கால்பந்து லீக் போட்டிகள்: இந்திய வீராங்கனைகளுக்கு வரமா?

மகளிர் கால்பந்து
    • எழுதியவர், ஆதேஷ் குமார் குப்தா
    • பதவி, பிபிசிக்காக

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் லீக் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது அதிகரித்துள்ளது. முதலில் கிரிக்கெட்டின் ஐ.பி.எல், அதைத் தொடர்ந்து ஹாக்கி இந்தியா லீக், ஆண்கள் கால்பந்தின் ஐ.எஸ்.எல், பிரீமியர் பேட்மிண்டன் லீக், ப்ரோ கபடி லீக், டென்னிஸ் லீக், மல்யுத்த லீக், குத்துச்சண்டை லீக், ஜீ லீக் டேபிள் டென்னிஸ் என பல லீக் போட்டிகள் தொடங்கின.

News image

லீக் போட்டிகள் இப்போது இந்திய விளையாட்டுகளில் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றன என்பதை இதிலிருந்து அனுமானிக்க முடிகிறது. இருப்பினும், ஹாக்கி இந்தியா லீக் இனி நடைபெறாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பெண்கள் கால்பந்து புறக்கணிக்கப்பட்ட விதம் அனைவருக்கும் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் கால்பந்து லீக் இருக்கிறதா இல்லையா என்றே யாருக்கும் தெரியாத நிலைதான் இருந்தது. ஆனால் தற்போது அந்த அவலநிலை மாறிவிட்டது. இந்திய மகளிர் லீக்கின் நான்காவது பதிப்பு வெள்ளிக்கிழமை பெங்களூரில் முடிவடைந்தது.

பட்டத்திற்கு போட்டியிட்ட கோகுலம் கேரளா அணி, 3க்கு 2 என்ற கோல் கணக்கில் KRYPHSA FC கிளப்பை வென்றது. கோகுலம் கேரளா அணி முதல் முறையாக இந்த லீக்கை வென்று சாம்பியனாகிவிட்டது. வெற்றி பெற்ற அணியில் பரமேஸ்வரி தேவி, கமலா தேவி, சபித்ரா பண்டாரி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். முன்னதாக, சேது கால்பந்து கிளப், ஸ்டூடண்ட்ஸ் ஃபுட்பால் கிளப் மற்றும் ஈஸ்டர்ன் ஸ்போர்டிங் யூனியன் அணி ஆகியவை இந்த பட்டத்தை வென்றுள்ளன..

மகளிர் கால்பந்து

இந்த முறை இந்த லீக்கில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. அவை தலா ஆறு அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.

மணிப்பூர், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் பிற மண்டலங்களை சேர்ந்த அணிகள் இதில் அடங்கும்.

2016-17 ஆம் ஆண்டில், லீக்கின் முதல் பதிப்பில் ஆறு அணிகள் மட்டுமே பங்கேற்றன. அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற லீக் போட்டியில், சில வெளிநாட்டு மகளிர் கால்பந்து வீராங்கனைகளும் இந்திய கிளப்புகளில் இணைந்தனர்.

கேரளாவின் கோகுலம் கால்பந்து கிளப்பில் உகாண்டாவின் ஃபசிலா இக்வாபுத் இணைந்தார். ரிதா நப்போசா, இங்கிலாந்தின் டென்வி ஹான்ஸ், இரண்டு பங்களாதேஷைச் சேர்ந்த சபீனா காதூன் மற்றும் கிருஷ்ணா ராணி ஆகியோருக்கு சேது கால்பந்து கிளப்ப்பில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

இந்திய மகளிர் லீக்கின் ஒரு சீசனில் தான் அதிக கோல் அடித்த சாதனையை செய்தார் மணிப்பூர் போலீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் முன்னிலை வீராங்கனை மற்றும் இந்திய மகளிர் கால்பந்து அணியின் தலைவரான நாங்கோம் பாலா தேவி.

மகளிர் கால்பந்து

2018-19இல் நடைபெற்ற மூன்றாவது சீசனில் 26 கோல்களை அடித்தார்.

2016-17 முதல் சீசனில் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் யூனியனின் கமலா தேவியும், 2017-18 இரண்டாவது சீசனில் நங்கோம் பாலா தேவியும் தலா 12 கோல்களை அடித்தனர். 2017-18ஆம் ஆண்டில் நங்கோம் பாலா தேவி கிரிஃப்சா கால்பந்து கிளப்புக்காக விளையாடினார்.

இந்திய மகளிர் கால்பந்து லீக்கைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக பெண்கள் கால்பந்தாட்டத்தை இந்திய கால்பந்து கழகம் புறக்கணித்து வந்தது. இதுபோன்ற லீக் போட்டிகளை நடத்தலாம் என்று 2016-17 ஆம் ஆண்டில் தான் இந்திய கால்பந்து கழகம் முடிவு செய்தது என்கிறார் கால்பந்து விமர்சகர் நோவி கபாடியா.

