டோக்யோ ஒலிம்பிக்: மூன்று இந்திய மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக்கை எட்டிப்பிடித்த கதை

பட மூலாதாரம், AFP
டோக்யோவிலிருந்து பதக்கங்களைக் கொண்டு வரக்கூடிய இந்திய மல்யுத்த வீரர்களின் சொந்த வாழ்க்கை, யுத்த களத்தின் போராட்டத்துக்கு சளைத்தது அல்ல.
பல தசாப்தங்களாக ஹாக்கி தவிர மற்ற விளையாட்டுகளில் ஒலிம்பிக் பதக்கத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் நிலை கடந்த சில ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது.
இந்த முறை இந்தியாவின் பல வீரர்கள் ஒலிம்பிக் பதக்கங்களை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர்களில், ஹரியானாவைச் சேர்ந்த மூன்று மல்யுத்த வீரர்களின் கதை மிகவும் சுவாரஸ்யமானது.
தீபக் புனியா (86 கிலோ, ஃப்ரீஸ்டைல்)

பட மூலாதாரம், Getty Images
ஹரியாணாவின் ஜஜ்ஜர் மாவட்டத்தின் சாரா கிராமத்தில் பால் விற்பனையாளர் குடும்பத்தில் பிறந்த தீபக் புனியா, வெறும் 7 ஆண்டுகளில் ஒலிம்பிக்கை எட்டியுள்ளார்.
அவரது தந்தை சுபாஷ் , 2015 முதல் 2020 வரை ஒவ்வொரு நாளும் தனது வீட்டில் இருந்து பால், உலர் பழங்கள் மற்றும் பழங்களை எடுத்துக்கொண்டு 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சத்ரசால் ஸ்டேடியத்திற்கு சென்று தீபக்கிற்கு அளித்துவந்திருக்கிறார். மழை, வெய்யில் அல்லது குளிர்காலம் என்று எதுவாக இருந்தாலும், இந்த நடவடிக்கை ஒருபோதும் தடைபடவில்லை.
சரியான உணவு இல்லாத காரணத்தால் தீபக்கிற்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் விரும்பினர்.
தீபக் பூனியாவை அவருக்கு நெருக்கமானவர்கள் 'கேத்லி(கெட்டில்)பயில்வான்' என்றும் அழைக்கிறார்கள். இதன் பின்னணியில் ஒரு வேடிக்கையான சம்பவம் உள்ளது.
தீபக்கிற்கு 4 வயதாக இருந்தபோது அவருக்கு இந்த செல்லப்பெயர் கிடைத்தது.
கிராமத்தின் தலைவர் தீபக்கிற்கு ஒரு கெட்டிலில் (kettle) வைத்திருந்த பாலை குடிக்க கொடுத்தார்.. தீபக் பால் முழுவதையும் ஒரு நொடியில் குடித்தார். பின்னர் தலைவர் அவருக்கு இன்னொரு கெட்டிலைக் கொடுத்தார். தீபக் அதையும் குடித்து விட்டார். இது போல 5 கெட்டில் பாலையும் அவர் குடித்து முடித்தார்.
இவ்வளவு சிறிய குழந்தை எப்படி இவ்வளவு பால் குடிக்க முடியும் என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். அன்றிலிருந்து எல்லோரும் அவரை 'கேத்லி பயில்வான்' என்று அழைக்கத் தொடங்கினர்.
தீபக் புனியா ஒரு வேலையைப் பெறுவதற்காக மல்யுத்த பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். அவர் தனது குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க விரும்பினார். ஆனால் அவரது கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. அவர் 2016 ல் கேடட் பிரிவு மற்றும் 2019 ல் ஜூனியர் பிரிவு ஆகிய இரண்டிலும் உலக சாம்பியனானார்.
2019 ஆம் ஆண்டில், கஜகஸ்தானின் நூர்-சுல்தானில் நடைபெற்ற சீனியர் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.
அன்ஷு மல்லிக் மற்றும் சோனம் மல்லிக்

பட மூலாதாரம், Getty Images
ஹரியாணாவின் நிடானி கிராமத்தைச் சேர்ந்த அன்ஷு மற்றும் மதீனா கிராமத்தைச் சேர்ந்த சோனம் இருவருக்குமே வயது 19. டோக்யோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்திய வீரர்களில் வயதில் சிறியவர்களில் இவர்கள் அடங்குவார்கள்.
இந்த இரு மல்யுத்த வீரர்களின் குழு உறுப்பினர்களும் , குடும்பத்தினரும், இவர்கள் 2020 ஒலிம்பிக்கில் பங்கேற்பார்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருக்கவில்லை.
2024 இல் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு அவரை தயார்படுத்த வேண்டும் என்று அன்ஷுவின் தந்தை தரம்வீர் மற்றும் பயிற்சியாளர் ஜகதீஷூம்நினைத்தனர். சோனமின் பயிற்சியாளர் அஜ்மீர் சிங்கும் இதே விஷயத்தைத்தான் சொல்கிறார். ஆனால் இரு வீரர்களிடமும் நீங்கள் டோக்யோவுக்கு தகுதி பெற வேண்டும் என்று கூறப்பட்டது.
டோக்யோவில், 57 கிலோ எடை பிரிவில் அன்ஷுவும் , 62 கிலோ எடை பிரிவில் சோனமும் பங்கேற்பார்கள். அவர்கள் இருவருமே தேசிய அளவில் 60 கிலோ எடை பிரிவு போட்டியில் கலந்து கொண்டனர். மேலும் பலமுறை அவர்கள் மல்யுத்த களத்தில் மோதியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இருவரும் சிறந்த மல்யுத்த வீரர்கள் என்பதால் சில நேரங்களில் சோனம் வென்றார். சில சமயங்களில் அன்ஷு வெற்றிபெற்றார். இருவரும் ஒரே பிரிவில் தொடர்ந்து விளையாடினால், அவர்களில் ஒருவர் பாதிப்புக்கு உள்ளாவார் என்று கருதப்பட்டது. எனவே இருவரின் எடை பிரிவும் மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து 62 கிலோ எடை பிரிவில் சோனமும், 57 கிலோ எடை பிரிவில் அன்ஷுவும் வைக்கப்பட்டனர். இதன் விளைவாக இருவரும் தங்கள் எடை பிரிவுகளில் மூத்த மல்யுத்த வீரர்களை தோற்கடித்து ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றனர்.
அன்ஷுவின் தந்தை தரம்வீர் தனது மகனை ஒரு பெரிய மல்யுத்த வீரராக மாற்ற வேண்டும் என்று கனவு கண்டதாகவும், அவரை நிடானி விளையாட்டுப் பள்ளியில் சேர்த்ததாகவும் கூறுகிறார்.
பின்னர் ஒரு நாள் அன்ஷு தனது பாட்டியிடம் தானும் மல்யுத்தம் செய்து இந்தியாவுக்கு பதக்கங்களைக் கொண்டு வரப்போவதாகக் கூறினார். அதன் பின்னர் தரம்வீர், அன்ஷுவையும் அதே பயிற்சி மையத்தில் சேர்த்தார். அப்போது அன்ஷுவுக்கு 12 வயதுதான்.
பயிற்சியில் சேர்ந்த பிறகு அன்ஷூ, 3-4 ஆண்டுகளாக பயிற்சிபெற்றுவந்த மல்யுத்த வீரர்களை வெறும் 6 மாதங்களில் தோற்கடிக்கத் தொடங்கினார். இதையடுத்து அவரிடம் பெருமளவு மல்யுத்த திறமை இருப்பதை அனைவருமே ஒப்புக் கொண்டனர்.
மறுபுறம், சோனமின் பயணம் மிகவும் கடினமானது. 2016 ஆம் ஆண்டில் சோனம் மல்லிக்கின் வலது கையில் முடக்குவாதம் ஏற்பட்டது. பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் படிப்படியாக பக்கவாத வடிவத்தை எடுத்தது.
அவர் வாழ்நாள் முழுவதும் மல்யுத்தத்தில் ஈடுபட முடியாது என்று கூட நரம்பியல் நிபுணர் கூறியிருந்தார். ஆனால் சோனம் பக்கவாதத்தை வென்று 2017 ல் பல மாநில மற்றும் தேசிய போட்டிகளில் வென்றிபெற்றார். இப்போது அவர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மகளிர் மல்யுத்த அணிக்கு தலைமை தாங்குவார்.
(பி.டி.ஐ செய்திமுகமையின் மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் அமன்பிரீத் சிங்குடனான உரையாடலின் அடிப்படையில் எழுதப்பட்டது)
பிற செய்திகள்:
- விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டது ஏன்? பின்னணி தகவல்கள்
- கொரோனா தடுப்பூசி செயல்படுகிறதா என்று பார்க்க ஆன்டிபாடி டெஸ்ட் எடுக்கலாமா?
- “பீடி, சிகரெட், புகையிலை வழக்கம் இல்லாத தமிழக கிராமம்
- சதாமிடமிருந்து தப்பித்து அமெரிக்காவில் குடியேறிய இராக் ஒலிம்பிக் வீரர்
- "சுதந்திரமான இன்டர்நெட் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள்" - எச்சரிக்கும் சுந்தர் பிச்சை
- "இந்தியர்கள் செக்ஸ் பற்றி பேசுவதில்லை, அதனால் அவர்களுக்கு உதவுகிறேன்"
- சிரிஷா பண்ட்லா: விண்வெளி சுற்றுலாவில் ஒரு மணி நேரம் - இந்தியர்கள் கொண்டாடுவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












