You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் பாலித்தீனுக்கு தடை, மீறினால் அபராதம், சிறை
இலங்கையில் பாலித்தீன் உற்பத்தி , விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பான தடை இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது.
தேசிய, மத, கலாசார மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கும் பாலித்தீன் பயன்பாட்டுக்கான தடை நடைமுறையில் இருக்கும் என்றும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம் ஹை டென்சிட்டி பாலி எத்திலீன் எனப்படும் அதிக அடர்த்தி கொண்ட உறைகள் மற்றும் ரெஜிபோம் உணவு பெட்டி ஆகியவற்றின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறுபவர்களுக்கு சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும் என சூழல் பாதுகாப்பு அதிகார வாரியம் கூறுகின்றது.
இலங்கையில் உணவு பொதியிடல் , நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நாளொன்றுக்கு 15 மில்லியன் பாலித்தீன் உணவுப் பைகளும், பொருட்கள் வாங்குவதற்காக 20 மில்லியன் பாலித்தீன் பைகளும் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்டொன்றுக்கு 5 இலட்சம் மெற்றிக் டன் பிளாஸ்ரிக் மற்றும் பாலித்தீன் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றில் 30% (150,000 MT ) ஏற்றுமதி வர்த்தகத் தேவைகளுக்கும் 70% (350,000 MT) உள் நாட்டுத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
உள்நாட்டில் பயன்படுத்தப்படும் 40% ( 140,000MT) மீள் சுழற்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்ற, அதேவேளை மிகுதி 60% ( 210,000MT) கழிவாக தேங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாலித்தீன் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் கீழ் செயல்படும் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவினால் உணவுப் பொதியிடல் மற்றும் பொருட்களை வாங்கப் பயன்படும் பாலித்தீன் பைகள் ஆகியவற்றின் மீதான தடைபற்றி ஏற்கனவே அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்தது.
அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அவை உக்காத காரணத்தினால் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால், அவற்றைத் தடை கடந்த ஜுலை 7-ஆம் தேதி கூடிய அமைச்சரவையில் முடிவு செய்தது.
பாலித்தீன் உறைகளில் சமைத்த உணவுகள் மற்றும் உண்ட உணவுகளை பொதியிடல், நிரப்புதல் , களஞ்சியபடுத்தல் மற்றும் அவற்றை திறந்த வெளிகளிலும் சூழலிலும் வீசுதல் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கையிருப்பிலுள்ள பாலித்தீன் உற்பத்திகள் மற்றும் பாலித்தீன் பொருட்களுக்குப் பதிலாக மாற்று உற்பத்தி அறிமுகப்படுத்தல் ஆகிய காரணங்களை முன் வைத்து 6 மாதங்களுக்கு சலுகை வழங்குமாறு பாலித்தீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பாலித்தீன் பயன்பாட்டுக்கு தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அநேகமான இடங்களில் பாலிதீன் பொருட்களை பயன்படுத்துவதில் எவ்விதமான மாற்றத்தையும் காணமுடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக உணவகங்களில் வழக்கம்போல தட்டுகளில் பாலித்தீன் விரிப்புகள் மீது உணவு வழங்கல் , பாலித்தீன் பைகளில் சமைத்த உணவைப் பொதியிடல் போன்ற வழக்கமான செயல்பாடுகளைக் காண முடிந்ததாக எமது செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
நாளொன்றுக்கு பாலித்தீன் பைகள் உள்ளிட்ட 2500 வரையிலான பாலித்தீன் உற்பத்தி பொருட்கள் தனது உணவகத்தில் தேவைப்படுவதாக கூறுகின்றார், ஒரு உணவகத்தின் உரிமையாளரான வை.எல்.எம். இப்ராகிம்.
"தங்களுக்கு பொருத்தமான மாற்றுப் பொருள் நியாயமான விலையில் அறிமுகப்படுத்தப்படாத நிலையில் பாலித்தீன் பாவனையை கைவிடுவது தற்போதைக்கு சாத்தியம் இல்லை." என்றும் அவர் கூறுகின்றார்.
"பாலித்தீன் பொருட்களுக்குப் பதிலாக மாற்றுப் பொருட்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம்தான் இந்த விடயத்தில் இலக்கை எட்ட முடியும். அதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்குரியது," என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
"பாலித்தீன் பாவனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் அதற்கான மாற்றுத் தீர்வை அரசாங்கம் முன் வைத்திருக்க வேண்டும் "என்கின்றார் பசுமை திருகோணமலை என்ற சூழுல் பாதுகாப்பு அமைப்பின் செயற்பாட்டாளரான தி.கோபகன்.
"ஏற்கனவே நாடு எதிர்கொண்டுள்ள குப்பை மேடு சரிதல், டெங்கு கொசுக்கள்பெருக்கம் போன்ற அச்சுறுத்தல்களுக்கு பாலித்தீன் பயன்பாடும் பிரதான காரணமாக அமைந்தது," என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
"25 -30 வருடங்களுக்கு முன்பு சந்தைக்கு அல்லது கடைக்கு பொருட்களை வாங்க செல்லும் போது கூடை அல்லது சணல் அல்லது சீலை பை எடுத்துச் செல்லும் வழக்கம் இருந்தது. பாலித்தீன் பாவனை காரணமாகவே அது இல்லாமல் போனது .மீண்டும் பழைய நிலை வர வேண்டும் " என்று ஓய்வு நிலை அதிபர் சிதம்பரபிள்ளை நவரத்தினம் தெரிவிக்கின்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :