Ind Vs Eng முதல் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி பெற்றது எப்படி?

பட மூலாதாரம், ICC twitter
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸை வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
இங்கிலாந்தின் தொடக்க வீரர்களான ராரி பர்ன்ஸ், டான் லாரன்ஸ் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, சிப்லியும், ஜோ ரூட்டும் நிதானம் காட்டினர். இந்த இணை 390 பந்துகளை எதிர்கொண்டு 200 ரன்களைக் குவித்தது.
இங்கிலாந்துக்கு மூன்றாவது விக்கெட் (சிப்லி) பறிபோன போதே 263 ரன்களை எடுத்திருந்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 89.3 ஓவருக்கு 263 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது இங்கிலாந்து. 128 ரன்களோடு களத்தில் இருந்தார் ஜோ ரூட்.
87 ரன்களுக்கு தன் விக்கெட்டைப் பறிகொடுத்த சிப்லிக்குப் பின், அவ்விடத்தை நிரப்ப பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். மீண்டும் இந்திய பந்து வீச்சாளர்களை சோதிக்கும் வலுவான இணை உருவானது.
பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் இணை 221 பந்துகளை எதிர்கொண்டு 124 ரன்களைக் குவித்தது.
82 ரன்களை விளாசியிருந்த பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை நதீம் தன் 127-வது ஓவரில் வீழ்த்தி, இங்கிலாந்தின் அதிரடி இணையைப் பிரித்தார்.
ஆனால் இந்த இணை பிரிவதற்குள் இங்கிலாந்தின் ஸ்கோர் வலுவடைந்ததுவிட்டது. 387 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது இங்கிலாந்து.
ஐந்தாவது விக்கெட்டாக ஒலி போப்பின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். பல கட்ட போராட்டத்துக்குப் பிறகு, அனாயாசமாக ரன்களைக் குவித்து வந்த இங்கிலாந்தின் தலைவர் ஜோ ரூட்டின் விக்கெட்டை 154-வது ஓவரில் நதீம் எல். பி.டபிள்யூ முறையில் வீழ்த்தினார். அப்போது இங்கிலாந்து 477 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து 555 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
190.1 ஓவர் முடிவில் 578 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து தன் முதல் இன்னிங்ஸை மூன்றாவது நாளில் நிறைவு செய்தது இங்கிலாந்து.
பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா, நதீம் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அஸ்வின் 55.1 ஓவர்களை வீசி 146 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது எகானமி 2.65 ஆக இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதைக் கட்டுப்படுத்தவில்லை.
நம்பிக்கையுடன் 3ஆம் நாளில் ஆடிய இந்திய அணி

பட மூலாதாரம், ICC
பெரிய இலக்குடன் மூன்றாவது நாளில் களமிறங்கியது இந்திய அணி.
மூன்றாவது நாளின் பாக்கி நேரத்தில் களமிறங்கிய, இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் தங்கள் விக்கெட்டுகளை வெகு சொற்ப ரன்களில் இழந்தனர். புஜாரா ஒரு பக்கம் நின்று நிதானமாக 143 பந்துக்கு 73 ரன்களை எடுத்தாலும் மறு பக்கம் விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே சொதப்பினர். ஒரு நல்ல இணை உருவாவதற்குள் புஜாராவும் தன் விக்கெட்டைப் பறிகொடுத்துவிட்டார்.
ஒரு நாள் போட்டி போல 88 பந்துகளில் 91 ரன்களைக் குவித்த ரிஷப் பண்டும் தன் விக்கெட்டை இழந்தார். வாஷிங்டன் சுந்தர் மட்டும் இறுதி வரை தன் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் 85 ரன்களை எடுத்தார். மறு பக்கம் நிலையாக யாரும் நிற்க முடியவில்லை. டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில், 95.5 ஓவரில் 337 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.
இங்கிலாந்தின் குறைந்த அனுபவம் கொண்ட ஸ்பின்னர்களான ஜாக் லீச் (2 விக்கெட்) மற்றும் டாம் பெஸ் (4 விக்கெட்) சேர்ந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். புஜாரா தொடங்கி கோலி, ரஹானே, பண்ட் வரை ஒட்டுமொத்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் தன் சுழலில் சிக்கவைத்தார் டாம் பெஸ்.
இரண்டாவது இன்னிங்ஸ்
நான்காவது நாளின் மீத நேரத்தில் இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்த இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே சுதாரித்துக் கொண்ட இந்திய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மென்களை சடசடவென வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பினார்கள். ராரி பர்ன்ஸ், சிப்லி, லாரன்ஸ், முதல் இன்னிங்ஸில் அசால்ட் காட்டிய ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் என 101 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய பந்துவீச்சாளர்கள் படை. நான்காவது நாள் நிறைவடைவதற்குள்ளேயே 46.3 ஓவர்களுக்கு 178 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அஸ்வின் மட்டும் 17.3 ஓவர்களை வீசி 61 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான்காவது நாள் நிறைவடைவதற்குள்ளேயே இந்தியா இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸை முடித்துவிட்டது.
420 ரன்கள் இலக்கு

