இலங்கை மத்திய வங்கி தொடர்பான நடவடிக்கை ஜனநாயகத்தை பிரதிபலிக்கின்றது: பிரதமர் அலுவலகம்

இலங்கை மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் ஊடாக, நல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் ஜனநாயகம் மற்றும் சட்டத்திற்கு மதிப்பளித்தல் ஆகியன மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க

மத்திய வங்கி முறிகள் விநியோக கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் அலுவலகம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பான விசாரணை அறிக்கை 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளுக்கு அமைய சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் கூறியுள்ளது.

இந்த முறிகள் விநியோக மோசடி தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகள் குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைக்குமாறு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமரினால் சட்ட மா அதிபரிடம் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, முறிகள் விநியோக கொடுக்கல் வாங்கல் மோசடி குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமரினாலும், 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதியினாலும் சட்ட மா அதிபருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மைய வங்கி பத்திர விநியோகம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளித்த ஆணைக்குழு

அத்துடன், ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், 2008ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி குறித்து உரிய விசாரணைகள் நடாத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுப்பதே நல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் நோக்கம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற உண்மையை மறைத்தல், தீங்கிழைத்தல் மற்றும் சேறு பூசும் நடவடிக்கைக்கு பதிலாக, சட்டத்திற்கு தலை வணங்கி சட்டத்திற்கு அழுத்தங்கள் கொடுக்காது அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே தமது நோக்கம் எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :