அதிர்ச்சி தொடக்கத்தை அபார வெற்றியாக இந்தியா மாற்றியது எப்படி? 5 காரணங்கள்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தகிரிக்கெட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

பட மூலாதாரம், Reuters
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது.
இந்நிலையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு அதிர்ச்சியளிப்பதாக தொடங்கினாலும், பின்னர் இந்தியா அபார வெற்றி பெற்றது. நேற்றைய வெற்றி சாத்தியமாக 5 காரணங்களை இங்கே காண்போம்.
- அதிர்ச்சி தொடக்கம்! ஆனால், மீண்டது இந்தியா
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணித்தலைவர் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
6 ஓவருக்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதில், இந்திய அணித்தலைவர் கோலி மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

பட மூலாதாரம், Reuters
பின்னர், களமிறங்கிய ஜாதவ், டோனி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் நிதான மற்றும் அதிரடி ஆட்டத்தால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 281 ரன்கள் என்ற வலுவான இலக்கை இந்தியா எட்டியது.
- பாண்ட்யாவின் அதிரடி: டோனியின் நிதானம்
ஆரம்பத்தில் ரோகித் சர்மாவுடனும், பின்னர் டோனியுடன் இணைந்து விளையாடிய ஜாதவ் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர், இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கியவர்கள் டோனி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர்தான்.
விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டிருந்ததால் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி 88 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார்.

பட மூலாதாரம், Reuters
மறுமுனையில் அதிரடி ஆட்டம் ஆடிய ஹர்திக் பாண்ட்யா 5 சிக்ஸர்கள் உள்பட 66 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். இறுதிக்கட்டத்தில் புவனேஷ் குமார் தன பங்குக்கு 32 ரன்கள் சேர்த்தார்.
- இந்திய வீழ்ச்சியை பயன்படுத்த தவறிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்
ஆரம்பத்தில், 6 ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்த போதும், பின்னர் ஜாதவ் ஆட்டமிழந்த போதும், இந்திய அணி 281 ரன்கள் குவிப்பது இயலாத ஒன்றாக இருந்தது.
ஆனால், தொடர்ந்து பந்துவீசிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசவும், ரன்களை கட்டுப்படுத்தவும் தவறிவிட்டனர்.

பட மூலாதாரம், Reuters
குறிப்பாக ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் ஜாம்பா மற்றும் மித வேகப் பந்துவீச்சாளர் ஃபால்க்னர் ஆகியோர் அதிக அளவில் ரன்களை விட்டுக்கொடுத்தனர்.
- தொடர்ந்து மிரட்டிய 'வருண பகவான்' : மாற்றியமைக்கப்பட்ட இலக்கு
282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா தொடர்ந்து மழையின் குறுக்கீடுகளை சந்தித்தது.
ஆஸ்திரேலிய அணி தனது இன்னிங்ஸை தொடங்கும் முன் மழையால் ஆட்டம் இரண்டு முறைகள் பாதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Reuters
அதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, 21 ஓவரில் 164 ரன்கள் என ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மழையால் ஏற்பட்ட தாமதம் மற்றும் குறுக்கீடு ஆஸ்திரேலியாவின் திட்டத்தை வெகுவாக குலைத்தது.
- சிறப்பாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள்
விக்கெட்டுக்களை இழந்தாலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியா விளையாடியது. அந்த அணி மேலும் முன்னேறாதபடி இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவும், சிக்கனமாகவும் பந்துவீசி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர்.

பட மூலாதாரம், Reuters
இளம் சுழல் பந்துவீச்சாளர் சாஹல் மிக சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இது இந்தியாவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.
இதே போல், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் சிறப்பாக பந்துவீசினர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