பட மூலாதாரம், ICC
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போலவே பெரிய இலக்கு மற்றும் குறைந்த காலக்கெடு உடன் களமிறங்கியது இந்தியா.
ரோஹித் ஷர்மா 12 ரன்களோடு ஆட்டமிழந்தாலும் சுப்மன் கில் 50 ரன்களை எடுத்து கொஞ்சம் தாக்குப்பிடித்தார். அவருக்குப் பின் விராட் கோலி 72 ரன்களை எடுத்தார். கோலிக்குப் பிறகு களத்துக்கு வந்தவர்களில் ஒருவர் கூட 15 ரன்களுக்கு மேல் எடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறி கொடுத்தனர். 58.1 ஓவர் முடிவில் 192 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.
இந்த இன்னிங்ஸில் ஜாக் லீச் தன் சுழலில் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அனுபவஸ்தரான ஜேம்ஸ் ஆண்டர்சன் சுப்மன் கில், ரஹானே, பண்ட் போன்ற முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை முதல் டெஸ்டில் வென்றது இங்கிலாந்து. சரி இந்த தோல்விக்கான முக்கிய காரணங்கள் என்ன?
1. சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தின் பிட்ச்
ஒரு பேட்ஸ்மேனுக்கு சென்னை பிட்ச் செட்டாகிவிட்டால் அவர் தொடர்ந்து நிலையாக ஆடத் தொடங்கிவிடுவார். அதை இங்கிலாந்து வீரர்கள் புரிந்து கொண்டு (ஜோ ரூட்டே சொன்னது குறிப்பிடத்தக்கது) ரன் குவிப்பில் இறங்கிவிட்டார்கள். அதே போல சமீபத்தில் இலங்கையை வீழ்த்திவிட்டு இந்தியாவுக்கு வந்திருந்த இங்கிலாந்து அணியை, சென்னை பிட்ச் பெரிதும் பாதிக்கவில்லை. இந்திய அணிக்கு தங்களின் உள்நாட்டு பிட்ச் என்கிற வசதி கைகொடுக்கவில்லை.
2. ஜோ ரூட்டின் இரட்டைச் சதம்
இங்கிலாந்தின் தலைவராக களமிறங்கிய ஜோ ரூட் இலங்கை டெஸ்டில் விளையாடியது போலவே நல்ல ஃபார்மில் இருந்தார். தன் முதல் இன்னிங்ஸிலேயே 377 பந்துகளை எதிர்கொண்டு 218 ரன்களை எடுத்து இந்திய பந்துவீச்சாளர்களை கதிகளங்கச் செய்திருந்தார் ஜோ ரூட். இங்கிலாந்து முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸிலேயே வலுவான இடத்தைப் பிடித்ததற்கு ஜோ ரூட்டின் பங்கு மிகப் பெரியது. அதோடு தன் 100-வது டெஸ்ட் போட்டியில் தன் இரட்டை சதத்தை பதிவு செய்த முதல் வீரர் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார்.
3. 11 விக்கெட்டுகளை வீழ்த்திய புதிய ஆயுதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், மொஹம்மத் சிராஜ், ஷர்துல் தாக்கூர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்ற குறைந்த அனுபவம் கொண்ட பந்துவீச்சாளர்களை வைத்து இந்தியா எப்படி ஆட்டம் காட்டியதோ, அதே போல இந்த டெஸ்ட் போட்டியில் ஜாக் லீச் மற்றும் டாம் பெஸ் என்கிற இரண்டு குறைந்த அனுபவம் கொண்ட வீரர்களை வைத்து இந்தியாவைச் சாய்த்துவிட்டது இங்கிலாந்து. இந்த டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து வீழ்ந்த 20 இந்திய விக்கெட்டுகளில் 11 விக்கெட்டுகளை இந்த இரு அனுபவம் குறைந்த வீரர்கள் மட்டும் எடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
4. சொதப்பிய இந்திய பேட்ஸ்மென்கள்
இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் சீரிஸில் கலக்கிய ரஹானே, புஜாரா போன்ற அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேட்ஸ்மேன்கள் இந்த டெஸ்டில் அத்தனை சிறப்பாக விளையாடவில்லை. சொல்லப்போனால் பேட்ஸ்மேன்கள் பெரிதும் நிலையாக விளையாடவில்லை. முதல் இன்னிங்ஸில் 73 அடித்த புஜாரா, 91 ரன்களைக் குவித்த பண்ட், 85 ரன்களை எடுத்த வாஷிங்டன் சுந்தர், இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 15, 11, 0 என சொதப்பினர்.
ரன் கொடுத்த ஸ்பின்னர்கள் - ஜொலிக்காத இஷாந்த் ஷர்மா
இந்த போட்டிக்கான வீரர்கள் பட்டியலை அறிவித்த உடனேயே, ஆஸ்திரேலியா சீரிஸில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, கலக்கிய மொஹம்மத் சிராஜின் பெயர் இல்லாததைக் கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். அவர் இடத்தை அனுபவமிக்க வீரர் இஷாந்த் ஷர்மா நிரப்பினார். ஆனால் அவர் அத்தனை சிறப்பாக இந்த போட்டியில் விளையாடவில்லை. அதே போல இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் மட்டும் அஸ்வின் மற்றும் நதீம் என இரு ஸ்பின்னர்கள் சேர்ந்து 313 ரன்களை விட்டுக் கொடுத்தார்கள். இதுவும் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் எனலாம்.
தற்போது நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், 1-க்கு 0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து. அடுத்த போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், வரும் பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கவிருக்கிறது. அதில் எப்படி ஆடவிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பிற செய்திகள்:
- சசிகலா வருகை, மெளனம் காக்கும் எடப்பாடி பழனிசாமி - அடுத்த அதிரடியை விளக்கும் ஜெய்ஆனந்த்
- சிறைக்குள் முடங்கிய `சின்ன எம்.ஜி.ஆர்' - வி.என்.சுதாகரனை புறக்கணிக்கும் வி.கே.சசிகலா
- செவ்வாய் அதிகாலையில் சென்னை வந்தடைந்த சசிகலா
- செங்கோட்டை வன்முறை: தேடப்பட்டு வந்த பஞ்சாபி நடிகர் கைது
- அரவிந்த் கேஜ்ரிவாலின் மகளிடம் ஆன்லைன் மூலம் ரூ.34,000 மோசடி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:














