DC vs RR: தனியொருவனாக போராடிய சஞ்சு சாம்சன் - ஒற்றை இலக்கத்தில் வெளியேறிய ராஜஸ்தான் பேட்ஸ்மென்கள்

டெல்லி ஒப்பனர்கள்

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, டெல்லி ஒப்பனர்கள்

ஐபிஎல் 2021 சீசனின் 36ஆவது போட்டி நேற்று (செப்டம்பர் 25, சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

155 ரன்கள் அடித்தால் வெற்றி என இலக்கு வைத்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸை 121 ரன்களில் சுருட்டியது.

நல்ல தொடக்கம்

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் டெல்லியை பேட் செய்ய அழைத்தது. 3.1ஆவது பந்தில் வெறும் 8 ரன்களோடு ஷிகர் தவானை வீழ்த்தியது, 4.1 ஓவரில் 10 ரன்களில் ப்ரித்வி ஷாவை வீழ்த்தி, சிறப்பாகத் தொடங்கியது ராஜஸ்தான்.

ஆனால் அடுத்தடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஷிம்ரான் ஹெட்மேயர் டெல்லியை கெளரவமான ஸ்கோரை நோக்கி நகர்த்தினர். இதில் ஸ்ரேயாஸ் 32 பந்துகளில் 43 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணியிலேயே ஷ்ரேயாஸ் - ரிஷப் ஜோடி தான் அதிகபட்சமாக 45 பந்துகளில் 62 ரன்களைக் குவித்தது. அதன் பிறகு அப்படியொரு நல்ல இணை உருவாகவிடாமல் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் பார்த்துக் கொண்டனர்.

டெல்லி அணியினர்

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, டெல்லி அணியினர்

ராஜஸ்தானின் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 4 ஓவர்களில் 22 ரன்களைக் கொடுத்து ரிஷப் பந்த் உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சேதன் சகாரியா 4 ஒவர்களில் 33 ரன்களைக் கொடுத்து ப்ரித்வி ஷா உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராகுல் தீவாட்டியா 3 ஓவர்களுக்கு 17 ரன்களை கொடுத்து அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஷ்ரேயாஸின் விக்கெட்டை வீழ்த்தி டெல்லியின் ரன் ரேட்டை மட்டுப்படுத்தினார்.

சில தினங்களுக்கு முன் பஞ்சாபுக்கு எதிராக கடைசி ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றி பெறச் செய்த கார்த்திக் தியாகி, இந்த போட்டியில் 4 ஓவர்களில் 40 ரன்களைக் கொடுத்து ஷிகர் தவானின் விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.

20 ஒவர் முடிவில் 154 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்திருந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. 155 அடித்தால் வெற்றி என களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்த பேட்ஸ்மேன்கள்

சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, சஞ்சு சாம்சன்

லியாம் லிவிங்ஸ்டன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் என ராஜஸ்தானின் இரு தொடக்க வீரர்களும் முறையே 1 மற்றும் 5 ரன்களில் முதல் இரு ஓவர்களில் வீழ்ந்தனர். தத்தளித்துக் கொண்டிருந்த அணியைக் காப்பாற்ற அவ்வணியின் தலைவர் சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.

டெல்லி அணியில் முதல் 10 ஓவர்களில் அமைந்த ஷ்ரேயாஸ் - ரிஷப் போன்ற ஒரு வெற்றிகரமான இணையை, ராஜஸ்தான் பேட்ஸ்மென்களால் அமைக்க முடியவில்லை. 11.5ஆவது ஓவருக்குப் பிறகு தான் ராகுல் தீவாட்டியா - சஞ்சு சாம்சன் ஜோடி 33 பந்துகளுக்கு 44 ரன்களைக் குவித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். கடைசி ராஜஸ்தான் பேட்ஸ்மென்கள் மீதான அவர்களின் பிடி இறுகிக் கொண்டே போனதால், வெற்றி இலக்கை நோக்கி ரன்களைக் குவிக்க முடியாமல் திணறினர்.

ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் (53 பந்துகளுக்கு 70 ரன்கள்) மற்றும் மஹிபால் லாம்ரோர் (24 பந்துகளுக்கு 19 ரன்கள்) தவிர வேறு எந்த பேட்ஸ்மெனும் 10 ரன்களைத் தாண்டவில்லை. ராஜஸ்தான் பேட்டிங் லைன் அப் அத்தனை பலவீனமாக இருந்தது.

சஞ்சு சாம்சன் & டேவிட் மில்லர்

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, சஞ்சு சாம்சன் & டேவிட் மில்லர்

இதில் மற்றொரு சுவாரஸ்ய செய்தி என்னவென்றால், டெல்லி அணி சார்பில் பந்து வீசியவர்கள் அனைவருமே விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். அன்ரிக் நார்ட்ஜ் 4 ஓவர்களில் 18 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், அவேஸ் கான் 4 ஓவர்களுக்கு 29 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்டையும், அஸ்வின் 4 ஓவருக்கு 20 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டையும், ககிசோ ரபாடா 4 ஓவருக்கு 26 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டையும், அக்ஸர் படேல் 4 ஓவருக்கு 27 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

டெல்லி பந்துவீச்சாளர்களிலேயே அதிகபட்சமாக 29 ரன்கள் கொடுத்தது அவேஸ் கான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியால் டெல்லி 10 போட்டிகளில் 8-ல் வென்று முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ராஜஸ்தான் அணி 9 போட்டியில் 4-ல் வென்று 7ஆவது இடத்தில் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :