பிணைமுறி முறைகேடு: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கி பிணை முறி விநியோக முறைகேடு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பிணை முறி முறைகேடு தொடர்பாக மத்திய வாங்கி முன்பு 2015-இல் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டம் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிணை முறி முறைகேடு தொடர்பாக மத்திய வாங்கி முன்பு 2015-இல் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டம் (கோப்புப் படம்)

இந்த அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரினால் புதன்கிழமையன்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.

அத்துடன், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் பல விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளின் அடிப்படையில் மத்திய வங்கியின் நிதிச் சபையினால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படடுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து தாம் பொதுமக்களை தெளிவூட்டுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி

அரச கடன் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியன முகாமைத்துவம் செய்யப்படுகின்றமை தொடர்பில் நம்பிக்கை தன்மையை அதிகரிக்கின்றமை ஏற்றது என்பதே நிதிச் சபையின் கருத்து என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், நிதிச் சபையினால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை உடனடியாக கவனத்தில் கொண்டு, அதனை உரிய வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்படும் என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :