முழு அமெரிக்க கண்டத்தையும் தாக்கக்கூடிய புதிய ஏவுகணையை ஏவியது வட கொரியா

பட மூலாதாரம், Getty Images
முழு அமெரிக்கா கண்டத்தையும் அடையக் கூடிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது.
ஒரு அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை வட கொரியா அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி கூறுகிறது.
மிகவும் சக்தி வாய்ந்தது என கூறப்பட்ட ஹவாசாங்-15 ஏவுகணை புதன்கிழமை அதிகாலை ஏவப்பட்டது.
ஜப்பான் கடலில் விழுந்த இந்த ஏவுகணை, வட கொரியா முன்பு சோதித்த ஏவுகணைகளை விட அதிக உயரம் பறந்தது.
4,475 கிலோ மீட்டர் உயரத்தில், 960 கிலோ மீட்டருக்கு 53 நிமிடங்கள் இந்த ஏவுகணை பறந்ததாக அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
வட கொரியா முன்பு ஏவிய ஏவுகணைகளை விட மிகவும் உயரமாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவியதுடன், உலகளாவிய அச்சுறுத்தலை விடுத்துள்ளது என அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் கூறியுள்ளார்.
வட கொரியாவின் தொடர் ஏவுகணைத் திட்டத்தின் சமீபத்திய ஒன்றான இந்த ஏவுகணையால், உலகளவிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஜப்பானும், தென் கொரியாவும் ஏவுகணை சோதனையை கண்டித்துள்ளன. இதற்கு பதிலடி தரும்விதமாக, தென் கொரியா தனது ஏவுகணையை ஏவியுள்ளது.
சமீபத்திய ஏவுகணை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மூத்த அதிகாரிகளிடம் ஜேம்ஸ் மாட்டிஸ் விளக்கினார்.
வட கொரியா கடைசியாக செப்டம்பர் மாதம் தனது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது.
அந்த மாதமே ஆறு ஆணு சோதனைகளையும் வட கொரியா நடத்தியது. உலக நாடுகளின் கண்டனம் மற்றும் ஐ.நாவின் தடைகளுக்கு மத்தியிலும் வட கொரியா தனது ஏவுகணை திட்டத்தை அபிவிருத்தி செய்துக்கொண்டிருக்கிறது.
சமீபத்திய ஏவுகணை சோதனை குறித்து விவாதிக்க ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் அவரச அமர்வாக கூட உள்ளது.
''முன்பு ஏவிய ஏவுகணைகளை விட, இது உயரமாக பறந்தது'' என ஜேம்ஸ் மட்டிஸ் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
தென் பியாங்யாங் பிராந்தியத்தில் உள்ள பியாங்சாங்கில் இருந்து கிழக்கு நோக்கி அந்த பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்தப்பட்டதாக தென்கொரிய செய்தி முகமையான யான்ஹப் தெரிவிக்கிறது.
வட கொரியாவால் ஏற்கெனவே ஏவப்பட்ட ஏவுகணைகளைப் போல இந்த ஏவுகணை ஜப்பானுக்கு மேலே பறக்கவில்லை என்றும் ஜப்பான் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஏவுகணை வானத்தில் பறந்துகொண்டிருக்கும்போதே, இது குறித்து டிரம்பிடம் விளக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை கூறுகின்றது. ''நாம் அதைக் கவனித்துக்கொள்வோம்'' என பிறகு டிரம்ப் கூறியிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
தென் கொரிய அதிபர் மூன், டிரம்புடன் தொலைப்பேசியில் பேசியதாகவும், ''வட கொரியாவின் பொறுப்பற்ற செயல்பாடு குறித்து கடும் கண்டனத்தை'' இரு தலைவர்களும் தெரிவித்ததாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்குக் கடுமையான அச்சறுத்தலை விடுத்துள்ளது என இரு தலைவர்களும் கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












