You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யானை - மனித மோதல்களால் இலங்கையில் மரணிக்கும் யானைகள்
இலங்கையில் யானை - மனித மோதல்கள் உள்ளடங்கலாக பல்வேறு காரணங்களினால் ஆண்டுதோறும் இருநூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யானை - மனித மோதல்களின் பின்புலத்தில் துப்பாக்கிச் சூடு, நஞ்சூட்டல், மின்சார தாக்குதல், பொறி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட மனித செயற்பாடுகளினால் கொல்லப்படும் யானைகளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பை காண முடிகின்றது.
65 சதவீதமான யானைகளின் மரணங்கள் துப்பாக்கிச் சூடு மரணங்கள் என பதிவாகியுள்ளதாக கூறுகிறார் வன ஜீவராசிகள் துறை இயக்குநர் நாயகம் எம்.ஜி.சி. சூரியபண்டார.
"துப்பாக்கிச் சூடு பட்ட யானையை இலகுவில் அடையாளம் காண முடியாது. அதன் சோர்வடைந்த நிலை, காலை நொண்டியவாறு நீர் நிலைகளை நோக்கி செல்லல் ஆகிய அறிகுறிகள் அவதானிக்கப்பட்டுதான் அவை அடையாளம் காணப்படுகின்றன. யானை அடையாளம் காணப்படும் வேளை அவை மோசமான தொற்றுக்குள்ளாகியிருக்கும்" என வன விலங்கு சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் தாரக பிரசாத் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் இறுதியாக 2011-ம் ஆண்டு யானைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் போது 5,800 யானைகள் உள்நாட்டில் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
அதன் பின்னரான ஆய்வுகளின்படி, வருடமொன்றுக்கு 80 முதல் 110 யானைகள் வரை பிறந்துள்ள போதிலும், 205 - 280 யானைகள் மரணமடைவதாக கூறப்படுகின்றது.
யானைகளை கொல்வது தண்டணைக்குரிய குற்றமாகும். குற்றம் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டால் ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதம் செலுத்த நேரிடும். அல்லது 2 முதல் 5 வருடங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என வன ஜீவராசிகள் பாதுகாப்பு சட்டம் கூறுகின்றது.
சட்டத்தில் அவ்வாறு கூறப்பட்டாலும் ஆண்டுதோறும் 200ற்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்படுவதாக வன ஜீவராசிகள் இலாகா தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.
குறிப்பாக 2012 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான ஐந்து வருடங்களில் 1,171 யானைகள் இறந்துள்ளன. அவற்றில் 104 யானைகள் மட்டும்தான் இயற்கையாக மரணமடைந்துள்ளன. 1,067 யானைகள் விபத்துகள், யானை - மனித மோதல்கள் உள்ளிட்ட காரணங்களினால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறிப்பிட்ட 5 வருட காலத்தில், கடந்த ஆண்டிலே கூடுதலான யானைகளின் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 35 இயற்கை மரணங்கள் அடங்கலாக 279 யானை மரணங்கள் பதிவாகியுள்ளன.
துப்பாக்கிச் சூடு - 52,
பொறி துப்பாகிச் சூடு - 47,
மின்சார தாக்குதல் - 26,
வேறு காரணங்கள் - 30 ,
காரணம் கண்டறிப்படாதவை - 35
என 2012 -2016 வரையிலான 5 வருடங்களில் யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :