ஐசிசி விருதுகள்: வியப்பளித்த ரஷீத் கான்; விருதுகளை அள்ளிய கோலி, தோனி

கோலி, தோனி

பட மூலாதாரம், Getty Images

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான விராத் கோலி, மகேந்திர சிங் தோனி ஆகியோர் ஐசிசியின் உயரிய விருதுகளை வென்றுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி, நடப்பு தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.

அதாவது, கிரிக்கெட்டில் உள்ள மூன்றுவித போட்டிகளான ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20யில் கடந்த 2011 முதல் இந்த ஆண்டு வரை சிறந்த பங்களிப்பை ஆற்றிய வீரர்களை சிறப்பிக்கும் வகையில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாக்குகளை இணையம் வாயிலாக பதிவு செய்து வந்த நிலையில், இந்த விருதுகள் இன்று (டிசம்பர் 28) அறிவிக்கப்பட்டன.

விருதுகளை அள்ளிய கோலி, தோனி

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நடப்பு தசாப்தத்தின் (2011 - 2020) சிறந்த வீரராக இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், ஒட்டுமொத்தமாக தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான 'சர் கார்பீல்ட் சோபர்ஸ்' விருதையும் கோலி தட்டிச்சென்றார்.

சமீபத்தில் அனைத்துவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுப்பெற்றிருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, களத்தில் விளையாட்டு தர்மத்தை வெளிப்படுத்தியதை பாராட்டும் வகையில் செயல்பட்டதால், அவருக்கு 'ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்' விருது வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்துக்கு இடையே நாட்டிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, இங்கிலாந்து வீரர் இயான் பெல் தவறான தீர்ப்பால் வெளியேறினார். ஆனால், அப்போது தோனி அவரை அழைத்து விளையாட வைத்தார். அதை பாராட்டும் வகையிலேயே அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

வியப்பளித்த ரஷீத் கான்

ரஷீத் கான்

பட மூலாதாரம், SUNRISES HYDERABAD

படக்குறிப்பு, ரஷீத் கான்

தசாப்தத்தின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் தட்டிச்சென்றார். டி20 கிரிக்கெட்டில் தொடக்கத்தில் இருந்தே பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் இந்திய அணியின் வீரர் ரோகித் ஷர்மாவுக்கு இந்த விருது கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ரஷீத் கான் வென்றுள்ளார்.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ரஷீத் கான், "ஆப்கானிஸ்தானில் இருந்து ஒருவர் இந்த விருதைப் பெறுவது எனக்கு ஒரு சிறப்பு வாய்ந்த தருணம்" என்று கூறியுள்ளார்.

சிறந்த டெஸ்ட் வீரர்

தசாப்தத்தின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வென்றுள்ளார்.

இந்த பிரிவில், இந்திய அணியின் வீரர்களான விராத் கோலி, அஸ்வின் ஆகியோருடன் போட்டியிட்ட ஸ்மித் இறுதியில் விருதை பெற்றுள்ளார்.

வியப்பளித்த எல்லிஸ் பெர்ரி

எல்லிஸ் பெர்ரி
படக்குறிப்பு, எல்லிஸ் பெர்ரி (கோப்புப்படம்)

மகளிர் கிரிக்கெட் பிரிவில் சிறந்த ஒருநாள், டி20 மற்றும் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை என மூன்று விருதுகளையும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டரான எலிஸ் பெர்ரி தட்டிச்சென்று வியப்பளித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :