அண்ணா நூற்றாண்டு நூலகம்: உயர் நீதிமன்றம் கெடு
சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் முறையாகப் பராமரிக்கப்படுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை தமிழக அரசுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், BBC World Service
இந்த வழக்கில், தமிழக அரசுக்கு கடுமையான கண்டனங்களும் வெளியிடப்பட்டன.
நூலகப் பராமரிப்பு பணி போன்ற விஷயங்களில் அக்கறை காட்ட தயங்கும் அரசாங்கம், தேவைப்படும் சில சந்தர்ப்பங்களில் மட்டும் உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என நீதிபதிகள் கண்டனம் வெளியிட்டனர்.
தமது உத்தரவுகளை செய்லபடுத்தியது தொடர்பான ஆதாரங்களையும், தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதியன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, அந்த நூலகத்தின் உண்மை நிலையை அறிய வழக்கறிஞர்கள் குழு ஒன்றுக்கு உத்தரவிட்டிருந்தது.
அவர்களின் அறிக்கையை பெற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு இன்றைய உத்தரவை வெளியிட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை கோட்டூர்புரம் பகுதியில் "அண்ணா நூற்றாண்டு நூலகம்" கட்டப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்த நூலகம் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது என்கிற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்தது.
அந்த நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவது என்ற அதிமுக அரசின் முந்தைய முடிவிற்கு ஏற்கெனவே உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.