இந்த ஆண்டு, 19 வயதிற்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா நடத்த வேண்டும் என்பதால், இதில் பங்கேற்கும் இந்திய அணியின் மீது கவனம் செலுத்தப்படுகிறது.

இந்தியாவில் பெண்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டு பிரபலமடைய வேண்டுமானால், இதுபோன்ற பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும் என்று வலியுறுத்துகிறார் நோவி கபாடியா.

வெளிநாடுகளில், ஆர்சனல் மற்றும் செல்சியா போன்ற பெரிய கால்பந்து கிளப்புகளில் பெண்கள் அணிகளும் உள்ளன. இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் அனைத்து முக்கிய கால்பந்து கிளப்புகளான மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் அல்லது ஐ.எஸ்.எல் போன்றவற்றில், பெண்கள் கால்பந்து என்ற பேச்சுக்கே இடமில்லை.

இத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற லீக் போட்டிகள் நடைபெறுவது சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும். ஏனென்றால் போட்டிகளில் விளையாடும்போது தான் விளையாட்டு வீரர்கள் உருவாகின்றனர்.

மகளிர் கால்பந்து

இந்த லீக்கின் அனைத்து போட்டிகளும் பெங்களூருவில் நடைபெற்றன, இது இந்த லீக்கின் ஈர்ப்பைக் குறைத்ததா?

இதற்கு பதிலளிக்கும் நோவி கபாடியா, "மகளிர் விளையாட்டு போட்டிகளுக்கு தொலைக்காட்சியில் போதுமான வரவேற்பு கிடைப்பதில்லை. அதோடு, டிக்கெட்டுகளும் மிக அரிதாகவே விற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் போட்டிகள் நடக்கிறது என்பதுடன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்" என்று சொல்கிறார்.

இரண்டாவதாக, இது ஆண்கள் லீக் போன்ற ஸ்திரமான லீக் அல்ல. இப்போதுதான் ஆரம்ப கட்டத்தில் உள்ளது இந்த லீக். எனவே இதுபோன்ற நிகழ்வுகளும் இயல்பானது தான்.

இந்த லீக் போட்டிகளில் திறமைகள் வெளிவரத் தொடங்கியுள்ளதாக கபாடியா நம்புகிறார். 2018-19 ஆம் ஆண்டின் சிறந்த பெண் கால்பந்து வீராங்கனையாக ஆஷாலதா தேவியை இந்திய கால்பந்து கழகம் தேர்ந்தெடுத்தது. அவரைத் தவிர, ஃப்ரீ-கிக் கோலுக்காக பிரபலமான டெல்லியின் டாலிமா சிப்பர், இந்தியாவின் கோல் கீப்பர் அதிதி செளஹான், மற்றும் மணிப்பூரின் ஒபைண்டோ தேவி ஆகியோருக்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பீகார், ஒடிசா போன்ற பழங்குடிப் பகுதிகளிலிருந்தும் பெண்கள் கால்பந்து வீராங்கனைகளை உருவாகின்றனர் என்பதே.

மகளிர் கால்பந்து

லீக்கில் சில நட்சத்திர வீரர்களுக்கு நல்ல பணம் கிடைத்துள்ளது. ஆனால் இந்தியாவில் பெண்கள் கால்பந்தின் நிலை மாறுபட்டிருக்கிறது. ஆனால், தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, வீராங்கனைகளுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும், நல்ல எதிர்காலம் உள்ளது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். போட்டிகளில் பங்கேற்கும் பெரும்பாலான வீராங்கனைகள் படித்துக் கொண்டிருக்கின்றனர் அல்லது சிறிய வேலைகளைச் செய்கின்றனர்.

இந்த லீக்கிற்குப் பிறகு, மணிப்பூர் போலீஸ், ரயில்வே மற்றும் வருமான வரி போன்ற அமைப்புகளிலும் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. டாலிமா சிப்பருக்கு உதவித்தொகை கிடைத்தது. தற்போது அவர் கனடாவில் தொழில்முறையில் லீக் போட்டிகளில் விளையாடுகிறார். விளையாட்டு வீராங்கனைகளுக்கு மன உறுதியை ஏற்படுத்தியுள்ளது என்பதே இந்த லீக்கின் மிகப்பெரிய தாக்கம் என்று சொல்லலாம்.

டெல்லி போன்ற பரபரப்பான நகரத்தில், பெண்கள் கால்பந்து விளையாட்டுக்கு இப்போது கவனம் அதிகமாக கிடைக்கிறது. ஹன்ஸ் மற்றும் இந்துஸ்தான் கிளப்பைத் தவிர மற்ற கிளப்களும் பயிற்சி அளிக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார் நோவி கபாடியா. இதில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவிக்கரங்களை நீட்டத் தொடங்கிவிட்டன. அதாவது, பெண்கள் கால்பந்து, நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கி பீடுநடை போடுகிறது. இது எதிர்காலத்தில் மகிழ்ச்சியான முடிவுகளைக் கொடுக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: