என் தந்தை முடிவு செய்தார்.
அவர் வெளியேறும்போது பலரும் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர்.
அப்போது காவலர்கள் சீக்கிய இளைஞர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். எண்களையும் அவர்கள் தடுத்து நிறுத்துவார்கள் என்று நினைத்தேன்.
அங்கு வந்த ஒரு பெண்கள் குழு 'வாகே குரு' என்று சரணமிட்டுக்கொண்டே சோதனை செய்யப்பட்ட அனைவரையும் தள்ளிவிட்டனர். நாங்கள் கைகளை இறுகப்பற்றிக்கொண்டு காவலர்கள் தடுப்பில் இருந்து வெளியேறினோம்.

பட மூலாதாரம், Getty Images
பேருந்து நிறுத்தத்துக்கு வந்தபோது தரன் தரனை நோக்கி செல்லும் அரசுப் பேருந்து நின்று கொண்டிருந்தது. 52 பேர் மட்டுமே அமரக்கூடிய அந்தப் பேருந்தில் அதைவிட மூன்று மடங்கு அமர்ந்திருந்தனர்.
தரன் தரனை அடையும் முன்பு சுமார் ஏழு முறை அந்தப் பேருந்து சோதனை செய்யப்பட்டது. பேருந்தில் இருந்த அனைவரும் வகே குரு என்று சத்தமிட்டுக்கொண்டே இருந்தனர்.
அப்போது பிபிசி வானொலியைத் தவிர பொற்கோயிலில் என்ன நடக்கிறது என்பதை அறிய வேறு வழியில்லை. வானொலி மூலம் ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்ததையும், அந்த நடவடிக்கைக்கு 'ஆப்ரேஷன் புளூஸ்டார்' என்று பெயர் வைக்கப்பட்டிருந்ததும் தெரிந்தது.
எங்களுக்கு அடைக்கலம் அளித்த கஜன் வீடும் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி, தீக்கிரையில் சாம்பலாகிப் போனதும் எனக்குப் பின்னாளில்தான் தெரிந்தது.
(1984ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் 8ஆம் தேதி வரை 'ஆப்ரேஷன் புளூஸ்டார்' ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2018இல் பிபிசி தமிழில் வெளியான இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












