இலங்கை நிலச்சரிவு, வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு

இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தங்களில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 96 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர்.

நேற்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னர் எந்தவொரு சடலங்களும் மீட்கப்படவில்லை என அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில், சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் மரணங்களின் எண்ணிக்கை - 84 பேர். 29 பேரை தொடர்ந்து காணவில்லை என கூறப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் 04 பேர் மரணங்கள் பதிவாகியுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் 63 பேரின் மரணங்களும் கம்பகா மாவட்டத்தில் 04 மரணங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் 52 பேரை காணவில்லை என்றும் அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

வெள்ளத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தென் மாகாணத்தில் காலி மாவட்டத்தில் 15 பேரும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 05 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 28 பேரும் என 48 பேர் உயிழந்துள்ளனர். மாத்தறை 15 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர்.

இம்மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டி அதிகரித்துள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி கூறுகின்றார்.

1 லட்சத்து 63 ஆயிரம் குடும்பங்களை கொண்ட 6 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 72 ஆயிரம் பேர் 355 பாதுகாப்பான இடங்களில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

1540 வீடுகள் முழுமையாகவும், 7814 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அரசு பேரிடர் முகாமத்துவ மையம் வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்