புதிய ஐபோன்களை விற்க பழைய ஐபோன்களின் வேகத்தை 'ஆப்பிள்' குறைத்ததா?

    • எழுதியவர், கிறிஸ் ஃபாக்ஸ்,
    • பதவி, தொழில்நுட்ப செய்தியாளர்

பல ஐபோன் பயனாளர்களின் சந்தேகத்தின்படி, ஐபோன்களின் பயன்பாட்டு காலம் அதிகரிக்கும் போது அதன் பேட்டரி திறன் அதிகளவில் செயல்படுவதை தவிர்க்கும் வகையில் ஐபோனின் இயக்க வேகத்தை குறைப்பதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

புதிய ஐபோன்களை வாங்குவதை தூண்டுவதற்காக ஆப்பிள் நிறுவனம் பழைய ஐபோன்களின் வேகத்தை குறைக்கிறது என்ற சந்தேகம் நீண்டகாலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்நிலையில், பழைய ஐபோன்களில் பேட்டரியின் திறன் குறைவதால் அதற்கேற்றவாறு அதன் இயக்க வேகத்தை குறைப்பதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

தனது வாடிக்கையாளர்களின் சாதனங்களின் "வாழ்க்கையை நீடிக்க வேண்டுமென" தான் விரும்புவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயமானது 'ரெட்டிட்' என்ற சமூக இணையதளத்தில் பயனர் ஒருவர் தனது ஐபோனின் செயல்பாட்டு சோதனை முடிவுகளை வெளியிட்டவுடனே பலருக்கு தெரிய வந்தது. அதாவது, ஐபோன் 6 எஸ் மாடலை பயன்படுத்தி வந்த அவருடைய திறன்பேசியின் இயக்க வேகம் காலப்போக்கில் குறைந்துவிட்டது. ஆனால், அதன் பேட்டரியை புதியதாக மாற்றியவுடன் மீண்டும் அதன் வேகம் அதிகரித்து காணப்பட்டது.

"நான் எனது சகோதரரின் ஐபோன் 6 பிளஸ் மாடலை பயன்படுத்தியபோது அது என் மாடலைவிட வேகமாக செயல்படுவதை அறிந்தபோது இதில் ஏதோ பிழை இருப்பதுபோல் தோன்றியது" என்று ரெட்டிட்டில் பதிவிட்டுள்ளார் அந்த பயனர்.

வெவ்வேறு ஆப்பிள் இயங்குதள பதிப்புகளில் இயங்கும் பல ஐபோன்களை கொண்டு சோதனையை நடத்திய தொழில்நுட்ப இணையதளமான ஜீக்பென்ச், சில ஐபோன்களின் இயக்க வேகம் வேண்டுமென்றே குறைக்கப்படுவதை கண்டறிந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :