You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் யானைகள் கடலுக்குள் நீந்தி செல்வது வழக்கத்துக்கு மாறான நிகழ்வு: எச்சரிக்கும் பேராசிரியர்
இலங்கையில் காட்டு யானைகள் கடலுக்குள் நீந்தி செல்வது என்பது வழக்கத்துக்கு மாறான நிகழ்வு என வன பாதுகாப்பு ஆய்வு மத்திய தலைவரான பேராசிரியர் பிரித்திராஜ் ஃபெர்ணான்டோ கூறியுள்ளார்.
கிழக்கு கடலில் இந்த மாதம் 12 ஆம் மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களில், கடலில் நீந்திச் சென்ற மூன்று யானைகள் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
இந்த இரு சம்பவங்களும் சூழல் மாற்றம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் அல்லது இயற்கை அனர்தத்தின் முன் அறிவித்தலாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
"இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக கடற்படை தரப்பிலிருந்து கிடைத்த தகவல்களை வைத்து பார்க்கும் போது ஒன்றோடு ஒன்று தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை" என்கிறார் பேராசிரியர் பிரித்திராஜ் ஃபெர்ணான்டோ.
சுமார் 25 வருடங்களாக யானைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அவர், தான் அறிந்தவரை சில வருடங்களுக்கு முன்பு இது போன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக கூறுகிறார்.
"யானை-மனித மோதல் காரணமாக பிரச்சனைக்குரிய யானையொன்று பிறிதொரு இடத்தில் வன ஜீவராசிகள் துறையினரால் பிடிக்கப்பட்டு கிழக்கு காட்டில் விடப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த யானை கடலுக்குள் சென்றுள்ளது. அதை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்'' என அந்த சம்பவம் பற்றி விளக்கினார்.
மேலும், "இந்த மாதத்தில் இடம்பெற்ற இருசம்பவங்களும் அப்படியானதாக இருக்கலாம் என நினைப்பது சிரமமானது. அப்படி இருக்கலாம் என்றும் நினைக்கின்றேன். இந்த சம்பவங்கள் தொடர்பாக கடற்படையுடன் தொடர்பு கொண்ட போது கிடைத்த தகவல்களின்படி, முதலாவது சம்பவத்தில் யானை கடலுக்குள் நீண்ட தூரம் சென்றுள்ளது. சோர்வுற்ற நிலையில் காணப்பட்டுள்ளது. அந்த பிரதேசத்தில் காணப்பட்ட யானை அல்ல. இரண்டாவது சம்பவத்துடன் தொடர்புடைய இரு யானைகளும் அந்த பிரதேசத்தில் நடமாடிய யானைகள் என்று அறிய முடிந்தது.'' என்றார்.
''பிரித்தானியர் காலத்தில் திருகோணமலை பகுதியிலுள்ள தீவுகளுக்கு யானைகள் நீந்தி சென்ற நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. இந்நிலையில், சிலநேரத்தில் இந்த இரு சம்பவங்களிலும், யானை தீவை நோக்கி புறப்பட்டு, இறுதியில் கடலின் நடுப்பகுதிக்கு அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது " என்று பேராசிரியர் பிரித்திராஜ் ஃபெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
"யானைகள் நன்றாக நீந்தக் கூடியது. பெரிய உடம்பு என்பதால் மிதக்கக் கூடியது. இருந்தாலும் நீண்ட நேரத்திற்கு அப்படி இருக்க முடியாது" என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த சம்பவங்கள் சூழல் தாக்கமாக இருக்குமா? என்ற கேள்விக்கு, ''அது பற்றி தெளிவாக கூற முடியாது. தற்போது கடும் வறட்சி நிலவுகின்றது. இதன் காரணமாக கடலுக்கு பொய் இருக்குமா? ஆனால் அப்படி நினைப்பதும் கடினம். இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்காது என்றுதான் நினைக்கின்றேன். இதுபோன்ற மற்றுமோர் நிகழ்வு நடக்குமானால் அது பற்றி கவனம் செலுத்த வேண்டியுள்ளது" என்று பதிலளித்தார்.
இந்தியாவில் அந்தமான் தீவில் யானைகள் கடலுக்குள் நீந்திச் செல்வதாக அறிக்கையிடப்பட்டுள்ளன. ஆனால், இலங்கையில் தான் யானைகள் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பேராசிரியர் பிரித்திராஜ் ஃபெர்ணான்டோ தெரிவிக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்