இலங்கை : உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனு கோரல் - ஒரு பார்வை

தேர்தல்

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFP/Getty Images

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தேர்தலுக்கு தயாராகி வருகின்ற அரசியல் கட்சிகள் வேட்பு நியமன பத்திரம் தயாரிப்பது தொடர்பாக புதிய அனுபவங்களை பெறுவது தவிர்க்க முடியாதவையாக இருக்கும் என்ற கருத்து அரசியல் விமர்சகர்களினால் முன் வைக்கப்படுகின்றது.

குறிப்பாக பெண்களுக்கு குறித்த எண்ணிக்கை இட ஓதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் பொருத்தமான பெண் வேட்பாளர்களை இனம் கண்டு வேட்பாளர்களாக நிறுத்துதல்.

வட்டாரம் மற்றும் விகிதாசாரம் என இரு பகுதியான வேட்பு நியமன பத்திரத்தை தயாரித்தல். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதாயின் கட்டுப் பணம் செலுத்த வேண்டும் . ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை தெரிவு செய்யும் வட்டாரங்கள் போன்ற விடயங்களை மேற்கோள்காட்டி அரசியல் விமர்சகர்களினால் இந்த கருத்து முன்வைக்கப்படுகின்றது.

இலங்கையில் தேர்தல் ஆணைக் குழு ஸ்தாபிக்கப்பட்டு இரு வருடங்களாகின்ற நிலையில் ஆணைக் குழுவினால் நடத்தப்படுகின்ற முதலாவது தேர்தல் இதுவாகும்.

வட்டார தெரிவு மற்றும் விகிதாசார தெரிவு என கலப்பு முறையிலான தெரிவு உள்ளூராட்சி சபைத்தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாகவும் இந்த தேர்தல் அமைகின்றது.

தேர்தல்

தேர்தல் வேட்புமனு கோரல் ஒரு பார்வை

இந்த தேர்தலில் வட்டார ரீதியாக 60 சதவீதமும், விகிதாசார ரீதியாக 40 சதவீதமும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதற்கேற்ப வட்டார ரீதியான வேட்பாளர்களின் பெயர்கள் நியமன பத்திரம் - 1 ஆகும். மேலதிக நியமன பத்திரம் - 11 ல் விகிதாசார ரீதியான வேட்பாளர்கள் பெயரிடப்பட வேண்டும் . அரசியல் கட்சி அல்லது சுயேட்சை குழுவின் வேட்புமனு நியமன பத்திரம் இரு பகுதிகளையும் கொண்டதாக இருக்க வேண்டும். இல்லையேல் நிராகரிக்கப்படும்.

உதாரணத்திற்கு, மாத்தளை மாநகர சபையை எடுத்துக் கொண்டால் தனி வட்டாரங்கள் 09 , இரட்டை தெரிவு வட்டாரம் 02 என வட்டார ரீதியாக 13 உறுப்பினர்களும் விகிதாசாரத்தில் 08 உறுப்பினர்களும் என மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 ஆகும். ( அதாவது இரட்டை தெரிவு வட்டாரத்திற்கு இருவர் பெயரிடப்பட வேண்டும் )

முதலாவது வேட்பு நியமன பத்திரம் - 01 ல் வட்டார ரீதியாக 13 வேட்பாளர்களின் பெயர் குறிப்பிட பட வேண்டும். மேலதிக நியமன பத்திரம் -11 ல் தேர்வாகும்உறுப்பினர்கள் எண்ணிக்கை 08 ஆக இருந்தாலும் மேலதிகமாக 3 பேரும் சேர்க்கப்பட்டு அந்த நியமன பத்திரத்தில் 11 பேர் இடம் பெற வேண்டும். அதாவது 13 +11 = என 24 வேட்பாளர்கள் பெயரிடப்பட வேண்டும்.

வட்டார ரீதியான வேட்பு நியமன பத்திரத்தில் 10 சதவீதமும், விகிதாசார ரீதியான வேட்பு நியமன பத்திரத்தில் 50 சதவீதமும் பெண்களுக்காக குறைந்த இடஒதுக்கீடு இந்த தேர்தல் முறையில் கிடைத்துள்ளது.

மாத்தளை மாநகர சபைக்கான வேட்பு நியமன பத்திரத்தில் இடம் பெற வேண்டிய மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 24 ஆகும். அதில் பெண்களுக்குரிய 10 சதவீத இடஒதுக்கீடு 2 ஆகும்.

விகிதாசாரத்திற்குரிய வேட்பு நியமன பத்திரத்தில் 11 வேட்பாளர்கள் இடம் பெறுகின்றார்கள். அதில் 50 சதவீதம் பெண்களுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் குறைந்தது 5 பெண்கள் இடம் பெற வேண்டும்.

தேர்தல்

மாத்தளை மாநகர சபைக்கு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழு தாக்கல் செய்யும் வேட்பு நியமன பத்திரத்தில் 24 வேட்பாளர்களில் 02 +05 என ஆகக் குறைந்தது 07 பெண்கள் இடம் பெற வேண்டும்.

இலங்கையில் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியும் கட்டுப்பணம் செலுத்த வேண்டும் என்ற முறை திருத்தப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி என்றால் வேட்பாளரொருவருக்கு செலுத்த வேண்டிய கட்டுப்பணம் ரூபாய் 1,500 ஆகும். அதே நேரம் சுயேட்சை குழு என்றால் ஒரு வேட்பாளரொருக்கு செலுத்த வேண்டிய கட்டுப் பணம் ரூபாய் 5,000 ஆகும்.

மாத்தளை மாநகர சபைக்கு வேட்பு நியமன பத்திரம் தாக்கல் செய்யும் அரசியல் கட்சி என்றால் 24 வேட்பாளருக்கும் ரூபாய் 36 ,000 கட்டுப் பணம் செலுத்த வேண்டும். சுயேட்சை குழு என்றால் செலுத்த வேண்டிய தொகை ரூபாய் 1,20,000 ஆகும்.

வட்டார ரீதியான வேட்பாளரொருவர் வெற்றி பெற்றால் அல்லது அந்த வட்டாரத்தில் 5 சத வீதத்திற்கும் கூடுதலான வாக்குகளை பெற்றால் அவருக்குரிய கட்டுப் பணத்தை மீள பெற முடியும்.

விகிசார ரீதியாக 5 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகளை அரசியல் கட்சி அல்லது சுயேட்சை குழு பெற்றால் மேலதிக நியமன பத்திரம் -11ற்குரிய கட்டுப்பணம் திரும்ப கிடைக்கும் . இல்லையேல் கட்டுப்பணம் அரசு உடமையாக்கப்படும்.

தேர்தல் வேட்பு நியமன பத்திரம் நிராகரிப்பு என்பது முழுமையாக வேட்பு நியமன பத்திரத்தை நிராகரிப்பது ஒரு சந்தர்ப்பமாகவும் வேட்பு மனுவில் ஒரு வேட்பாளரை மட்டும் நிராகரிப்பது மற்றுமோர் சந்தர்ப்பமாகவும் தேர்தல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இரு பகுதிகளிலும் இடம் பெற வேண்டிய எண்ணிக்கையில் வேட்பாளர்கள் இடம் பெறாவிட்டால் அந்த வேட்பு நியமன பத்திரம் முற்றாக நிராகரிக்கப்படும்.

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தலின் படி பெண் வேட்பாளர்களுக்குரிய ஒதுக்கீடு இல்லையேல் அந்த வேட்பு நியமன பத்திரமும் முழுமையாக நிராகரிக்கப்படும். இதனை விட வேறு ஒரிரு காரணங்களும் உண்டு.

நியமன பத்திரத்தில் வேட்பாளரின் கையொப்பமின்மை , நாட்டில் பிரிவினை கோரமாட்டேன் என சத்தியபிரமாணம் செய்து அதற்குரிய ஆவணம் இணைக்கப்படாமை போன்ற காரணங்களுக்காக உரிய வேட்பாளர்கள் மட்டும் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பம் உள்ளது

வேட்பு நியமன பத்திரத்தில் இளைஞர் என வேட்பாளரொருவர் குறிப்பிடப்பட்டால் அவரது பிறப்பு சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் .இல்லையேல் அந்நபர் வேட்பு மனுவில் நிராகரிக்கப்படுவார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :