ஐபிஎல் 2019: கெயில் 39 வயதிலும் அதிரடியாக ஆடுவதின் ரகசியம் என்ன?

பட மூலாதாரம், Ashley Allen - CPL T20
- எழுதியவர், ஆதேஷ் குமார் குப்தா
- பதவி, பிபிசி
கிறிஸ் கெயில் நாற்பது வயதை நெருங்கிவிட்டார் என்றாலும், டி20 கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை பல இளம் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் இன்னுமும் பேட்டிங்கில் அசத்தி வருகிறார்.
மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் பார்மில் இல்லை என்று கூறியவர்களின் கூற்று தவறு என்பதை நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியின் மூலம் கிறிஸ் கெயில் நிரூபித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெறுவதற்கு கெயில் குவித்த 79 ரன்கள் மிகவும் உதவிகரமாக இருந்தது.
அதிரடியான பேட்டிங்கிற்கு பெயர் போன இதே கிறிஸ் கெயிலை கடந்தாண்டு ஐபிஎல் ஏலத்தின்போது வாங்குவதற்கு எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்லாத கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பேட்டிங்கை பொறுத்தவரை கெயிலையே நம்பியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி ஏழாவது இடத்தையே பிடித்தது. குறிப்பாக, இரண்டு கோடி ரூபாய் அடிப்படை விலையில் வாங்கப்பட்ட கிறிஸ் கெயில், தொடக்கத்தில் ஒரு சதத்தை விளாசினாலும், அதன் பிறகு ஏற்பட்ட காயத்தின் காரணமாக, தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இதுவரை பஞ்சாப் அணி ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது. அதே சூழ்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களில் ஒருவரான கிறிஸ் கெயில், இதுவரை கோப்பையை வென்ற எந்த அணியிலும் இடம்பெற்றதில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், நேற்று நடந்த ஆட்டத்தின்போது கிறிஸ் கெயிலின் ஆட்ட திறனை பார்க்கும்போது, அது அவருக்கு மட்டுமின்றி, பஞ்சாப் அணிக்கும் இந்த தொடரில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில் மற்றொரு சாதனையும் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணியை அதன் சொந்த ஊரிலேயே பஞ்சாப் அணி வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.
நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், கிறிஸ் கெயிலின் பேட்டிங்கே ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் நிதானமாக இருந்த கிறிஸ் கெயில், சிறிது நேரத்திற்கு பிறகு அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். 49 பந்துகளை சந்தித்த அவர் எட்டு பவுண்டரிகளையும், ஆறு சிக்சர்களையும் விளாசினார்.
உலகிலேயே கிறிஸ் கெயிலின் பேட்தான் அதிக எடை கொண்டதாக கருதப்படுகிறது. அதன் காரணமாகவே வேகமாக வரும் பந்தை கெயில் தனது பேட்டினால் தொட்டாலே அது ரன்களாக மாறுகிறது.
ஐபிஎல்லில் நான்காயிரம் ரன்கள்

பட மூலாதாரம், Twitter
பஞ்சாப் அணியை பொறுத்தவரை, கிறிஸ் கெயிலுடன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் ராகுல் சிக்சர்களை விட அதிகளவில் பவுண்டரிகளையே அடிக்க கூடியவர்.
எனவே, சிக்சர்களாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்துவது மட்டுமின்றி, நீடித்து விளையாடும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு நேற்று கிறிஸ் கெயில் விளையாடினார்.
தொடக்க வீரராக களமிறங்கிய கெயில் 15ஆவது ஓவர் வரை களத்தில் நின்று அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினார். கெயில் ஆட்டமிழக்கும்போது, பஞ்சாப் அணியின் ஸ்கோர் 144 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்தது.
கெயிலுக்கு அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் சர்பராஸ் கான் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி 29 பந்துகளை எதிர்கொண்டு 46 ரன்களை குவித்தார்.
அதுமட்டுமின்றி, இந்த ஆட்டத்தின்போது ஐபிஎல்-லில் 4000 ரன்களை கடந்து கிறிஸ் கெயில் சாதனை படைத்தார். தனது 113ஆவது போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார் கெயில்.
ராஜஸ்தானின் தோல்விக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Twitter
185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்களில் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களையே எடுக்க முடிந்தது.
தொடக்கத்தில் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்தது ராஜஸ்தான். இந்நிலையில், எவரும் எதிர்பார்க்காத வகையில் ஜோஸ் பட்லரை பஞ்சாப் அணியின் கேப்டனும், சுழற்பந்துவீச்சாளருமான ரவிசந்திரன் அஸ்வின் 'மன்கட்' முறையில் வீழ்த்த, ஆட்டத்தின் போக்கே தலைகீழாக மாறியது.
13ஆவது ஓவரில் பட்லர் ஆட்டமிழக்கும்போது, ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 108 ரன்களை எடுத்திருந்தது.
இதையெடுத்து, கிரிக்கெட் மாண்பை குலைக்கும் வகையில் அஸ்வினின் செயல்பாடு உள்ளதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இதுகுறித்து சமூக ஊடகங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, பட்லரை தவிர்த்து சஞ்சு சாம்சன் 30 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 20 ரன்களையும் எடுத்திருந்தனர்.
சிறப்பாக பந்து வீசிய பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், நான்கு ஓவர்களை வீசி, 20 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












