20 செயற்கைக் கோள்களுடன் ராக்கெட்டை இந்தியா ஏவியது
இந்தியாவின் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டாவிலிருக்கும் சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, இன்று காலை சரியாக 9.26 மணிக்கு, 20 செயற்கைக்கோள்களைத் தாங்கிய பிஎஸ்எல்வி - சி 34 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

பட மூலாதாரம்,
நாட்டின் விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கு இது ஒரு மைல் கல்.
இந்த ராக்கெட்டில் ஏழுநூறு கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள் முதல் சிறிய அளவில், ஒன்றரை கிலோ எடை வரையிலான செயற்கைக்கோள்கள் வரை செலுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் கார்டோசாட் 2, சத்யபாமா பொறியியல் கல்லூரி, புனே பொறியியல் கல்லூரி ஆகியவை அனுப்பும் 3 செயற்கைக்கோள்களும், கனடா, அமெரிக்கா மற்றும் இந்தோனீஷியா ஆகிய நாடுகளை சேர்ந்த 17 செயற்கைக்கோள்களும் இதில் செலுத்தப்பட்டுள்ளன.

பட மூலாதாரம்,
புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த ராக்கெட்டில் பொறுத்தப்பட்டிருந்த செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன
செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பிறகு நான்காவது கட்டத்தில், ராக்கெட் மீண்டும் ஐந்து வினாடிகளுக்கு இயங்கச்செய்யப்படும். பிறகு 50 நிமிடங்களுக்கு அணைந்திருக்கும் ராக்கெட் மீண்டும் ஐந்து விநாடிகளுக்கு இயங்கச் செய்யப்படும்.
இந்த சிக்கலான வழிமுறையின் மூலம், வெவ்வேறு செயற்கைக்கோள்களை வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்த முடியும்.
இந்த செயற்கைக்கோள்கள், புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை கண்காணிப்பது, வனப் பகுதியில் ஏற்படும் தீயை கண்டறிவது என பல பணிகளை மேற்கொள்ளும்.
மூன்று வருடங்களுக்கு முன்னர், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 29 செயற்கைக்கோள்களை ஒரே சமயத்தில் விண்ணில் ஏவியது என்பது குறிப்பிடத்தக்கது.












