You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யாழ்ப்பாணம்: தமிழர் நினைவு தூபி பகுதியில் பௌத்த பிக்குவின் உடல் தகனம்
யாழ்ப்பாணம் நாக விஹாரையின் விஹாராதிபதி ஞானரத்ன தேரரின் பூதவுடலைத் தகனம் செய்வதற்கான அனுமதியினை யாழ். நீதவான் நீதிமன்றம் இன்று பிற்பகல் வழங்கியது.
நாக விஹாரையின் விஹாராதிபதி ஞானரத்ன தேரர் உடல்நலமின்மை காரணமாக கடந்த 19ஆம் தேதி இறந்தார்.
அவரது பூதவுடல் நாக விஹாரையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்ததுடன், அவரது இறுதிக் கிரியைகளை யாழ். கோட்டை - முற்றவெளி பகுதியில் நடத்த ராணுவத்தினர் நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.
எனினும், முற்றவெளி பகுதி தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தூபி அமைந்துள்ள பகுதியாகவும், ஆலயமொன்று அமைந்துள்ள பகுதியாகவும், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடமாகவும் இருப்பதனால், தேரரின் பூதவுடலைக் குறித்த பகுதியில் தகனம் செய்வதனை தவிர்க்கும் வகையில் தடை உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு இருவரினால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணைகள் இன்று பிற்பகல இரண்டு மணியளவில் நீதவானினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு மீதான விசாரணைகளின் போது சிரேஷ்ட சட்டத்தரணியும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாந்தா அபிமன்யு தலைமையிலான 12 சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக யாழ். மாநகர சபை ஆணையாளர், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர், யாழ். பிராந்திய சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ். தலைமை போலிஸ் பரிசோதகரின் பெயர்கள் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.
முற்றவெளி பகுதியானது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமானது எனவும், விஹாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வதற்கான அனுமதியை தாம் தொல்லியல் திணைக்களத்திடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளதாகவும் போலிஸார் நீதிமன்றத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போலிஸாரினால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை கருத்தில் கொண்ட நீதவான், விஹாராதிபதியின் பூதவுடலை அந்த இடத்திலேயே தகனம் செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய, ஞானரத்ன தேரரின் இறுதி கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :