இலங்கை: உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு 1991 இடங்கள் ஒதுக்கீடு

இலங்கை

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 341 உள்ளுராட்சி சபைகளுக்கும் ஆகக் குறைந்தது 1991 பெண்கள் உறுப்பினராக தேர்வாகும் வாய்ப்பு கிடைக்கின்றது.

வட்டாரம் மற்றும் விகிதாசாரம் என கலப்பு முறையிலான உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல் சட்டத்தில் அரசியல் கட்சி அல்லது சுயேட்சை குழு தாக்கல் செய்யும் வேட்பு மனுக்களில் ஆகக் குறைந்தது வட்டார ரீதியாக 10 சதவீதமும், விகிதாசார பட்டியலில் 50 சதவீதமும் பெண்கள் இடம் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இல்லையென்றால் குறித்த வேட்பு மனு நிராகரிக்கப்படும்.

24 மாநகர சபைகள், 41 நகரசபைகள் மற்றும் 276 பிரதேச சபைகள் என 341 உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8356 ஆகும்.

தேர்தல் ஆணைக்குழவினால் உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டார மற்றும் விகிதாசார ரீதியாகவும் தெரிவு செய்யப்பட வேண்டிய 25 சதவீத பெண் பிரதிநிதித்துவ எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆகக் குறைந்தது 2 முதல் 27 வரையிலான பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதாக அந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை

குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி கொழும்பு மாநகர சபையிலே கூடுதலான பெண்கள் அங்கத்துவம் பெறவிருக்கின்றார்கள். அந்த சபையில் 27 பெண்கள் இருப்பார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 110 )

இதே வேளை நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் கீழ் இலங்கையில் 70 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக பெயரிடப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் அடுத்த சில தினங்களில் கோரப்படவுள்ள நிலையில் தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் படி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஈழவர் ஜனநாய முன்னனி உட்பட 6 கட்சிகள் செயலாளர் பதவி தொடர்பாக பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :